சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் தகுதிச்சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.
இதையொட்டி, இன்று காலை பந்தயப் பாதையை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பினர் (FIA) இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது ஃபார்முலா 4 கார்களை பந்தயப் பாதையில் இயக்கி சோதனை நடைபெற்றது. இன்றைய பந்தயம், மதியம் 2.30 மணியிலிருந்து தொடங்கி இரவு சுமார் 11 மணிவரை நடைபெறுகிறது.
முன்னதாக, ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை நடத்துவதற்கு சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) சான்றிதழைப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, சர்வதேச ஆட்டேமொபைல் கூட்டமைப்பின் முறையான அனுமதி கிடைத்தது. அதன் பிறகு சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் முறைப்படி தொடங்கியது. எனினும், அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மழை காரணமாக, சனிக்கிழமை இந்தப் பந்தயத்தின் தகுதிச்சுற்றுப் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அமைச்சர் உதயநிதி கூறியது என்ன?
நேற்றைய தினம் பயிற்சிப் போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. இரவு ஏழு மணிக்குப் பிறகே பயிற்சிப் போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டிகளை, தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி தொடங்கியது குறித்து அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், “அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி – முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியைக் காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள், கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவுநேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத் தரப்போவது உறுதி எனவும் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
சென்னை வீரரின் மகிழ்ச்சி
இரவு நேரத்தில், தெருக்களில் இந்தப் போட்டி நடைபெறுவதையொட்டி, இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனப் பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சேத்தன் கொரடா எனும் கார் பந்தய வீரர் ஊடகத்திடம் பேசுகையில், “இத்தகைய கார் பந்தயம் நிச்சயம் தேவை. நிறைய கார் பந்தய வீரர்கள் வர வேண்டும்.
எல்லோராலும் இருங்காட்டுகோட்டை அல்லது கோயம்புத்தூர் சென்று இத்தகைய போட்டிகளைப் பார்க்க முடியாது. இந்தியாவில் இத்தகைய போட்டிகளை நடத்துவதற்கான எல்லா வசதிகளும் உண்டு.
அதில், இத்தகைய கார் பந்தயப் போட்டிகளுக்கான தலைநகராக சென்னை உள்ளது. நாம் நடத்தவில்லை என்றால் வேறு யார் நடத்தப் போகிறார்?” எனக் கூறினார்.
இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் இத்தகைய போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.
மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொள்ளக்கூடாது. எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும்.
கால்பந்து, டென்னிஸ்கூட நான் விளையாடியிருக்கிறேன். எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மனத்தடை இருக்கக் கூடாது. முதன்முறையாக பந்தய காரில் அமர்ந்தபோது எனக்கு சௌகரியமாக இருந்தது. அதிலிருந்து இறங்கவே மனம் வரவில்லை. இந்தப் போட்டியில் என்னுடைய 100 சதவிகித உழைப்பைத் தருவேன்” என்று தெரிவித்தார்.
தெருக்களில் அமைந்த பந்தயப் பாதையில் கார் ஓட்டுவது தனக்கு இதுவே முதன்முறை என அவர் தெரிவித்தார்.
இந்தப் போட்டியால் வருங்காலத்தில் பல வீரர்கள் கார் பந்தயத்தில் ஈடுபட ஊக்கம் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பந்தயம் குறித்த தகவல்கள்
இந்தப் பந்தயம் 3.5 கி.மீ தூரம் நடைபெறும், 19 திருப்பங்களைக் கொண்டதாக உள்ளது. தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை இந்த பந்தயப் பாதை நீண்டுள்ளது. தீவுத்திடலில் தொடங்கி அங்கேயே போட்டி நிறைவடையும் வகையில் இந்த பந்தயப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா மட்டுமல்லாது பிரிட்டன், செக் குடியரசு, ஆஸ்திரேலியா, மலேசியா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் போட்டியில் காரின் வேகம் மணிக்கு 240 கி.மீ வரையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, 1600 சிசி திறன் கொண்ட இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டு போட்டிகளுக்கும் தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டின் விலை 1,699 ரூபாயில் இருந்து 16,999 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தீவுத்திடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொது மக்களின் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பயணிக்கவும் இவ்விரு நாட்களும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
கார் பந்தயங்களில் ஃபார்முலா 1 ரேஸ் என்பது சர்வதேச அளவில் நடைபெறும். இதை ஃபார்முலா 2, 3, 4 எனப் பிரித்து வைத்துள்ளனர். ஃபார்முலா 2 கார் பந்தயங்களில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.