• Wed. Dec 4th, 2024

24×7 Live News

Apdin News

ஃபெஞ்சல் புயல் அப்டேட்: இரு தினங்களுக்கு எங்கெல்லாம் ரெட் அலர்ட்? | Cyclone FENGAL Update: Red alert for two days where in tamil nadu

Byadmin

Nov 30, 2024


சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவ்விரு நாட்களிலுமே புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று (சனிக்கிழமை) மாலை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எங்கெல்லாம் ரெட் அலர்ட்? – இதன் காரணமாக, இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை (டிச.1) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை: மேலும், இன்று (நவ.30) ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (டிச.1) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



By admin