புதுடில்லி, : கல்வி நிறுவனங்களில் சேருவது, ஓட்டுனர் உரிமம் பெறுவது, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் விண்ணப்பம், திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற, பிறப்பு சான்றிதழை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான சட்டம், அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த 1969ல் இயற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 54 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட திருத்த மசோதா, இரு சபைகளிலும் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவை சட்டமாக இயற்ற, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆக., 11ல் ஒப்புதல் அளித்தார்.
மக்கள் தொகை
இந்த சட்ட திருத்தம் அக்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை, பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்ஜெய் குமார் நாராயண் நேற்று அறிவித்தார்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் அமலுக்கு வரும் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்க, பிறப்பு சான்றிதழை ஒற்றை ஆவணமாகப் பயன்படுத்த சட்டம் இடமளிக்கிறது.
கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, ஓட்டுனர் உரிமம் பெறுவது, வாக்காளர் பட்டியல், திருமண பதிவு, மத்திய – மாநில அரசு அல்லது உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேர பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த முடியும். மேலும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை, மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகள், அரசின் சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.
அதாவது, மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், சொத்து பதிவு உள்ளிட்டவற்றிற்கு அரசுத் துறைகள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆவணமாகப் பயன்படுத்த சட்டம் இடமளிக்கிறது. தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப் பட்ட குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், வாடகைத்தாய் குழந்தைகள்.
ஒற்றைத்தாய் பராமரிப்பில் உள்ள குழந்தைகள் அல்லது திருமணமாகாத தாய்க்கு பிறந்த குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் செயல்முறைகள் இந்த சட்ட திருத்தத்தால் எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
அபராதம்
மேலும், அனைத்து மருத்துவமனைகளும் இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை கட்டாயமாக்குவதற்கு இந்த சட்டம் வழி செய்கிறது.இறப்புக்கான காரணங்கள் அடங்கிய நகலை உறவினர்களிடம் வழங்கவும், கொரோனா போன்ற பேரிடர்களில் இறந்தால், அவர்களின் இறப்புகளை விரைவாக பதிவு செய்ய சிறப்பு துணை பதிவாளர்களை நியமிக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.
பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்களிடம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொது மக்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற முடியும். சில விஷயங்களுக்கு அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டத்தில், மக்களுக்கு பயன் தரும் இது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்