சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, இத்தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று இதை அவசர வழக்காக உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.
பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை பழனிசாமி தரப்பினர் தொடங்கினர். இந்த நிலையில், மார்ச் 26-ம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று கட்சி அலுவலகத்துக்கு வந்தார். இதையொட்டி, கட்சி அலுவலகம் மற்றும் அவ்வை சண்முகம் சாலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். நிர்வாகிகள் பலரும் பூங்கொத்து கொடுத்து பழனிசாமியை வரவேற்றனர். கட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பிறகு, கட்சி அலுவலகத்துக்குள் அவர் சென்றார்.
வேட்புமனுவுக்கான கட்டணம் ரூ.25 ஆயிரத்தை கட்சி நிர்வாகிகள் பலர் கூட்டாக வழங்க, வேட்புமனுவை பழனிசாமி பெற்றுக் கொண்டார். பின்னர், அதை பூர்த்தி செய்து, தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வழங்கினார்.
பிறகு, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியபோது, ‘‘ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமும் ஒற்றை தலைமைதான். அதன் அடிப்படையில், கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சியோடுதான் கூட்டணி அமைக்கப்படும். ஓபிஎஸ்ஸை சசிகலாவுக்கு அறிமுகம் செய்தவர் டிடிவி தினகரன். அதனால், தனது அரசியல் குருவான சசிகலா, தினகரனை ஓபிஎஸ் சந்திப்பதில் ஆச்சரியம் இல்லை’’ என்றார்.
முதல் நாளான நேற்று பழனிசாமி உட்பட 38 பேர் தலா ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றனர். 38 பேரும் பழனிசாமி பெயரிலேயே விருப்ப மனுவை பெற்றுக் கொண்டனர். அவரை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிகிறது. மார்ச் 27-ம் தேதி காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஓபிஎஸ் தரப்பு வழக்கு: இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும் ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ்பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். இது ஏற்கெனவே நிலுவையில் உள்ளது.
இதேபோல, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த 3 வழக்குகளையும் விசாரித்த தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, இந்த வழக்கில் பழனிசாமி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைகலைத்துவிட்டு இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்கு, நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று அவசர முறையீடு செய்யப்பட்டது.
வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி, பி.ராஜலட்சுமி ஆகியோர் இதுதொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் முறையிட்டனர். இதை ஏற்ற அவர், அவசர வழக்காக இன்று விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன் பேரில், விடுமுறை நாளான இன்று, நீதிபதி கே.குமரேஷ்பாபு இந்த வழக்கை விசாரிக்கிறார்.
தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அதிமுகவின் உச்சபட்ச பதவி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே தேர்தல் ஆணைய ஆவணங்களில் உள்ளது. இந்த 2 பதவிகளும்தான் கட்சியின் அனைத்து நிர்வாகத்தையும் நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டது என்று கட்சி விதிகளில் உள்ளது. இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, கட்சியின் உச்சபட்ச பதவியில் மாற்றம் குறித்து ஏதேனும் பரிந்துரை வரப்பெற்றால், மேற்கண்ட உண்மைகளை கருத்தில் கொண்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.