வெஸ்ட் நைல் வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவி வருகிறது. இந்தக் கொடிய நோய் பல ஆண்டுகளாக உள்ளது, ஆனால் இன்னும் இதற்கான சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகின் முன்னணி எச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக அறியப்படும் அந்தோணி ஃபௌசி, கோவிட்-19 தொற்றுநோய் காலக்கட்டத்தில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளின் முகமாக இருந்தார். அவரின் பங்களிப்பு பலரால் பாராட்டப்பட்டது. அவர் அண்மையில் ஒரு வித்தியாசமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 83 வயதான அந்தோணி ஃபௌசிக்கு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காய்ச்சல், குளிர் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டது. வெஸ்ட் நைல் வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ். இது 1930களில் உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும், அந்தோணிக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று ஆப்பிரிக்கா மூலம் பரவவில்லை. அவரின் வீட்டுத் தோட்டத்தில் கொசுக்கடியால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. கொசுக்களால் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அமெரிக்காவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் வெஸ்ட் நைல் வைரஸால் 2,000 அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஆபத்தான நரம்பியல் நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
ஜார்ஜியாவின் அட்லான்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் நல மருத்துவப் பிரிவின் பேராசிரியரும், 20 ஆண்டுகளாக வெஸ்ட் நைல் வைரஸை ஆய்வு செய்பவருமான கிறிஸ்டி முர்ரே கூறுகையில், “இந்த வைரஸ் தொற்றால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படக்கூடும். ஒரு கொசு கடித்தால்கூட தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், இளைஞர்களும் வெஸ்ட் நைல் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்,” என்று தெரிவித்தார்.
கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில், நியூயார்க் நகர குயின்ஸ் நகரத்தில் உள்ள தொற்று நோய்களுக்கான மருத்துவர் ஒருவர், வைரஸ் தொற்றால் ஏற்படும் மூளை அழற்சி நோயை ( viral encephalitis) கண்டறிந்தார். அதனால் இருவர் பாதிக்கப்பட்டிருப்பதை நகரின் சுகாதாரம் மற்றும் மனநல சுகாதாரத் துறைக்குத் தெரியப்படுத்தினார். அருகிலுள்ள மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து உடனடி விசாரணை தொடங்கப்பட்டது.
ஒரு மதிப்பீட்டின்படி, நகரத்தில் சுமார் 8,200 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். வெஸ்ட் நைல் வைரஸ் பரவல், மேற்கு அரைக்கோளத்தில் கண்டறியப்பட்டது அதுவே முதல்முறை.
இந்த வைரஸ் எப்படி பரவுகிறது?
பல ஆண்டுகளாக ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளில் பரவிய இந்த வைரஸ் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தது என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்தது. ஆராய்ச்சிகளின்படி, இந்த வைரஸை பரப்பும் முக்கிய `கேரியராக’ பறவைகள் உள்ளன. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்குப் பரவுகிறது. அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.1999இல் வைரஸ் பரவல் ஏற்பட்டதில் இருந்து, அமெரிக்காவில் 59,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 2,900க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், சில மதிப்பீடுகளின்படி, இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம். இனி வரும் காலங்களில், காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் அடிக்கடி ஏற்படும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.
சூடான வெப்பநிலை கொசுக்களின் வளர்ச்சி மற்றும் கொசுக்களுக்குள் வைரஸ் அடைகாக்கப்படும் வேகத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
வெஸ்ட் நைல் வைரஸ் ஸ்பெயினிலும் அதிகமாகப் பரவி வருகிறது. அங்கு 2020இல் ஓர் அசாதாரண பரவல் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கு நோய்த்தொற்றின் பரவல் நீடித்த தாக்கத்தைக் கொண்டுள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பாதிக்கப்படுவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாததால் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது கடினம். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவருக்கு மட்டுமே லேசான அறிகுறிகள் இருக்கும்.
சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கிய 150 பேரில் ஒருவருக்கு மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மூளையில் வீக்கம் ஏற்பட்டு அபாயகரமான பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
“உயர் ரத்த அழுத்தம் இருக்கையில், மூளையிலும் அழுத்தம் அதிகரித்து, ரத்த-மூளை தடுப்பு சவ்வை (blood brain barrier) வைரஸ் எளிதாகக் கடக்க அனுமதிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் கிறிஸ்டி முர்ரே.
வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பல ஆண்டுகளாக கிறிஸ்டி முர்ரே கண்காணித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை, வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் அழற்சியானது இறுதியில் மூளையில் கடுமையான சிதைவு அல்லது சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களின் ஸ்கேன் முடிவுகளைப் பார்க்கும்போது மூளையில் காயங்கள் இருப்பது போன்று வீக்கம் இருப்பதைக் காட்டுகின்றன.
அவர் கூறுகையில், “கடுமையான நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் இறக்கின்றனர், 70-80 சதவீதம் பேர் நீண்டகால நரம்பியல் பாதிப்புகளை அனுபவிக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களும் முழு ஆரோக்கியத்தோடு இருப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. அவர்களின் நிலைமை மேலும் மோசமாகலாம். குணமடைந்த பின்னரும் நோய்த்தொற்றின் தாக்கம் இருக்கும். மனச்சோர்வு, ஆளுமை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்” என்றார்.
இதுபோன்று ஆபாயகரமான பாதிப்புகள் ஏற்படும் நிலையில் வெஸ்ட் நைல் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய ஒரு பிரத்யேக சிகிச்சையோ இல்லை.
“இது உண்மையில் ஒரு புறக்கணிக்கப்பட்ட நோயாகிவிட்டது,” என்கிறார் கிறிஸ்டி முர்ரே.
இந்த ஆண்டு வெஸ்ட் நைல் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் என்னைத் தொடர்புகொண்டு, தாங்கள் என்ன செய்ய வேண்டும், இதற்கு என்ன தீர்வு எனக் கேட்கின்றனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நோய்த் தொற்றுக்கான பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. குடும்பத்தினரின் தீவிர பராமரிப்பு முக்கியம் என்று பதில் சொல்ல வேண்டியுள்ளது. இப்படிக் கூறுவது உண்மையில் எனக்கு வலிக்கிறது” என்றார்.
வெஸ்ட் நைல் நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் ஒரு மிகப்பெரிய முரண்பாடு என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளில் குதிரைகளுக்கு மட்டுமே பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004 மற்றும் 2016க்கு இடையில், மனிதர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் தொடர்பாக ஒன்பது சோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றில் இரண்டு பிரெஞ்சு மருந்து நிறுவனமான சனோஃபியால் (Sanofi) நடத்தப்பட்டன. மீதமுள்ள தடுப்பூசி சோதனைகள் பயோடெக் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அல்லது பல்வேறு அமெரிக்க அரசாங்க நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டன.
பரிசோதிக்கப்பட்ட தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிய போதிலும், சோதனைகள் எதுவும் அதன் மூன்றாம் கட்டத்தை எட்டவில்லை. மூன்றாம் கட்டத்தில் தான் ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்படும், அதன் சிகிச்சை பலனளிக்கிறதா என்று சோதிக்கப்படும்.
தடுப்பூசி சோதனைகள் சந்திக்கும் பிரச்னை
கொலராடோவின் ஃபோர்ட் காலின்ஸ் நகரிலுள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் (சிடிசி) வெக்டார் மூலம் பரவும் நோய்கள் பிரிவின் மருத்துவ அதிகாரியான கரோலின் கோல்டின் கூற்றுப்படி, வெஸ்ட் நைல் பரவலின் கணிக்க முடியாத தன்மை ஒரு மிகப்பெரிய தடையாகும். ஏனெனில் வைரஸ் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பரவும்போது மட்டுமே தடுப்பூசி வேலை செய்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.”
“வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று ஒரு சிலரை மட்டும் பாதித்த நேரத்தில் சில சோதனைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 2012இல் தொற்றுநோய்ப் பரவல் அதிகரித்தது. டெக்சாஸில் மட்டும் 2,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 800 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்” என்கிறார் கிறிஸ்டி முர்ரே. எனவே சோதனைக்காக நாங்கள் சில ஆண்டுகள் காத்திருந்திருந்தால், தேவையான அனைத்து பங்கேற்பாளர்களையும் நாங்கள் பெற்றிருப்போம் என்கிறார்.
இந்தத் தடுப்பூசியின் செலவீனங்கள் பற்றிய ஒரு பெரிய ஆய்வு 2006இல் நடத்தப்பட்டது. வெஸ்ட் நைல் தடுப்பூசி திட்டத்திற்கு சுகாதார அமைப்பு பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டது.
நிச்சயமற்ற வருமானம், நிதி அதாயம் இல்லாத திட்டம் என்பதால் மருந்து நிறுவனங்கள் இந்தத் தடுப்பூசி தயாரிப்பில் இறங்கத் தயங்குகின்றனர் என்று கரோலின் கோல்ட் நம்புகிறார்.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் பல சாத்தியமான மாற்று வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில விஞ்ஞானிகள், வைரஸால் அதிக ஆபத்தில் இருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஒரு பிரத்யேக தடுப்பூசி திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரம் கரோலின் கோல்ட், வைரஸை பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகளை முன்வைத்து ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
வெஸ்ட் நைல் வைரஸால் ஏற்பட்ட நரம்பியல் பிரச்னைகளின் நீண்டகால விளைவுகள் பற்றி அதிகரித்து வரும் கவலைகள், தடுப்பூசியின் தேவையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றக்கூடும் என்றும் கரோலின் கோல்ட் நம்புகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெஸ்ட் நைல் வைரஸ் நோயாளிகளுக்குச் செலவிட வேண்டிய, மொத்த பொருளாதாரச் சுமை $5.6 மில்லியனைத் தாண்டும் என்றும், ஒரு நோயாளியின் குறுகிய கால மற்றும் நீண்ட கால செலவுகள் $700,000ஐ தாண்டும் என்றும் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
“குறிப்பிட்ட புவியியல் இடங்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள சமூகப் பிரிவினருக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டால், தடுப்பூசிகள் அதிக செலவீனங்களை ஏற்படுத்தாது” என்கிறார் கரோலின் கோல்ட்.
மேலும், “உற்பத்தியாளர் ஒருவரின் பார்வையில், விற்பனையை முன்னறிவிக்கும் போது வெஸ்ட் நைல் வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்தான சூழலில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்வது முக்கியம்,” என்று அவர் கூறுகிறார்.
விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
தொற்று நோய்களுக்கான சர்வதேச சங்கத்தின் தலைவர் பால் தம்பியா, வைரஸால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை மற்றும் நரம்பியல் செயலிழப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, வைரஸ் தொற்றுக்குத் தீர்வு காண முடியாத இயலாமையை “கற்பனையின் பற்றாக்குறை” என்று அழைக்கிறார்.
“இதற்கு அமெரிக்காவில் ஒரு பெரியளவிலான மூன்றாம் கட்ட சோதனை (phase 3 trial) தேவைப்படும் என்று அனைவரும் கருதுகின்றனர். வருடத்தில் இரண்டரை மாதங்கள் மட்டுமே தோன்றும் ஒரு நோய்க்கு இவ்வாறு சோதனை செய்வது கடினம்,” என்று அவர் கூறுகிறார். இது கணிக்க முடியாத நோய்த்தொற்று. ஏனென்றால் சில ஆண்டுகளில் அதன் பரவல் அதிகமாக இருக்கும், சில ஆண்டுகளில் குறைவாக இருக்கும்.
அதற்குப் பதிலாக தம்பியா நூற்றுக்கணக்கான வெவ்வேறு சோதனை தளங்களைக் கொண்ட ஒரு பெரிய சர்வதேச சோதனையை முன்மொழிகிறார். அமெரிக்கா மட்டுமின்றி ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் வைரஸ் பரவுகிறது. எனவே இது தேவையான தகவல்களைச் சேகரிப்பதற்கான மிகவும் பயனுள்ள வழி.
இதுபோன்ற சோதனைகளை நடத்துவதற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும் என்றாலும், அரசு-தனியார் கூட்டாண்மை, பாதிக்கப்பட்ட நாடுகளின் பல்வேறு அரசுகள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான மருந்து நிறுவனங்களின் வளங்களைத் திரட்டுதல் ஆகியவை உதவக்கூடும் என்று அவர் கூறுகிறார்.
“இதைச் செய்வதற்கு சில சாத்தியமான வழிகள் உள்ளன. அதைச் செய்ய விருப்பம் இருந்தால் போதும்” என்று அவர் கூறுகிறார்.
வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றின் விளைவாகக் கடுமையான உபாதைகளை அனுபவிக்கும் மக்களுக்குப் பயனுள்ள சிகிச்சைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது. இந்தச் சூழலில் `மோனோக்ளோனல் ஆன்டிபாடிஸ்’ (monoclonal antibodies) எனப்படும் வைரஸுக்கு எதிராகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட நோயெதிர் பொருள்களின் (antibodies) அடிப்படையில் சில மருந்துகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்தச் சோதனைகள் முன்னேற்றம் அடையவில்லை என்று முர்ரே கூறுகிறார்.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அதன் முறையான மருத்துவப் பரிசோதனைகளின்போது எதிர்கொண்ட தடைகளைப் போலவே மருந்து உற்பத்தியாளர்களும் பிரச்னைகளை எதிர்கொண்டனர்.
வைரஸை அழிப்பது மட்டுமல்லாமல், பல நரம்பியல் சிக்கல்களை ஏற்படுத்தும் உள்வீக்கத்தைக் குறைக்க உதவும் ஒரு மருந்தின் அவசரத் தேவை இருப்பதாக முர்ரே நம்புகிறார். சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் மூளையின் நரம்பு செல்களுக்குள் ஊடுருவவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது எளிதான செயல்முறை அல்ல.
அவர்கள் கூறுகையில், “வைரஸ் ரத்த-மூளை தடுப்பு சவ்வை (blood brain barrier) தாண்டி மூளைக்குள் குடியேறுகிறது. அதே இடத்தில் வீக்கம் மற்றும் சேதம் ஏற்படுகிறது. பிரச்னை என்னவென்றால், தற்போது சந்தையில் கிடைக்கும் பல வைரஸ் தடுப்பு மருந்துகளால் மூளையை அடைய முடியாது. அதனால் அவை பயனுள்ளதாக இருப்பதில்லை.”
கோவிட்-19 தொற்றுநோய் சூழலில் இருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று தம்பியா நம்புகிறார். நிச்சயமாக, வேறு பல மாற்று சாத்தியங்கள் இருக்கலாம். SARS-CoV-2 வைரஸுக்கு எதிராக வைரஸ் தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கான உலகளாவிய போட்டி இருந்தபோதிலும், டெக்ஸாமெதாசோன் எனப்படும் மலிவான ஸ்டெராய்டு மிகவும் பயனுள்ள சிகிச்சைகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது. அதன் செயல்திறன் பிரிட்டனில் `Recovery trial’-இன் போது சோதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு சாத்தியமான சிகிச்சைகளை முறைகளைச் சோதித்தது.
எதிர்காலத்தில் ஸ்டெராய்டுகள் பயனளிக்குமா?
சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தொற்று நோய்களுக்கான மூத்த ஆலோசகராகப் பணிபுரிந்த தம்பியா மூளை அழற்சியால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மூளை வீக்கத்தைக் குறைக்கச் சரியான ஸ்டெராய்டை கண்டுபிடிப்பது பல நோயாளிகளை மீட்க உதவும் என்று அவர் நம்புகிறார்.
அவர் கூறுகையில், “வெஸ்ட் நைல் வைரஸ் ஒரு ஃபிளாவி வைரஸ் (flavivirus). தற்போது டெங்கு, ஜிகா அல்லது ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற ஃபிளாவி வைரஸ்களுக்கு அதிகாரப்பூர்வ வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. ஸ்டெராய்டுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”
வெஸ்ட் நைல் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பொருத்தமான மருந்தை உருவாக்கக் கூடுதல் தரவு தேவைப்படுகிறது. மேலும் இது Recovery trial போன்ற ஆய்வு நடவடிக்கைகளில் இருந்து முன்னேற்றம் அடையலாம் என்று தம்பியா கூறுகிறார்.
“நாங்கள் வெஸ்ட் நைல் வைரஸ் மூளையழற்சி நோயாளிகளை வைத்து பரிசோதனை செய்ய நினைக்கிறோம். சில ஸ்டெராய்டுகள், மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் உட்படப் பல்வேறு சிகிச்சைகளை முயற்சி செய்யலாம். இது நல்ல முடிவுகளைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்” என்று அவர் கூறுகிறார். இதைப் பற்றி ஏதாவது செய்ய விருப்பம் இருந்தால், பாதிக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களிடம் இருந்து போதுமான நிதி வழங்கப்பட வேண்டும்.
ஃபௌசிக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது, வெஸ்ட் நைல் வைரஸ் மீது கவனத்தைத் திருப்பியுள்ளது என்று முர்ரே மற்றும் தம்பியா நம்புகின்றனர். புறக்கணிக்கப்பட்ட இந்த நோய்க்கு அதிக நிதி ஒதுக்க கொள்கை வகுப்பாளர்களை வற்புறுத்துவதற்கு இது உதவும்.
“இந்த வைரஸ் ஒழியவில்லை. தொடர்ந்து சீற்றத்துடன் இருக்கும்” என்கிறார் முர்ரே. மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஃபௌசி போன்ற ஒருவர், இந்த வைரஸ் பற்றிப் பேசினால், அது பற்றிய ஆய்வுகளுக்கு அதிக நிதியுதவி கிடைக்க உதவும். தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மீது விஞ்ஞானிகள் கவனம் செலுத்தவும் இது உதவும். வெஸ்ட் நைல் வைரஸ் அமெரிக்காவில் முதன்முதலில் தோன்றி 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அதற்கு எதிராக எங்களிடம் எதுவுமில்லை.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு