ஆணவக் கொலைகளைத் தடுக்க திமுக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் – கி.வீரமணி வலியுறுத்தல்

ஆணவக் கொலைகளை நடத்திடுவோருக்குக் கடும் தண்டனை தரும் வகையில் திமுக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தோழர் ரவிக்குமார் எம்.பி., அவர்கள் நேற்று (10.6.2021) ஓர் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஜாதி மறுப்பு கலப்புத் திருமணங்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் நடைபெறும் நிலையில், அவர்களுக்குரிய பரிசுத் தொகையை ஒன்றிய அரசு 2500 வாழ்விணையர்களுக்குக்கூட வழங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அறவே வழங்காமல், ஜாதி ஒழிப்பை ஊக்கப்படுத்தாமல் ஓர் அரசு உள்ள நிலையே தொடர்கிறது.
 
‘எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு அளித்து வந்த பரிசுத் தொகை, ஊக்கங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அ.தி.மு.க. அரசு அறவே முடக்கிவிட்டது’’ என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியதோடு, அதை மாற்றி புதிய தி.மு.க. அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் ஜாதி மறுப்பு – ‘‘கலப்புத் திருமணங்களை’’ ஊக்குவித்து, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு லட்சியத்திற்கு உதவிடும் வகையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு செய்து தருவதும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தக் கருத்தை திராவிடர் கழகம் பல ஆண்டுகளாக, பல மாநாடுகளில் தீர்மானங்களாகவும் போட்டு, இதனை வலியுறுத்தி பல அறப்போராட்டங்களையும் கூட நடத்தியுள்ளது. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் இதனை வலியுறுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் தற்போதுள்ள இட ஒதுக்கீடுபடி,
 
1. O.C. (Open Competition) என்பது அனைத்து ஜாதியினரும் திறமை அடிப்படையில் போட்டியிடும் வாய்ப்பு.
2. S.C. ஷெட்யூல்டு காஸ்ட், S.T., பழங்குடியினர்
3. B.C., பிற்படுத்தப்பட்டோர்
4. M.B.C. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
5. முஸ்லிம்கள் – பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு
6. அருந்ததியர்கள் S.C. ஒதுக்கீடு
7. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியருக்குத் தனி ஒதுக்கீடு என்ற தற்காலிக ஏற்பாட்டின்படி – அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு.
 
இப்படி பல உள்ள நிலையில், கணக்குத் துவக்குவதுபோல், I.C. (Inter Caste) Quota- கலப்புத் திருமணங்களுக்கான இட ஒதுக்கீடு 5 சதவிகிதம் என்பதாக வேலைவாய்ப்பிலும், கல்வி வாய்ப்பிலும் தந்தால், அறவழியில், அமைதிப் புரட்சியாக ‘‘ஜாதி ஒழிப்புப் பணி’’ நடைபெற்று, நாடே சமத்துவபுரங்களாக மாறிட வாய்ப்பு ஏற்படக் கூடும்.
 
அதைவிட முக்கியம், ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களை ஆணவக் கொலையாளிகளிடமிருந்து காப்பாற்றிட காவல் துறையில் ஒரு தனிப் பிரிவே ‘க்யூ பிரான்ஞ்ச்‘ போல அமைத்து, நுண்ணறிவுப் பிரிவினர் அக்குடும்பத்தின் உறவு நிலைபற்றிய தெளிவான கண்காணிப்பையும் நடத்திட்டால், பல்லாயிரக்கணக்கான ஆண்டு சமூகத்தின் – நாட்டின் கறைபடிந்த அவலமும் வெகுவாக மாறிடும் நிலையும் ஏற்படும்.
 
கூலிப்படைகளை வைத்து ஆணவக் கொலைகளை நடத்திடுவோருக்குக் கடும் தண்டனை தரும் வகையில் தனிச் சட்டங்களையும் இயற்றிடுதலை தி.மு.க. அரசு தனது லட்சிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆக்கி, தக்க நேரத்தில் செய்து முடிக்க முன்வரவேண்டும்.
 
தி.மு.க. ஆட்சியின்மூலமே, அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் புதிய சாதனை வரலாறு நிகழ்த்தப்படவேண்டும் என்பதை ஒரு முக்கிய வேண்டுகோளாக ஜாதி மறுப்புக்காக சிறைத் தண்டனை, உயிர்த் தியாகம், வாழ்க்கை வதிவுகள் முதலியவற்றை ஏற்றுக்கொண்ட லட்சக்கணக்கானவர்கள் சார்பில் இதனை தி.மு.க. அரசு ஆழ்ந்த பரிசீலனைக்கு முன்வைக்கிறோம்.”
 
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM