”இந்த போலீஸ்காரங்க நிலைமையை நினைச்சா பாவமா தான் இருக்கு வே…” என்றபடியே, இஞ்சி டீயை பருகினார் அண்ணாச்சி.
”என்ன ஓய், அவா மேல திடீர் கரிசனம்…” எனக் கேட்டார், குப்பண்ணா.
”தமிழகத்துல, கான்ஸ்டபிள்களுக்கு வார விடுமுறை அளிக்கிற நடைமுறை, ஏற்கனவே அமல்ல இருக்கு… இப்ப, எஸ்.ஐ.,க்கள், சிறப்பு, எஸ்.ஐ.,க்களுக்கும், 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்க, போன ஆகஸ்ட் மாசம் அரசாணை போட்டாவ வே…
”ஆர்டர் வந்து ஆறு மாசம் ஆயிட்டு… ஆனா, இன்னும் வார விடுமுறை மட்டும் தர மாட்டேங்காவ… குடும்பத்தோட நேரம் செலவிட முடியாம, எஸ்.ஐ.,க்கள் மனம் நொந்து போய் கிடக்காவ வே…” என முடித்தார், அண்ணாச்சி.
”விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி – அழகிரி சந்திப்புக்கு அப்பறமா, மதுரை தி.மு.க.,வுல ஒரே சலசலப்பா இருக்கு ஓய்…” என, அடுத்த தகவலை தட்டி விட்டார் குப்பண்ணா.
”அப்படியா… விபரமா சொல்லுங்க பா…” என்றார், அன்வர்பாய்.
![]() |
”மதுரையில, அழகிரியை அவரது ஆத்துக்கே போய் அமைச்சர் உதயநிதி சந்திச்சாரோல்லியோ… அப்ப, ‘உங்களை திரும்ப தி.மு.க.,வுல சேர்த்துப்பாளா’ன்னு பத்திரிகைக்காரா கேட்டதுக்கு, ‘அதை இவர்ட்ட கேட்கணும்’னு, பந்தை உதயநிதி பக்கம் அழகிரி தள்ளி விட்டார் ஓய்…
”அதுக்கு பதில் சொல்லாம, உதயநிதி குலுங்கி குலுங்கி ஒரு சிரிப்பு சிரிச்சாரோன்னோ… ‘அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்’னு புரியாம கட்சிக்காரா பாயை பிராண்டறா ஓய்…
”மதுரையில அரசியல் செய்ய, இனி அழகிரியின் ஆதரவு தேவைப்படுமோன்னு கட்சிக்காராளுக்கு, ‘டவுட்’ வந்துடுத்து… அதனால, எதுக்கும் இருக்கட்டும்னு அவரின் ஆதரவாளர்கள்கிட்ட நெருக்கம் காட்ட துவங்கிட்டா ஓய்…
”தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அழகிரி ஆதரவாளர்கள், போன் போட்டு நேரடியா அழகிரிகிட்டயே பேச வச்சுட்டாளாம்… இந்த சந்தோஷத்தோட, வர்ற, 30ம் தேதி அழகிரி பிறந்த நாள் வரது… அதை தடபுடலா கொண்டாட, ‘பிளான்’ பண்ணிண்டு இருக்கா ஓய்…” என்றார், குப்பண்ணா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்