வீடு மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாத் அடங்கிய அமர்வு கடுமையான கேள்விகளை எழுப்பியது. திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மாநில அரசுகளின் புல்டோசர் நடவடிக்கை குறித்து அந்த அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?”என்று நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
மேலும் “ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் அவரது வீட்டை இடிக்க முடியாது” என்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ’வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக எந்த கட்டடத்தையும் இடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார்.
“நீண்ட காலத்திற்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும் மாநிலத்தில் புல்டோசர் நடவடிக்கை என்று கூறப்படும் செயலானது தொழில்முறை குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு எதிரானது என்று உத்தரபிரதேச முதல்வர் அலுவலகத்தின் ட்வீட் கூறுகிறது. இந்த ட்வீட் 2022 ஜூன் மாதம் பதிவிடப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் ‘புல்டோசர் நடவடிக்கை’
உத்தரபிரதேசத்தில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது கிரிமினல் வழக்குகளில் வீட்டு உரிமையாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவரும்போது அவர்களின் வீடுகள் மீது இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜாவேத் முகமது – 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இஸ்லாமிய சமூகம் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஜாவேத் என்ற மனித உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு தொலைக்காட்சி சேனலில் நடந்த விவாதத்தில் முகமது நபி குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நூபுர் ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் (பிடிஏ) ஜாவேத் முகமதின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்தது. இந்த வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்தது.
ஆனால், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தால் இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜாவேத் முகமது அல்ல அவரது மனைவி பர்வீன் ஃபாத்திமா என்றும், இந்த வீடு அவரது பெற்றோரின் திருமண பரிசாக அவருக்கு வழங்கப்பட்டது என்றும் ஜாவேத் முகமதின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் யோகி அரசின் இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டனர்.
அதே நேரத்தில், ‘குற்றவாளிகள்/மாஃபியாக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை தொடரும்’ என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்திருந்தார்.
ஹாஜி ரஸா – உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஹாஜி ரஸாவின் நான்கு மாடி வணிக வளாகத்தின் மீது சில நாட்களுக்கு முன்பு புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோதிக்கு எதிராக ஹாஜி ரஸா ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிக் அகமது- உத்தரபிரதேசத்தின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான அதிக் அகமதின் நெருங்கிய உறவினர்கள் பலரின் வீடுகள் 2023 ஆம் ஆண்டு மாரச் மாதம், புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. முன்னதாக பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று பிரயாக்ராஜில் உமேஷ் பால் படுகொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலையில் முக்கிய சாட்சியாக உமேஷ் பால் இருந்தார்.
உமேஷ் பால் கொலைக்குப் பிறகு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ’மாநிலத்தில் மாஃபியாவை வேரறுப்பேன்’ என்று கூறியிருந்தார்.
2004 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை செய்யப்பட்ட பின்னர் 2007 ஆம் ஆண்டு மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அவரது அரசும் அதிக் அகமது மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது.
விகாஸ் துபே- 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விகாஸ் துபேயின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது. விகாஸ் துபே மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்வதற்காக கான்பூர் ஊரக மாவட்டத்தின் பிக்ரு கிராமத்திற்கு காவல் துறை சென்றது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 காவலர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து விகாஸ் துபே தலைமறைவானார். பின்னர் அவரது வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
“எனக்கு மற்ற மாநிலங்களைப் பற்றி தெரியாது. ஆனால் உத்திரபிரதேசத்தில் யோகியின் அரசு, மாஃபியாக்களின் பட்டியலை முதலில் தயாரித்தது. அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு எதிராக ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,” என்று உத்தரபிரதேசத்தின் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே கூறினார்.
“மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு ஏற்கனவே செய்து விட்டது. எனவே புல்டோசர் நடவடிக்கைக்கும், ஒரு நபர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உ.பி அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்,” என்றார் அவர்.
உத்திரபிரதேசத்தில் மட்டுமின்றி, சமீப ஆண்டுகளில் நாட்டின் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல புல்டோசர் நடவடிக்கைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
”2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் ஒரு ’தண்டனையாக’ புல்டோசர் மூலம் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன,” என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அவை – அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி.
இந்த வழக்குகள் பலவற்றில் சட்ட ரீதியான நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மற்ற மாநிலங்களிலும் ‘புல்டோசர் நடவடிக்கை’
பின்னர் புல்டோசர் நடவடிக்கை மத்தியப் பிரதேசத்திலும் நடந்தது. அதன்பிறகு, அப்போதைய மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை சமூக வலைதளங்களில் சிலர் ‘புல்டோசர் மாமா’ என்று அழைக்கத் தொடங்கினர்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பகிரங்கமாக, “கலெக்டர்கள், எஸ்பி, ஐஜி அனைவரும் கவனமாக கேளுங்கள்… இந்த புல்டோசர்கள் எப்போது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கேளுங்கள், சகோதரி மற்றும் மகளை தவறான கண்ணுடன் பார்க்கும் குண்டர்களை தாக்குவதற்கு இதை பயன்படுத்தவும்,” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளஹான் ஆட்சியில் தொடங்கிய இந்த நடவடிக்கை அவருக்கு அடுத்தும் தொடர்ந்தது.
ஹாஜி ஷாஜாத் அலி- மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போலீஸாரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க வந்த மக்கள் காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஹாஜி ஷாஜாத் அலி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹாஜி ஷாஜாத் வீட்டின் மீது புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி இம்ரான் பிரதாப்கரி சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்.
“இது நியாயமா? மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நிர்வாகம் ஹாஜி ஷாஜாத்தின் வீட்டை இடித்தது மட்டுமின்றி, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் புல்டோசர்கள் அடித்து நொறுக்கின,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், மத்திய பிரதேசத்தின் ரீவாவில், 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், பங்கஜ் திரிபாதி என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
பங்கஜ் திரிபாதி ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.
இது குறித்து அப்போதைய மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தனது ட்விட்டர் பதிவில், “மத்திய பிரதேச மண்ணில் பெண்களுக்கு எதிராக கொடுமை செய்பவர்கள் யாரும் தப்ப மாட்டார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
பங்கஜ் திரிபாதியின் வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் சட்ட விதிகள் மீறப்பட்டதா இல்லையா என்பது குறித்து இந்த ட்வீட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஜஹாங்கிர்புரி- தலைநகர் டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுமன் ஜெயந்தியையொட்டி வன்முறை ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, வன்முறை நடந்த இடத்தில் புல்டோசர்களைக் கொண்டு டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அடுத்த நாளே இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
முழு குடும்பத்தையும் தண்டிப்பது எப்படி சரி?
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ஃபிரண்ட்லைன் என்ற ஆங்கில நாளிதழின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கை பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவரது முழு குடும்பமும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இது போன்ற வழக்குகள் குறித்து கடந்த திங்கள்கிழமை கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மகனின் தவறுக்காக தந்தையின் வீட்டை இடிப்பது சரியல்ல என்றும் கூறியுள்ளது.
“சமீப காலமாக புல்டோசர் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது உண்மைதான். முன்பு போலீஸ் ஜப்தி நடவடிக்கைகளை செய்து வந்தது,” என்று ராஜேஷ் பாண்டே குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு