“நாங்கள் பணி செய்ய மட்டுமே போதிய நேரம் கிடைக்கிறது, இதில் காலிஸ்தானைப் பற்றி நாங்கள் எப்போது பேசுவோம்?, நான் மட்டும் அல்ல என்னை சுற்றியுள்ள அனைவரும் செக்கு மாடுகள் போல ஒரே வட்டத்தில் சிக்கியுள்ளோம்”, என்று கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் பிராம்டன் நகரில் வசிக்கும் 30 வயது டாக்ஸி டிரைவர் குர்ஜித் சிங் கூறினார்.
இந்தியா – கனடா இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவும் சூழலில் கனடாவில் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ள காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ள பிராம்டனில் நான் பேசியவர்களில் குர்ஜித் சிங்கும் ஒருவர்.
காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தில் பொது மக்களின் பங்கேற்பு குறித்து பேசிய குர்ஜித் சிங், “நாங்கள் ‘வார இறுதி சமூகம்’ என்ற சமூகத்தில் வாழ்கிறோம். எங்கள் பிறந்தநாள் மற்றும் பிற நிகழ்ச்சிகளும் வார இறுதி நாட்களில் மட்டுமே கொண்டாடப்படுகின்றன” என்றார் அவர்.
கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு உள்ளது?
கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரும், சீக்கிய தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சர்ரே நகரில் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய ஏஜென்டுகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அன்று முதல், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் விடத் தொடங்கியது. இரு நாடுகளும் தத்தமது தூதரக அதிகாரிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விலக்கிக் கொண்டனர்.
அக்டோபர் மூன்றாவது வாரத்தில், இரு நாட்டு உறவில் பதற்றம் உச்சத்தில் இருந்தது. அப்போது, ஒன்டாரியோ பகுதியை சேர்ந்த பல்வேறு மக்களிடம் நான் பேசினேன்,. அவர்களில் பெரும்பாலோர் கேமரா முன் பேச தயாராக இல்லை.
நான் பேசியவர்கள் எவரும் காலிஸ்தானுக்கு ஆதரவாக எந்த ஒரு செயல்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள்.
ஆம், அவர்கள் அனைவரும் குருத்வாராக்களுக்குச் செல்கிறார்கள், நாகர் கீர்த்தனைகள் பாடுகிறார்கள் மற்றும் விழாக்களில் பங்கேற்கிறார்கள், மற்றும் சொற்பொழிவுகளை கேட்கிறார்கள்.
கனடாவில் காலிஸ்தான் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி இந்தியாவில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போல நான் வேறு எங்கும் கண்டதில்லை.
பல குருத்வாராக்களுக்கு வெளியே காலிஸ்தான் கொடிகள் பறந்துகொண்டிருந்தன அல்லது லங்கார் மண்டபங்களில் 1980-களின் பஞ்சாபை சேர்ந்த ஆயுதக்குழுக்களின் போராளிகளின் படங்களை தவிர வேறில்லை.
நான் பஞ்சாபிலும் இதுபோன்ற படங்களை பார்த்திருக்கிறேன் மற்றும் கோஷங்களை கேட்டிருக்கிறேன்.
கனடாவில் உள்ள குருத்வாராக்களில் நடக்கும் நிகழ்வுகளில், 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகல் தக்த் சாஹிப் மீது இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் நீண்ட காலமாக சிறையில் இருந்த சீக்கிய கைதிகளை விடுவித்தல் போன்ற பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பப்பட்டன.
இந்த பிரச்னைகளின் தாக்கத்தை குருத்வாராக்களில் பாடப்படும் நாகர் கீர்த்தனைகளிலும், குருபர்வ் மற்றும் பிற பண்டிகைகளிலும் நாம் தெளிவாக பார்க்கலாம்.
காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் மிகவும் ஆவேசமான தொனியில் பேசுகிறார்கள் மற்றும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். அவர்களுக்கு பஞ்சாபில் இருப்பதைப் போலவே இங்கும் ஆதரவு கிடைக்கிறது.
காலிஸ்தான் இயக்கத்திற்கு பெரிய அளவில் ஆதரவோ அல்லது எதிர்ப்போ இல்லை என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.
குருத்வாராக்களில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் காலிஸ்தான் ஆதரவு மக்கள் மட்டுமே இருப்பார்கள், அவர்கள் அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள். இதனால் அவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறார்கள்.
இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” குருத்வாராக்கள் மூலம் பிரசாரம் செய்வதால், அதன் தனிப்பட்ட வாக்கெடுப்புகளில் பொதுமக்களின் பங்களிப்பை ஓரளவு பெறுகிறது.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்ய இந்தியா சதி செய்ததாக அந்த அமைப்பின் தலைவர்களும் அமெரிக்காவும் குற்றம் சாட்டினர். இதற்காக அமெரிக்க நீதித்துறை இந்திய குடிமகன் விகாஸ் யாதவ் மீது வழக்கு பதிவும் செய்தது.
பஞ்சாபில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிம்ரஞ்சித் சிங் மன் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரித்பால் சிங் ஆகியோர் காலிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.
காலிஸ்தான் பற்றிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள்
உண்மையில், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியபோது, அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்பாக கனடாவின் காலிஸ்தான் இயக்கமும் மற்றும் அதன் தலைவர்களும் இருந்தன.
இதற்கு முக்கிய காரணம், கனடாவில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்தியாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம் சாட்டியது.
கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் ஒன்டாரியோ பகுதியில், இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பிபிசி பேசியது.
இந்த உரையாடலில், கனடாவில் காலிஸ்தான் தலைவர்களின் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தோம்.
காலிஸ்தான் தலைவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? கனடா அரசியலில் அதன் தாக்கம் என்ன?
ஜஸ்டின் ட்ரூடோ போன்ற ஒரு தலைவர் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுடனான ராஜ்ஜீய உறவுகளை பணயம் வைத்து காலிஸ்தானை ஆதரிக்கும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு பெரிதா?
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு
கனடாவில் பிரிவினைவாத சீக்கிய இயக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்டாரியோ குருத்வாரா கமிட்டி என்பது அங்குள்ள 19 முக்கிய குருத்வாரா அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய கூட்டமைப்பாகும்.
கனடாவின் அரசியலில் காலிஸ்தான் இயக்கம் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் அமர்ஜித் சிங் மன்னிடம் கேட்டோம்.
“இந்திய அரசியல் அமைப்பு அல்லது ஊடகங்கள் காலிஸ்தானை ஒருசில மக்களை மட்டுமே கொண்ட அமைப்பு என்று சொன்னாலோ அல்லது ட்ரூடோ அரசாங்கம் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வாக்குகளை பெறவே இந்தியாவுடன் மோதுகிறது என்று சொன்னாலோ, அவர்களது முதல் கருத்தே பயனற்றதாகி விடுகிறது”, என்று அவர் கூறினார்.
இது குறித்து அமர்ஜித் சிங் மன் கூறுகையில், “கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒரு சிலரே இருந்தால், ட்ரூடோ ஏன் இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்? எங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக முடியும்”, என்றார்.
கனடா அரசியலில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு குறித்து பேசிய அவர், “எங்களுக்கு நிறைய செல்வாக்கு உள்ளது, முன்பு இருந்ததைவிட எங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது”, என்றார்.
“ஆனால் நாங்கள் எந்த ஒரு கட்சியையும் சார்ந்து இல்லை. ஜக்மீத் சிங்கின் NDP கட்சியுடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது. பொலிவாரின் கன்சர்வேடிவ் கட்சியுடனும் நாங்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறோம்”, என்று அவர் கூறினார்.
காலிஸ்தானிகளின் இயக்கத்தின் மறுபக்கம்
கனடாவில் காலிஸ்தான் இயக்கம் மிகவும் வலுவாக இருப்பதால்தான், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியா மீது ஜஸ்டின் ட்ரூடோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாரா?
இந்தக் கேள்விக்கு, காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய மற்றொரு தலைவரான பகத் சிங் பராட் புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்கிறார். அவர் பிராம்டனில் கார் சர்வீஸ் ஏஜென்சியை நடத்தி வருகிறார்.
“கனடாவில் 7.71 லட்சம் சீக்கிய மக்கள் உள்ளார்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம். அவர்களுள் 1 சதவீதம் மட்டுமே காலிஸ்தான் ஆதரவாளராக இருப்பார்கள் என்று இந்தியா நம்பினால், இவ்வளவு சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களுக்காக உலகின் மூன்றாவது பெரிய சக்தியான நாட்டுடன் ட்ரூடோ ஏன் மோதலில் ஈடுபடபோகிறார்?” என்று அவர் தெரிவித்தார்.
“கனடாவில் உள்ள அனைத்து காலிஸ்தான் ஆதரவாளர்களும் ட்ரூடோவுக்கு ஆதரவாக இல்லை. கனடாவில் NDP, கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளனர். சீக்கியர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவாளர்களாக கூட இருக்கின்றனர். லிபரல் கட்சியினரின் மத்தியில் கூட, அனைவரும் ட்ரூடோவுக்கு ஆதரவாக இல்லை”, என்று பகத் சிங் பராட் கூறுகிறார்.
“கனடா ஒரு ஜனநாயக நாடு. அங்கு சட்டத்தின் படிதான் ஆட்சி நடக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் போன்ற குடிமக்கள் சொந்த மண்ணில் கொல்லப்பட்டதை ஏற்க முடியவில்லை. குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு கனடாவுக்கு உள்ளது. அதைத்தான் அந்நாடு செய்து வருகிறது”. என்றார் அவர்.
“ட்ரூடோ அரசாங்கம் எந்தவொரு காலிஸ்தான் இயக்கத்தையும் ஆதரரிக்கவில்லை. ஒரே ஐக்கிய இந்தியா என்பதில் நம்பிக்கை வைத்திருப்பதாக சமீபத்தில் அவர் கூறினார். நான் ட்ரூடோவுக்கு ஆதரவாக பேசவில்லை. எனக்கும் அவர் மீது பல அதிருப்திகள் இருக்கலாம். ஆனால் அவர் கனடா குடிமக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்”, என்று பகத் சிங் பராட் கூறினார்.
எண்ணிக்கையை விட அரசியல் செல்வாக்கு முக்கியமா?
பால்ராஜ் தியோல் கனடாவில் பிறந்த பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் காலிஸ்தான் இயக்கத்தின் விமர்சகர் ஆவார்.
“உள்ளாட்சி, மாகாணம், கூட்டாட்சி அரசியலாக இருந்தாலும் சரி அல்லது உளவுத்துறை, சிவில் சர்வீஸ் மற்றும் குடியேற்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி, கனடாவில் காலிஸ்தான் இயக்கம் தனக்கென ஒரு வலுவான தளத்தை உருவாக்கியுள்ளது”, என்று பால்ராஜ் தியோல் குறிப்பிடுகிறார்.
“கடந்த சில ஆண்டுகளாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா அரசியலில் செல்வாக்கை பெற்றுள்ளனர். இதுவே தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் கசப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
அவர்கள் வெறும் ‘விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருப்பவர்கள்’ என்ற வாதத்தை விட, அவர்களது அரசியல் செல்வாக்கு மிகவும் முக்கியமானதாக பால்ராஜ் தியோல் கருதுகிறார்.
“சீக்கிய சமூகத்தின் மத்தியில் பிரசாரம் செய்வதன் மூலம் வாக்கு அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு காலிஸ்தானுக்கு செல்வாக்கு உள்ளது”, என்று அவர் கூறுகிறார்.
“1990களில் இருந்து லிபரல் கட்சியில், ஜான் கிறிஸ்டியன் முதல் ஜஸ்டின் ட்ரூடோ வரை, சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகளை கட்சித் தலைவர்களாக நிறுத்துவதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்”, என்று அவர் கூறுகிறார்.
“அதேபோல், ஜக்மீத் சிங்கை NDP கட்சித் தலைவராக்கியதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பங்காற்றியுள்ளனர். காலிஸ்தான் பிரகடனம் செய்ததன் மூலம் ஜக்மீத் சிங் அக்கட்சித் தலைவரானார், அப்போது சீக்கியர்கள் அதிகம் உள்ள பகுதிகளான பிராம்டன், மால்டன் மற்றும் சர்ரே போன்ற இடங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக அப்போது பல கருத்துகள் எழுந்தன”, என்று அவர் கூறினார்.
காலிஸ்தானுக்கு ஆதரவாக மிகச் சிறிய அளவிலே மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பால்ராஜ் தியோல் பேசுகையில், “வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் வைத்து எடைபோடுவது தவறானது. ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒரு வாக்காளர். அரசியல் செயல்பாடாக இருந்தாலும் சரி, சமூக சேவையாக இருந்தாலும் சரி, அனைத்திலும் காலிஸ்தான் முக்கியத்துவம் வகிக்கிறது”, என்றார்.
கனடாவில் சீக்கிய குருத்வாராக்கள் உள்ளிட்டவை கூட காலிஸ்தானிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பால்ராஜ் தியோல் கூறினார்.
“கனடாவின் முக்கிய தலைவர்கள் பைசாகி ஊர்வலம் மற்றும் நகர் கீர்த்தனைகள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போது, அவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களை ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் முகமாக பார்க்கிறார்கள்”, என்று அவர் கூறுகிறார்.
“காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். காலிஸ்தானை வெளிப்படையாக எதிர்க்கும் சீக்கியரைக் காண்பது அரிது, காலிஸ்தானுக்கு ஆதரவாக இல்லாதவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள்” என்று பால்ராஜ் தெளிவுபடுத்தினார்.
குற்றச்சாட்டுகள் குறித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தியாவில் வன்முறையைத் தூண்டியதற்காக கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்புகள் மீது இந்திய அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து அமர்ஜீத் சிங் மன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அப்படி எந்தவொரு அமைப்பைப் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை”, என்றார்.
ஜனநாயக வழிகளில் கனடா சட்டத்தின்படியே காலிஸ்தானுக்காக போராடுவதாக அவர் கூறுகிறார்.
நாகர் கீர்த்தனையில் காலிஸ்தான் ஆதரவாளர்களை பற்றி பாடுவது குறித்தும் இந்திரா காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் மூலம் மக்களின் உணர்வுகளைத் தூண்டுவது குறித்தும் பேசுகையில், “இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. அமெரிக்காவிலும் இதுபோல நடக்கிறது”, என்று அவர் தெரிவித்தார்.
“நாங்கள் எதையும் கற்பனையாக கூறவில்லை, உண்மையாக நடந்ததை கூறுகிறோம்”, இது எங்கள் வரலாறு, போராளிகள் எங்கள் ஹீரோக்கள்”, என்று அமர்ஜீத் சிங் மன் கூறுகிறார்.
இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பகத் சிங் பராட் நிராகரிக்கிறார். இந்திய அரசிடம் இதற்கான ஆதாரம் இருந்தால், அதை கனடா அரசிடம் ஒப்படைத்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் வர்மா தாயகம் திரும்பியதும், “26 பேரின் ஆவணங்களை இந்தியா கனடாவிடம் ஒப்படைத்துள்ளது, ஆனால் கனடா அதை கருத்தில் கொள்ளவில்லை”, என்று கனடா தொலைக்காட்சி சேனலான C-TV-க்கு கூறியிருந்தார்.
“இந்தியாவில் நடந்த வன்முறைக்கு மிகப்பெரிய உதாரணம் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கொலை. இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் தலைவர் கோல்டி ப்ரார் கனடாவில் உள்ளார்”, என்று பால்ராஜ் தியோல் கூறுகிறார்.
“ஒருபுறம் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் இங்கு குற்றங்களைச் செய்கிறது என்று கனடா சொல்லிக் கொண்டிருக்க, மறுபுறம் கோல்டி ப்ரார் மற்றும் பிறரை வைக்குமாறு இந்தியா கேட்கிறது. அவர்களை ஏன் இந்தியாவிடம் கனடா ஒப்படைக்கவில்லை” என்று பால்ராஜ் தியோல் கேள்வி எழுப்புகிறார்.
“ஒரு இயக்கம் என்று இருக்கும்போது, தங்களது சொந்த நலனுக்காக சிக்கலை ஏற்படுத்த சிலர் இருக்கிறார்கள்”, என்று காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்புபடுத்தப்படும் குற்றங்கள் பற்றி பால்ராஜ் தியோல் கூறுகிறார்
இதுபோன்ற பல கும்பல்கள் இன்னும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக அவர் நம்புகிறார்.
காலிஸ்தான் பற்றிய கனடாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு
கனடாவில் “சீக்கிய தீவிரவாதம்” பற்றிய இந்தியாவின் கவலை புதிது அல்ல, கனடா தரப்பு வாதமும் புதிதல்ல.
2012 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இந்தியா வந்த போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் “கனடாவில் இந்தியாவுக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகிறது” என்று கூறியதாக சிபிசி செய்திகள் கூறுகின்றன.
ஒரே இந்தியா என்பதை ஆதரித்தாலும் காலிஸ்தான் இயக்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க ஸ்டீபன் ஹார்பர் மறுத்துவிட்டார்.
2023 ஆம் ஆண்டு நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில், சீக்கிய தீவிரவாதம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் ஹார்பரின் நிலைப்பாட்டையே மீண்டும் முன்னிறுத்தினார்.
“வன்முறையை நிறுத்தவும், வெறுப்புகளுக்கு எதிராக செயல்படவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்று பிரதமர் ட்ரூடோ கூறினார்.
சிலரின் செயல்பாடுகளுக்காக ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் குற்றம் சொல்ல முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை விட கனடாவில் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் இவர்கள் காலிஸ்தான் பிரச்னையில் ஒருமனதாக இல்லை.
“இந்தியாவில் இருப்பவர்களுக்கு இங்கு உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு பற்றி சரியாக தெரியவில்லை. காலிஸ்தான் தலைவர்கள் பிராம்டனில் 2-4 தொகுதிகளில் செல்வாக்கு பெற்றிருக்கலாம், ஆனால் கனடா போன்ற ஒரு பெரிய நாட்டில் காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதன் மூலம் ட்ரூடோ தனது தோல்வியை தேர்தல் வெற்றியாக மாற்றுவது சாத்தியமில்லை.” என்று கனடாவில் 3 தசாப்தங்களாக வசிக்கும் பிரபல பஞ்சாபி வழக்கறிஞர் ஹர்மிந்தர் தில்லான் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.