இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போல உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்குகின்றன.
ஜூலை மாதத்தில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 37 டன்களாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
போலந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகள் தங்கத்தை வாங்குகின்றன.
இப்படி அதிகமாக தங்கம் கொள்முதல் செய்யப்படுவதற்கு நடுவே, சில நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கவும் செய்கின்றன.
ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-காஸா போர், மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி போல, உலகம் முழுவதும் பிரச்னைகள் அதிகரித்து கொண்டிருக்கும் நேரத்தில் உலக நாடுகளின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
எந்தெந்த நாடுகளில் தங்கம் வாங்குகின்றது?
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை), தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்ததாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதே காலகட்டத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), போலந்து நாட்டின் மத்திய வங்கி 18.68 டன்கள் தங்கத்தை வாங்கி முதல் இடத்தில் இருந்தது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 18.67 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளது. மேலும் துருக்கி 14 டன்களும், உஸ்பெகிஸ்தான் 7.46 டன்களும் மற்றும் செக் குடியரசு 5.91 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, இதே இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் 173.6 டன்கள் தங்கத்தை வாங்கிய நிலையில், இந்த ஆண்டு அது 183 டன்களாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), கஜகஸ்தான் 11.83 டன்கள் தங்கத்தையும் சிங்கப்பூர் 7.7 கிலோவும், ஜெர்மனி 780 கிலோ தங்கத்தை விற்றுள்ளன.
பல ஆண்டுகளாக உலக நாடுகளின் சொத்து இருப்புகளில் தங்கம் ஒரு முக்கிய அங்கமாக இன்று வரை இருந்து வருகிறது.
2023-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள், தங்கள் சொத்து இருப்புகளில் 1,037 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளன. 2022-ஆம் ஆண்டில், மத்திய வங்கிகள் 1,082 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளன. இது உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளைக் கொண்டு மத்திய வங்கிகள் தங்கத்தை ஒரு முக்கியமான சொத்து இருப்பாக பார்க்கின்றன என்பது தெரியவருகின்றது.
மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு நிலையான சொத்தாக இருக்கிறது. நிதி நெருக்கடி ஏற்படும் போது, தங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவுகிறது. ஒரு வகையில் சொத்து இருப்புக்களை பன்முகப்படுத்த உதவுகிறது. அமெரிக்க டாலருக்கு ‘ரிசர்வ் கரன்சி’ என்ற அந்தஸ்து இருக்கிறது. வணிகப் பரிவர்தனைக்காக அமெரிக்க டாலர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே உலகெங்கிலும் உள்ள பல வங்கிகளின் நோக்கமாக இருக்கிறது. இதனைச் செயல்படுத்தத் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கான காரணம் என்ன?
“அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. அமெரிக்கா வட்டி விகிதங்களை இன்னும் குறைத்தால், டாலரின் மதிப்பு குறையும் என்று மற்ற நாடுகள் நம்புகின்றன. அந்த நிலை வரும்வரை அவர்கள் தங்கத்தை நோக்கி தங்கள் முதலீட்டை செய்கின்றன”, என்று ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பொருட்கள் மற்றும் நாணயங்களுக்கான தலைமை அதிகாரியான அனுஜ் குப்தா கூறுகிறார்.
“அமெரிக்கப் பொருளாதாரம் கடனில் இயங்குவதால், வரும் காலத்தில் டாலர்களின் மதிப்பு இன்னும் குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது,” என்கிறார் அவர்.
“இந்தியாவும் தனது முதலீட்டைப் பன்முகப்படுத்துவதற்காக இது போலச் செய்கிறது. இந்தியா தனது வெளிநாட்டு இருப்பை அதிகரிக்க வேண்டும். டாலர்களுக்கு ஈடாகத் தங்கத்தை வாங்கினால், இந்தியாவால் அதிக நோட்டுகள் அச்சிட முடியும். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்,” என்கிறார் அனுஜ்.
இதைத் தவிர, உலகின் பல பகுதிகளுக்கு இடையே அரசியல் பதட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதில் மேலும் பிரச்னைகள் ஏற்பட்டால், பணமதிப்பு குறைந்து, தங்கத்தின் விலை உயரும்.
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.