இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?
2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டில் இந்தியாவின் வெற்றித்தருணத்தில் கேப்டன் தோனி குழந்தை போல சந்தோஷத்தில் குதிப்பதை யாராலும் மறந்திருக்க முடியாது.
அப்போது தோனியை போல இந்தியாவே சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.
அதன்பிறகு கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அப்படி தருணம் இந்தியாவுக்கு வாய்க்காத நிலையில், அந்த தருணம் நிறைவேறியுள்ளது.
12 ஆண்டுகள் கழித்து இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபை மண்ணில் வென்றுள்ளது.
4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இந்தியா வென்றுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இதே சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது பழிதீர்த்துள்ளது.
2002-ல் கங்குலி. 2013-ல் தோனிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கேப்டன்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.
துபையில் நடந்த போட்டியில், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 11 முறையாக டாஸ் தோற்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, 12 முறையாக இந்த போட்டியிலும் தோற்றார்.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி வில் யங் 15 ரன்னுக்கும், ரச்சின் ரவீந்திரா 37 ரன்னுக்கும், வில்லியம்சன் 11 ரன்னுக்கும் வருண் மற்றும் குல்தீப் யாதவ் பின்னிய சூழல் வலையில் வீழ்ந்தனர்.
57 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த நியூசிலாந்து, அடுத்த 18 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. முதல் 10 ஓவர்கள் வரை 7 ரன்ரேட்டில் சென்ற நியூசிலாந்து நிலைமை அப்படியே தலைகீழானது.
ஒரு பலமான பார்ட்னெர்ஷிப் கிடைக்காதா என திணறிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணிக்கு டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து விக்கெட்டுகள் விழுவதை ஒரு பக்கம் தடுத்தார்.
இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகள் ஷமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
நியூசிலாந்து அணிக்கு அமைந்த தொடக்கத்துக்கு அப்படியே நேர்மாறாக இந்திய அணிக்கு பலமான பார்ட்னெர்ஷிப்பாக ரோஹித் மற்றும் கில்லின் 105 ரன் பார்ட்னெர்ஷிப் அமைந்தது.
ஆனால், அடுத்த 19 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது.
விராட் கோலி 1 ரன்னுக்கு பிரேஸ்வெல் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இந்தியாவின் ஸ்கோரை சீராக உயர்த்தினர்.
சாண்ட்னர் பந்தில் ஷ்ரேயாஸ் அவுட்டாக, அக்சர் படேல் விக்கெட்டை பிரேஸ்வெல் எடுத்தார்.
பிறகு கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா நிதானமாக ஆடிய நிலையில் 49 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வென்றது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமானவர்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் நால்வர்தான்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் 38 ஓவர்களை வீசி நியூசிலாந்து பேட்டர்களை திணறவிட்டனர். 144 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழத்தினர். இந்த 38 ஓவர்களில் 125 பந்துகளை டாட்பந்துகளாக வீசினர் அதாவது 20 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்கவில்லை.
கடந்த 2002ம் ஆண்டு இலங்கையுடன் சேர்ந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி பகிர்ந்து கொண்டது. அதன்பின் 2013ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது. அதன்பின் 3வது முறையாக ரோஹித் சர்மா தலைமையில் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.
2011-க்கு பிறகு மொத்தம் 14 ஐசிசி தொடர்கள் நடந்துள்ளன. அவற்றில் 12 ஐசிசி தொடர்களில் நாக்அவுட் போட்டிகள் வரை இந்தியா முன்னேறியுள்ளது. 4 முறை அரையிறுதியிலும், 5 முறை இறுதி போட்டியிலும் வெளியேறிய இந்தியா, 3 முறை தொடர்களை வென்றுள்ளது.
நியூசிலாந்தும் இந்த தொடர்களில் 8 முறை நாக்அவுட் போட்டிகள் வரை முன்னேறியுள்ளது.
இந்த இரு அணிகளை விட வேறு எந்த அணியும் ஐசிசி தொடர்களின் அரையிறுதிக்கு அதிக முறை முன்னேறியதில்லை.
ஐசிசி சார்பில் கடைசியாக நடத்தப்பட்ட 23 போட்டிகளில் இந்திய அணி 22 போட்டிகளில் வென்றுள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய அணி தோற்றது மற்ற எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை.
இந்த சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் மூலம் வயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாயகன் விருது இரண்டு சதங்கள் உட்பட 263 ரன்கள் எடுத்து நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவுக்கு கிடைத்தது.
83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வானார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.