ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் காஸாவில் இருந்து மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கும் போராட்டங்களை நடத்தினார்கள்.
டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் ஆயிரக்கணக்கில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய இஸ்ரேலிய மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு அரசு, ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
ஞாயிறு, செப்டம்பர் 2ம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆனால் டெல் அவிவ் போன்ற பகுதிகளில் காவல்துறையின் தடுப்பையும் மீறி நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள்.
பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமான ஹிஸ்தாத்ரட்.
முன்னதாக சனிக்கிழமையன்று பணயக் கைதிகளின் உடலை தெற்கு காஸாவில் அமைந்திருக்கும் ரஃபா பகுதியில் உள்ள பாதாள சுரங்கத்தில் கண்டெடுத்ததாக இஸ்ரேல் ராணுவப் படை (IDF) அறிவித்தது.
இறந்த பணயக் கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர், கார்மெல் காட், ஈடன் யெருஷல்மி, ஹெர்ஷ் கோல்ட்பெர்க் போலின், அலெக்ஸாண்டர் லோபனோவ், அல்மோங் சருஷி, மற்றும் மாஸ்டர் ஸ்கிட் ஓரி டானினோ ஆகும்.
சனிக்கிழமை அன்று ராணுவ வீரர்கள் அவர்களை மீட்பதற்கு சில நேரங்களுக்கு முன்புதான் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்றும் அறிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதம் இருக்கும் பணயக் கைதிகளை மீட்பதில் நெதன்யாகுவும் அவரின் அரசும் தோல்வியுற்றது என்று குற்றம் சாட்டி பொதுமக்கள் ஞாயிறு அன்று போராட்டத்தை நடத்தினார்கள்.
இஸ்ரேல் மக்களின் வேண்டுகோள்கள் என்ன?
ஞாயிறு இரவு அன்று, காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி அயலோன் நெடுஞ்சாலையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினார்கள்.
பேருந்துகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் ஏறி நின்று போராட்டத்தை நடத்தினார்கள். அங்கு ஒரு சிலர் நெதன்யாகுவின் உருவப்படம் கொண்ட முகமூடியை அணிந்து கொண்டு, “அவர்கள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்,” என்று கோஷமிட்டனர்.
“நீங்கள்தான் தலைவர். நீங்கள்தான் இதற்கு பொறுப்பு” என்ற பதாகையை கையில் ஏந்தி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் காவல்துறையினரை சாடும் வகையிலும் கோஷங்களை எழுப்பினார்கள். “யாரை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள்? வெட்கப்பட வேண்டும்,” என்ற தொனியில் அவர்களின் கோஷங்கள் இருந்தன.
சிலர் சாலைகளில் நெருப்பை மூட்டினார்கள். சிலர் மஞ்சள் நிற ரிப்பன்களை அணிந்து கொண்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
தொழிலாளர் கட்சியை சேர்ந்த கொள்கை வகுப்பாளார் நாமா லஸிமியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த போராட்டம் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். மேலும் நாளை என்ன நடக்கும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது என்றும் கூறினார். காவல்துறையினர் எறிந்த கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்பட்ட அவர் கீழே விழுந்து காயமடைந்திருந்தார்.
பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஐடனின் தந்தை எலி ஷ்டிவி, “போர் விவகாரத்தில் முடிவெடுக்கும் மக்கள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். இனிமேல் நம்மிடம் நேரமில்லை,” என்று கூறினார்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இந்த போராட்டத்தில் ஒன்றாக இணைந்து பங்கேற்றனர் என்றும், அவர்கள் அனைவரும் பணயக் கைதிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்பதில் ஒற்றுமையுடன் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நான் என்னுடைய குழந்தையை மிகவும் ‘மிஸ்’ செய்கிறேன். தற்போது அனைத்து குடும்பத்தினரும் ஒரு வகையில் பணயக் கைதிகளாகதான் இருக்கிறோம்,” என்று கூறினார் எலி.
இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது என்று டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நோகா பர்க்மென் பிபிசியிடம் தெரிவித்தார்.
விதிகளை மீறி ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான் என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நகரின் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினார்கள். ஜெருசலேம் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதமரின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களைக் காட்டிலும் இது மிகவும் பெரியது என்று 50 வயது மதிக்கத்தக்க ஒரு போராட்டக்காரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அக்டோபர் 7ம் தேதி அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 21 வயது மதிக்கத்தக்க நபரின் அண்ணன் யோதம் பீர் (24) டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். “6 நபர்களின் நிலை என்ன என்று கேட்ட பின்பு எங்களால் அமைதியாக இருக்க இயலவில்லை. இது மிகவும் முக்கியமான தருணம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசு அக்கறை காட்டவில்லை – எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி தலைவர் யைர் லாபிட் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.
முன்னாள் பிரதமரும் யேஷ் ஆதித் கட்சியின் தலைவருமான அவர், மாபெரும் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட நெதன்யாகுவை கட்டாயப்படுத்த வேண்டும் என முன்பு கோரிக்கை வைத்திருந்தார்.
பொது வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அர்னோன் பார் டேவிட், மற்ற அனைத்தைக் காட்டிலும் அவர்களை விடுவித்தல் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு பதிலாக நாம் இறந்து போன நபர்களின் உடல்களைத்தான் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றும் கூறினார்.
நெதன்யாகு அரசுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக தேசிய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் பணயக் கைதிகளின் குடும்பத்தினர்.
பணயக் கைதிகளின் குடும்பத்தினர்கள் இணைந்து செயல்படும் பணயக் கைதி குடும்பங்களின் மன்றம் “ஹமாஸின் பிடியில் சிக்கி 11 மாத சித்தரவதைகள், பசி மற்றும் கொடுமையை அனுபவித்த அந்த ஆறு நபர்களும் கடந்த சில நாட்களில்தான் கொல்லப்பட்டுள்ளனர்,” என்று கூறியுள்ளது.
ஹமாஸுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டால் மீதம் இருக்கும் பணயக் கைதிகளும் இவ்வாறு கொல்லப்படுவார்கள் என்று அவர்கள் கூறினர்.
நாட்டை பாதுகாக்கவும், மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு. ஆனால், “பணயக் கைதிகளை கொலை செய்தவர்களுக்கு இந்த ஒப்பந்தம் தேவை இல்லை,” என்றும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.
தீவிர வலதுசாரி சிந்தனையை கொண்ட அந்த நாட்டின் நிதி அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிக் இந்த போராட்டத்தை கண்டித்ததோடு இது ஹமாஸின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறும் போராட்டம் என்று தெரிவித்தார்.
காஸாவில் இன்னும் எவ்வளவு பணயக் கைதிகள் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அக்டோபர் 7, 2023ம் ஆண்டு தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 251 நபர்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். 1200 நபர்கள் கொல்லப்பட்டனர்.
காஸாவில் உள்ள ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40,530 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸுன் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.