கடந்த 15 நாட்களில், லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலா தனது அதிகாரக் கட்டமைப்பில் தொடர்ச்சியான இழப்புகளையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.
முதலில், செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில், ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த 1500 பேர் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் மூலம் குறி வைக்கப்பட்டனர். அதில் சிலர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, இதுவரை இஸ்ரேலுக்கு எட்டாத தூரத்தில் இருந்த ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமையன்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், நஸ்ரல்லாவையும், ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகளையும் இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கண்காணித்து, குறி வைத்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஹெஸ்பொலாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு தோல்வியடைந்தது எப்படி?
பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் இதுகுறித்து அலசினார்.
ஹசன் நஸ்ரல்லாவை குறிவைப்பது இஸ்ரேலின்உத்தி ரீதியான முடிவு என்றும், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து வந்த அவரை, இஸ்ரேல் நீண்டகாலமாகக் கண்காணித்து வந்தது என்றும் ஃபிராங்க் கார்ட்னர் கூறுகிறார்.
மேலும் அவர் “சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்தவர்களின் பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இதன் பின்னணியில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக ஊகிக்கப்பட்டது.
மொசாட், ஹெஸ்பொலாவின் இந்த தொலைதொடர்பு சாதனங்களின் விநியோகச் சங்கிலியில் தலையிட்டு, அவற்றில் வெடிமருந்துகளை வைத்ததாக நம்பப்படுகிறது. இது சுமார் 15 நாட்களுக்கு முன்பு நடந்தது.
அதன் பின்னர் என்ன நடந்தது என்பது ஹெஸ்பொலாவின் அதிகார கட்டமைப்பில் இஸ்ரேல் எவ்வாறு ஆழமாக ஊடுருவ முடிந்தது என்பதைக் காட்டுகிறது.
ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகள் அனைவரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் தனது நடவடிக்கைகளின் மூலம் எவ்வாறு ஹெஸ்பொலாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை இவ்வளவு திறம்படச் சீர்குலைக்க முடிந்தது என்பதே கேள்வி” என்கிறார்.
நஸ்ரல்லாவை இஸ்ரேல் கண்டுபிடித்தது எப்படி?
ஹசன் நஸ்ரல்லா கொல்லப்படுவதற்கு முன்பு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் ஒரு சிறப்பு செய்தி வெளியானது. இதற்காக லெபனான், இஸ்ரேல், இரான் மற்றும் சிரியாவில் உள்ள பல நபர்களுடன் பேசியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அந்த உரையாடல்களின் மூலம், ஹெஸ்பொலாவின் விநியோகச் சங்கிலி மற்றும் அதிகாரக் கட்டமைப்பை இஸ்ரேல் எவ்வாறு அழித்தது என்பது தெரியவந்தது.
இஸ்ரேல் 20 ஆண்டுகளாக நஸ்ரல்லாவையும் ஹெஸ்பொலாவையும் உளவு பார்த்து, அதன்பிறகே அவர்களின் தலைமையகத்தைத் தாக்கியது என்று இந்த விவகாரங்களை அறிந்த ஒரு நபர் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார். மேலும் அவர் இஸ்ரேலின் இந்த உளவு செயல்பாடு ‘புத்திசாலித்தனமானது’ என்றும் விவரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது நெருக்கமான அமைச்சர்கள் குழுவும் புதன்கிழமையன்று தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்ததாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பல மைல்களுக்கு அப்பால், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நெதன்யாகு உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ராணுவ சேவைகளின் இயக்குநர் மேத்யூ சாவில், இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகத் தீட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவதாக கூறியுள்ளார்.
“ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்புகளில் இஸ்ரேல் உளவுத்துறை குறுக்கீடு செய்திருப்பதையும் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும், செயற்கைக்கோள் படங்கள் அல்லது ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போன்ற பல புகைப்படங்ககளை பகுப்பாய்வு செய்தது முக்கியப் பங்கு வகித்துள்ளது. இவற்றுடன் அந்த மனித புத்திசாலித்தனத்திற்கும் முக்கியப் பங்கு இருந்தது என்று நிச்சயமாகச் சொல்லலாம்,” என்கிறார் மேத்யூ சாவில்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இது அடிமட்டத்தில் உளவாளிகளின் தீவிர ஈடுபாட்டை உள்ளடக்கிய ஒரு ஆபரேஷன் என்று மேத்யூ சாவில் குறிப்பிடுகிறார்.
கடந்த 2006இல் நடந்த இஸ்ரேல்- ஹெஸ்பொலா போருக்கு பிறகு நஸ்ரல்லா பொது வெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார்.
ஹசன் நஸ்ரல்லாவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அவரது மிக நெருக்கமான வட்டாரங்கள், நஸ்ரல்லா மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருவதாகவும் அவரது ஒவ்வோர் அசைவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அவர் ஒரு சிறிய குழுவை மட்டுமே சந்திக்கும் அளவிற்கு இருப்பதாகவும் முன்பு ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தனர்.
இஸ்ரேல் குண்டுகளை வீசியது எப்படி?
ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடம் பற்றிப் பல மாதங்களாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தது என்று மூன்று மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் கூறியதாக சனிக்கிழமையன்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டது.
இஸ்ரேலிய செய்திகளின்படி, நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக நஸ்ரல்லாவைக் குறிவைக்கும் முடிவு அமெரிக்காவிற்கு தெரிவிக்காமலே உடனடியாக எடுக்கப்பட்டது.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, செப்டம்பர் 17-ஆம் தேதியன்று பேஜர் வெடிப்புக்குப் பிறகு, ஹெஸ்பொலா தலைவர்கள் மிகவும் விழிப்புடன் இருந்தனர். இஸ்ரேல் தங்களைக் கொல்ல விரும்புவதாக அவர்களுக்குச் சந்தேகம் வலுத்து வந்தது.
உயிரிழந்த தளபதிகளின் இறுதிச் சடங்குகளில் கூட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அவர்களது உரைகள்தான் சில நாட்களுக்குப் பிறகு ஒளிபரப்பட்டன.
தெற்கு பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் அடித்ததளத்தில் நஸ்ரல்லா இருந்த நிலையில், அங்கு குண்டுவீசித் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
நஸ்ரல்லா உட்பட ஒன்பது மூத்த ஹெஸ்பொலா தளபதிகள் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது ஹெஸ்பொலாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர்களது உளவுத்துறை தோல்வி அடைந்திருப்பதாகவும் கூறுகிறார் ராய்ட்டர்ஸிடம் பேசிய ஸ்வீடிஷ் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஹெஸ்பொலா குறித்து ஆராய்ந்து வரும் மூத்த நிபுணர் மேக்னஸ் ரென்ஸ்டார்ப்.
“நஸ்ரல்லா ஒரு சந்திப்பை நடத்துகிறார் என்பதை இஸ்ரேல் அறிந்திருந்தது. அவர் மற்ற தளபதிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்ரேல் அவரைத் தாக்கியது,” என்று மேக்னஸ் கூறுகிறார்.
சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி செய்தியாளர்களிடம் பேசியபோது, நஸ்ரல்லாவும் பிற தலைவர்களும் ஒன்றுகூடுவது பற்றிய உடனுக்குடன் தகவல் ராணுவத்திடம் இருந்ததாக கூறினார்.
இந்தத் தகவல் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை ஷோஷானி கூறவில்லை. எப்படி இருப்பினும், இந்தத் தலைவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதற்காக ஒரு கூட்டத்தை நடத்தவிருந்ததாக ஷோஷானி கூறினார்.
இதையறிந்த அடுத்த சில நொடிகளில் டஜன் கணக்கான குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலின் ஹட்செரிம் விமான தளத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமிச்சாய் லெவின் செய்தியாளர்களிடம் கூறினார்.
“இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது, நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டது,” என்று பிரிகேடியர் ஜெனரல் அமிச்சாய் லெவின் கூறினார்.
“இஸ்ரேல், ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடத்தைத் தீர்மானித்தவுடன், அதன் F-15 போர் விமானங்கள் பதுங்கு குழிகளை அழிக்கவல்ல 80 குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுகள் தெற்கு பெய்ரூட் மற்றும் தஹியாவில் உள்ள நிலத்தடி தளங்களைக் குறிவைத்தன. அங்கு ஹசன் நஸ்ரல்லா உயர்நிலை தளபதிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார்,” என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ராணுவ சேவைகளின் இயக்குநர் மேத்யூ கூறுகிறார்.
“இவையனைத்தும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், ஹெஸ்பொலாவின் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவியதைத் தெளிவாக்குகின்றன. நஸ்ரல்லாவின் இடத்திற்கு இதே கொள்கைகளைக் கொண்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால், புதிய தலைவர் இத்தகைய உறுதிப்பாட்டை அமைப்புக்குள் உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், இப்போதைய சூழ்நிலையில், அதைச் செய்ய அவருக்கு அதிக நேரம் இருக்காது,” என்று மேத்யூ விளக்கினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு