முதலில் காஸா, பின்னர் லெபனான், இப்போது ஏமன். இஸ்ரேலின் தாக்குதல் விரிவடைந்து வருகிறது.
லெபனானில் இரான் ஆதரவு ஹெஸ்பொலா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏமனில் உள்ள ஹூதி அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு இரான் ஆதரவு ஆயுதக் குழு என்றும் கூறப்படுகிறது.
நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சன்னி முஸ்லிம்கள் தலைமையிலான பெரும்பாலான அரபு நாடுகள் அமைதியாக இருக்கின்றன அல்லது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட எதிர்வினைகளைக் கொடுத்தன.
சன்னி முஸ்லிம்கள் தலைமையிலான அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவைச் சீர்படுத்துவதா அல்லது ஹெஸ்பொலாவை ஆதரித்து வரும் இரானை எதிர்ப்பதா என்ற குழப்பத்தை எதிர்கொண்டுள்ளன.
நஸ்ரல்லா கடந்த 32 ஆண்டுகளாக ஹெஸ்பொலாவை வழிநடத்தி வந்தார். மேலும் அவரது ‘எதிரிகள்’ பட்டியலில் இஸ்ரேல், மேற்கத்திய நாடுகள் மற்றும் சுற்றியுள்ள நாடுகளும் அடங்கும்.
மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல், வளைகுடா அரபு நாடுகள், மற்றும் அரபு லீக் ஆகியவற்றால் ஹெஸ்பொலா, பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு அதைத் தீவிரவாதக் குழுவாக அறிவிக்கும் முடிவை அரபு லீக் வாபஸ் பெற்றுள்ளது.
சௌதி அரேபியா மற்றும் ஜி.சி.சி
லெபனானில் நடப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று சன்னி தலைமையிலான சௌதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை மாலை கூறியது. லெபனானின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து சௌதி பேசியது. ஆனால் சௌதி அரேபியா, நஸ்ரல்லாவை பற்றிக் குறிப்பிடவில்லை.
அதேநேரம் சன்னி தலைமையிலான நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பஹ்ரைன் ஆகியவை நஸ்ரல்லா கொல்லப்பட்டது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் முற்றிலும் மௌனம் காக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் 2020இல் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கியுள்ளன. 2011இல், ஜனநாயகத்திற்கு ஆதரவான ஷியா சமூகத்தின் இயக்கத்தை பஹ்ரைன் ஒடுக்கியது. பஹ்ரைன் ஷியா பெரும்பான்மை நாடு, ஆனால் ஆட்சியாளர்கள் சன்னி பிரிவினர். அதேநேரத்தில், சிரியாவில் ஆட்சியாளர்கள் ஷியாக்கள், பெரும்பான்மையான மக்கள் சன்னி முஸ்லிம்கள்.
வளைகுடா நாடுகளின் (பஹ்ரைன், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்) அமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) லெபனானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஜிசிசி வலியுறுத்தியுள்ளது. லெபனான் அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த ஆயுதமும் அந்த நாட்டில் இருக்கக்கூடாது என்றும் அதன் நிர்வாகத்தைத் தவிர வேறு நிர்வாகம் இருக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, லெபனான் அரசைத் தவிர, வேறு யாருக்கும் அங்கு செல்வாக்கு இருக்கக் கூடாது என்கிறது ஜிசிசி. லெபனானில் ஹெஸ்பொலா செல்வாக்கு செலுத்தி வருவது வெளிப்படையாகத் தெரியும் நிலையில் ஜிசிசி இவ்வாறு கூறியுள்ளது.
பஹ்ரைனில் போராட்டக்காரர்கள் கைது
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, பஹ்ரைனில் உள்ள இரான் ஆதரவு லுவாலுவா தொலைக்காட்சி நஸ்ரல்லாவுக்கு அனுதாபம் காட்டும் வீடியோவை ஒளிபரப்பியது. நஸ்ரல்லாவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்களை பஹ்ரைன் அரசு தாக்கி, கைது செய்து வைத்ததாக இந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
பஹ்ரைன் அரசின் எதிர்க்கட்சித் இணையதளமான பஹ்ரைன் மிரர், நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்தியவர்களை அதிகாரிகள் கைது செய்ததாகக் கூறுகிறது. பஹ்ரைன் ஊடக செய்திகளைச் சுயாதீனமாகச் சரி பார்க்க முடியவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டியுடன் தொலைபேசியில் பேசினார். நஸ்ரல்லாவின் பெயரைக் குறிப்பிடாமல், லெபனானின் இறையாண்மை பாதிப்புக்கு உள்ளாவதை எகிப்து விரும்பவில்லை என்று கூறினார்.
எகிப்து இரானுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இரானின் பினாமி அமைப்புகள் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எகிப்து எதிராக உள்ளது.
நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முழு பிராந்தியமும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக எகிப்திய அதிபர் கூறியிருந்தார். இந்தப் பகுதியின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு எல்லா சூழலிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என எகிப்து விரும்புகிறது என்றார்.
அல்-சிசி தனது தொலைக்காட்சி உரையில் நஸ்ரல்லாவின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. அதேநேரம் ஷியா ஆட்சியாளர்களால் ஆளப்படும் சிரியா மற்றும் இராக்கில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, ஹசன் நஸ்ரல்லாவின் பெயர் பல அரபு நாடுகளில் சமூக ஊடகங்களில் பிரபலமானது. பலர் அவரது மரணத்திற்கு வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
ஓமனின் அரச இமாம், ஷேக் அகமது பின் ஹமத் அல்-கலிலி, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவில், ‘கடந்த 30 ஆண்டுகளாக சியோனிச அமைப்பின் திட்டங்களுக்கு ஆபத்தாக இருந்த ஹெஸ்பொலாவின் பொதுச் செயலாளர் மறைவுக்குத் தனது நாடு துக்கம் அனுசரிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் போராட்டம்
துருக்கி இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவுகளைக் கொண்டிருந்தாலும் காஸா மீதான ஆக்கிரமிப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
லெபனானில் இனப் படுகொலை நடத்தப்படுவதாக துருக்கி அதிபர் எர்துவான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் நஸ்ரல்லாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் குறித்து பாகிஸ்தானும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், நஸ்ரல்லாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இஸ்ரேலிய ஆதிக்கத்தை பாகிஸ்தான் கண்டிக்கிறது. லெபனானின் இறையாண்மை பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. லெபனான் மக்களுக்கும், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அனுதாபங்கள் தெரிவிப்பதாக” குறிப்பிட்டுள்ளது.
நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லாகூர் மற்றும் கராச்சி தவிர, இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரிலும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கராச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மோதல்களும் ஏற்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதி, ‘இந்தக் கொலைக்குப் பிறகு, ஹெஸ்பொலா இயக்கம் செயல்படாது என்றும், பாலத்தீன உரிமைகளுக்காகக் குரல் எழுப்பாது என்றும் இஸ்ரேல் நினைப்பது தவறு’ என்று ஒரு தொலைக்காட்சிக்குகுப் பேட்டியளித்தார்.
ஹெஸ்பொலாவின் உயர்மட்ட தலைவர் இவ்வாறு வீரமரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
“இதற்கு முன்னர் இருந்த, ஹெஸ்பொலாவின் தலைவரும் இஸ்ரேலால் வீரமரணம் அடைந்தார். அப்போது ஹெஸ்பொலாவில் செயல்பாடு முடிவுக்கு வரும் என்று நினைத்தனர். ஆனால் அந்த இயக்கம் தொடர்ந்து வலுவடைந்தது. இது நிச்சயமாக ஹெஸ்பொலாவுக்கு விழுந்த அடி, ஆனால் அது மீண்டும் எழும்” என்றார்.
பாகிஸ்தான் ஊடகங்களில் நஸ்ரல்லாவின் மரணத்தை `வீர மரணம்’ என்று அழைக்கின்றனர்.
அரேபியாவில் கொண்டாட்டங்கள் நடந்தது ஏன்?
ஒருபுறம், ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் குறித்து சிலர் வருத்தம் தெரிவித்தாலும், சிலர் அதைக் கொண்டாடி வருகின்றனர். அதில் பெரும்பாலான கொண்டாட்டங்கள் சிரியாவில் கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடந்தவை.
ரஷ்யா மற்றும் இரான் தவிர, ஹெஸ்பொலாவும் சிரியாவில் பஷர் அல்-ஆசாத்தின் ராணுவத்தை ஆதரித்தது. அரசாங்க எதிர்ப்பு அமைப்புகளிடம் இருந்து மீட்டு, பல பகுதிகளைக் கட்டுப்படுத்த ஆசாத் அரசாங்கத்திற்கு உதவியது.
ட்விட்டர் தளத்தில், இராக்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர் உமர் அல்-ஜமால், “சிரியாவில் நஸ்ரல்லாவால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முஸ்லிம்களிடம் கருணையை எதிர்பார்க்கிறார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த பத்திரிகையாளர் சைஃப் அல் தராய், சிரியாவில் மக்கள் கொண்டாடும் வீடியோவை பதிவிட்டு, “சிரியாவில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிராக யூதர்களால் செய்ய முடியாததை ஹெஸ்பொலா செய்தது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஜோர்டானிய செனட் உறுப்பினர் முகமது அலாசே, `நியூஸ் வீக்’ இதழில், 2006ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவிற்கும் இடையிலான போரின் போது, அரபு நாடுகள் மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஹெஸ்பொலாவுக்கு ஆதரவாகப் பேரணிகள் நடத்தப்பட்டன, ஆனால் இன்று சூழல் மாறிவிட்டது.”
“சிரியா, இராக், ஏமன் ஆகிய நாடுகளில் ஹெஸ்பொலா தலையிடத் தொடங்கியது. இதுதவிர பஹ்ரைனில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அது ஒரு பங்கைக் கொண்டிருந்தது, இதன் காரணமாக அது இஸ்ரேலுக்கும் இந்த நாடுகளில் உள்ள முஸ்லிம்களுக்கும் எதிரானதாக மாறியது” என்று அவர் எழுதி உள்ளார்.
மேலும் அந்தக் கட்டுரையில், “இஸ்ரேல் மீதான தாக்குதலைவிட ஏமன், சிரியா, இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளின் ஊழல் ஆட்சிகளுக்கு ஹெஸ்பொலா கொடுத்த ஆதரவு, அரபு மற்றும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெஸ்பொலா லெபனானில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பு மட்டுமல்ல, தெற்காசியாவில் ஒரு புரட்சிகர பார்வையையும் கொண்டுள்ளது. இந்தக் கண்ணோட்டம் சௌதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இருந்து முரண்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) ஹெஸ்பொலாவை ‘தீவிரவாத அமைப்பாக’ அறிவித்தது.
அதே நேரத்தில், ஹெஸ்பொலாவின் தலைமை, ஐஎஸ்(IS)-இன் எழுச்சிக்கு சௌதி அரேபியாவை குற்றம் சாட்டியது. சௌதி அரேபியா பிராந்தியத்தில் மத மோதல்களை ஊக்குவிப்பதாகவும் அது குற்றம் சாட்டி வருகிறது.
அரபு நாடுகளில் மாறி வரும் சமன்பாடுகளுக்கு மத்தியில், ஹெஸ்பொலா மற்றும் சௌதி அரேபியா உட்பட சன்னி பெரும்பான்மை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் முரண்பாடு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவுகளை ஏற்படுத்தின. அதன் பிறகு, சூடானும் மொராக்கோவும் இஸ்ரேலுடன் ராஜ்ஜிய உறவுகளை ஏற்படுத்த முடிவு செய்தன. சூடானும் மொராக்கோவும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள்.
சௌதி அரேபியா மீதும் இதேபோன்ற அழுத்தம் இருந்தது. ஆனால் சௌதி அரேபியா அவ்வாறு செய்யவில்லை. பாலத்தீனம் 1967இல் இருந்த எல்லையின் கீழ் சுதந்திர நாடாகும் வரை இஸ்ரேலுடன் முறையான உறவை ஏற்படுத்த மாட்டோம் என்று கூறியது. சௌதி அரேபியாவும் கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனத்தின் தலைநகராகக் கோருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஏன் இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவுகளை ஏற்படுத்தினார்கள் என்று துருக்கி விமர்சித்தது. ஆனால், துருக்கி இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவுகளை வைத்துள்ளது. துருக்கியும் இஸ்ரேலும் 1949 முதல் ராஜ்ஜீய உறவுகளைக் கொண்டுள்ளன. துருக்கிதான் இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடு.
கடந்த 2005இல் கூட, துருக்கி அதிபர் எர்துவான் ஒரு பெரிய வணிகக் குழுவுடன் இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு சென்றார். இந்த சுற்றுப் பயணத்தின்போது, அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனை சந்தித்துப் பேசிய அவர், இரானின் அணுசக்தித் திட்டம் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி, முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறினார்.
சௌதி அரேபியாவுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான உறவுகளும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தவை. 1980களில் உருவானதில் இருந்து, ஹமாஸ் பல ஆண்டுகளாக சௌதி அரேபியாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், பல ஹமாஸ் ஆதரவாளர்கள் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ஹமாஸ், சௌதி அரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. சௌதியில் தனது ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியிருந்தது. 2000களில் இரானுடனான ஹமாஸின் நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு