தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் அமைச்சரவையில் புதிதாக நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உதயநிதியைச் சுற்றி கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்டு வந்த துணை முதலமைச்சர் சர்ச்சை ஓய்ந்தாலும் கட்சி மற்றும் ஆட்சியில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்த பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.
இதனால் அரசியல்ரீதியாக தி.மு.க-வுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் உதயநிதியை முன்னிறுத்துவதில் தி.மு.க., தலைமை அவசரம் காட்டுகிறதா?
சென்னை ராஜ்பவனில் ஞாயிறு அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கோவி.செழியன், ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ளனர், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
முன்னதாக, 28ஆம் தேதி (சனிக்கிழமை) இரவில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிய அமைச்சரவையில் நான்கு பேர் சேர்க்கப்படுவது குறித்தும் மூன்று பேர் நீக்கப்படுவது குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு அமைச்சரவையில் பொன்முடி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ராஜ கண்ணப்பன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டதைவிட, உதயநிதியின் துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்த விவாதங்களே பேசுபொருளாக மாறியுள்ளன.
“உதயநிதியை அதிகார மையமாக முன்னிறுத்துவதன் மூலம் கருணாநிதி காலத்தில் இருந்து தற்போது வரை கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள சீனியர்களின் எதிர்காலம் என்னவாகும்?” என்ற கேள்விகளும் எழுந்தன.
இதற்கான விளக்கத்தையும் உதயநிதி கொடுத்திருக்கிறார். ஞாயிறு அன்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்” எனக் கூறினார்.
தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை” என்றார்.
‘ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த வாரிசு’
தி.மு.க-வின் 2006-2011 ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, துணை முதலமைச்சராக ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டார். இதன்மூலம் தி.மு.க-வின் அடுத்த அதிகார மையமாக அவர் அறியப்பட்டார்.
அதேநேரம், இளைஞரணிச் செயலாளராக தி.,மு.க-வுக்குள் வந்த ஐந்தே ஆண்டுகளில் துணை முதலமைச்சராக உதயநிதி முன்னிறுத்தப்பட்டிருப்பது அரசியல்ரீதியான விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.
“துணை முதலமைச்சர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அதில் பத்து சதவீதம் அளவுக்குக்கூட உதயநிதி மெனக்கெடவில்லை. காலம் அவரை இயல்பாகவே அந்த இடத்தை நோக்கி நகர்த்திச் சென்றது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.
“தி.மு.க என்ற கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்த வாரிசாக உதயநிதியை அறிவித்துவிட்டார்கள். தி,.மு.க., நாளேடான முரசொலியில் அக்கட்சியினர் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால், ஸ்டாலினுக்கு அடுத்ததாக உதயநிதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சில விஷயங்களைச் சொல்கிறது” என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் எஸ்.பி.லட்சுமணன்.
அரசியல் வாரிசுகள் வளர்க்கப்படுகிறார்களா?
அதிகார மையத்தை நோக்கி உதயநிதியை சிறிது சிறிதாக தி.மு.க தலைமை நகர்த்தி வருவதாகக் கூறும் லட்சுமணன், “உதயநிதியின் இந்த உயர்வை கட்சிக்குள் ரசிக்காதவர்கள்கூட எதிர்ப்பைக் காட்டுவதற்கு தயங்கும் சூழல்தான் தி.மு.க-வில் இருக்கிறது. யாருக்கும் அவ்வளவு துணிச்சல் இல்லை” என்கிறார்.
அதேவேளையில், வாரிசு அரசியல் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், கட்சி மற்றும் ஆட்சிக்குள் உதயநிதியின் “உழைப்பையும் கவனிக்க வேண்டும். கட்சி நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணம் என உரிய பங்களிப்பை அவர் கொடுத்திருப்பதாக” மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணணன் குறிப்பிடுகிறார்.
வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் கட்சியாக தி.மு.க உள்ளதாகவும் உதயநிதியை துணை முதலமைச்சராக முன்னிறுத்துவதன் மூலம் மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.
தி.மு.க., அமைச்சரவையில் சீனியர்களின் வாரிசுகளாக தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் ஆகியோர் உள்ளதாகக் கூறும் மாலன், “இந்தி எதிர்ப்புப் போராட்டம், மிசா சட்டம் போன்ற நிகழ்வுகளில் துன்பங்களை எதிர்கொண்ட தி.மு.க-வினருக்கு உரிய பதவிகள் கிடைக்கவில்லை” என்கிறார்.
“துணை முதல்வர் பதவிக்கு அரசமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தார்மீகரீதியாக உதயநிதியை முன்னிறுத்துவதன் மூலம் அதிகாரத்துக்கும் ஊழலுக்கும் வழிவகுப்பதாகவே முடியும்” எனக் கூறுகிறார் அவர்.
தி.மு.க சொல்லும் விளக்கம் என்ன?
இதை மறுத்துப் பேசும் தி.மு.க செய்தித்தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், ஜம்மு காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல் உள்ளதாகக் கூறுகிறார்.
“ஓர் இயக்கத்துக்காகப் பாடுபடக்கூடிய அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொடுக்க முடியாது. சட்டமன்றத்தில் உள்ள 234 எம்.எல்.ஏக்களும் அப்பா-மகன் இல்லை. இது முழுக்க முழுக்க மக்கள் தீர்மானிக்கக் கூடிய விஷயம்,” என்கிறார் அவர்.
ஸ்டாலின் மகனாக இருப்பதால் உதயநிதியின் துணை முதல்வர் பதவி விமர்சிக்கப்படுவதாகக் கூறும் கான்ஸ்டன்டைன், “இந்தப் பதவியை இன்னொருவருக்குக் கொடுத்தால் நடக்கும் பணிகளைவிட உதயநிதியிடம் கொடுத்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என நினைக்கிறோம்” என்கிறார்.
“தி.மு.க தலைமை நினைத்திருந்தால் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தி, தேர்தலை சந்திக்காமலேயே உதயநிதியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும். அவர் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றார். ஓராண்டுக்குப் பிறகே அமைச்சர் ஆனார்” என்கிறார் கான்ஸ்டன்டைன்.
ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியைத் தருவதற்கு கருணாநிதி காலம் தாழ்த்துவதாகக் கூறி விமர்சித்தவர்கள்தான், இப்போது உதயநிதி முன்னிறுத்திப்படுவதையும் விமர்சிப்பதாகக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.
மேலும், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, ஃபார்முலா 4 பந்தயம் என மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை உதயநிதி நடத்திக் காட்டியதாகவும், அவருக்குப் போதுமான தகுதிகள் இருப்பதால் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பா?
அதேநேரம், 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தியே தற்போது தி,மு.க தலைமை செயல்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், “2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தினாலும் அதனால் எந்த பாதிப்பும் தி.மு.க-வுக்கு ஏற்படப் போவதில்லை” என்றார்.
“மக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு இடையூறு ஏற்படாதவரை மற்ற பிரச்னைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை.”
மாலனை பொறுத்தவரை, உதயநிதியை முன்னிறுத்துவது என்பது மக்களை நேரடியாக பாதிக்கக் கூடிய விஷயம் இல்லை.
சீமான், விஜய் போட்டியை சமாளிக்க முடியுமா?
ஆனால், இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன், 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தி தி.மு.க., தேர்தலை எதிர்கொண்டால் அது தவறாக முடியவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்தார்.
எஸ்.பி.லட்சுமணனின் கூற்றுப்படி, 2026 தேர்தல் களம், ஸ்டாலினா அல்லது மற்றவர்களா என்பதாகவே இருக்கப் போகிறது.
“நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட வரும்போதோ, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக சீமான் களமிறங்கும்போதோ அவர்களுக்கு எதிராக உதயநிதியை மட்டுமே முன்னிறுத்த முடியாது.”
உதயநிதி அந்த இடத்திற்கு இன்னும் வளரவில்லை எனக் குறிப்பிடும் அவர், “எதிர்காலத்தில் வேண்டுமானால் அப்படியொரு போட்டி வரலாம்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.