எக்ஸ்(டிவிட்டர்) நிறுவனம் அரசு விதிமுறைகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இப்போது எக்ஸ் என அறியப்படும் டிவிட்டர் அரசு விதிமுறைகளை மீறிச் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
“எக்ஸ் இந்த நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை,” என்றும் சட்டம், நீதித்துறை மற்றும் அதிகாரிகளை கேவலமாகப் பார்ப்பதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எக்ஸ் சமூக ஊடக நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு விளக்கமளித்த மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கத்திற்கு எக்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.
எக்ஸ் நிறுவனத்தின் மீதான வழக்கு என்ன?
டிவிட்டர் கணக்குகள் சிலவற்றைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ஓராண்டாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணத்திற்காக ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து எக்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால், அபராதத் தொகையில் பாதியை, அதாவது ரூ.25 லட்சத்தைஇ முதலில் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீதித் தொகையை மறு உத்தரவு வரும் வரை செலுத்தத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
படக்குறிப்பு,
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் சட்டப்படி சிறப்புப் பாதுகாப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன.
மறுபுறம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று, எக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து இந்த வாரத் தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை முதலில் செய்தி வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ள மத்திய அரசின் விளக்கத்தில், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சில கணக்குகளைத் தடை செய்யுமாறு எக்ஸ் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், எக்ஸ் நிறுவனம் தனது உத்தரவுகளைப் பலமுறை மீறியதாகவும் தடை செய்யப்பட்ட சில கணக்குகளின் மீதான தடையை எந்தக் காரணமும் தெரிவிக்காமல் நீக்கியதாகவும் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இத்தகைய செயல்கள் திட்டமிட்டுச் செயல்படுவதாகவும், தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை வெளியிடும் குற்றத்தை ஊக்குவிப்பதாகவும் அரசு கூறியுள்ளது.
மேலும், அரசின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்வது அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். பலரும் ட்வீட் செய்கிறார்கள். அவர்களுடைய அனைத்து ட்வீட்களையும் தடை செய்ய வேண்டுமென அரசாங்கம் கேட்கவில்லை,” என்றும் அரசுத்தரப்பு கூறியுள்ளது.
இந்திய அரசாங்கம் எக்ஸ் நிறுவனத்திடம் பலமுறை சில உள்ளடக்கங்களைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. 2022ஆம் ஆண்டில் மட்டும், அரசாங்கம் 3,417 இணைய முகவரிகளை முடக்கியது. 2014இல் 8 இணைய முகவரிகளை மட்டுமே தடை செய்ய உத்தரவிடப்பட்டது.
மத்திய அரசு vs எக்ஸ் (டிவிட்டர்)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
அரசின் உத்தரவுகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருந்ததாக ஜாக் டோர்சி குற்றம் சாட்டினார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான பல ட்வீட்கள் மற்றும் டிவிட்டர் கணக்குகளை நீக்க அரசாங்கம் உத்தரவிட்டதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி கடந்த ஜூன் மாதம் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் கணக்குகளையும் தணிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
டிவிட்டரை மூடப் போவதாகவும், நாட்டிலுள்ள நிறுவனத்தின் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப் போவதாகவும் இந்திய அரசு மிரட்டுவதாக டோர்சி தெரிவித்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அரசு மறுத்துள்ளது. எக்ஸ் இந்திய சட்டங்களை மீறுவதாக அரசு குற்றம் சாட்டியது.
எக்ஸ் அமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடுகள் உள்ளன. விதிகளை மீறினால், சட்டங்களால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அந்தஸ்துகள் மற்றும் பாதுகாப்புகளை இழக்க நேரிடும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இந்தப் பாதுகாப்புகள், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்குப் பொருந்தும். இந்தப் பாதுகாப்புகள், பயனர்களின் பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களின் விளைவாக எழும் சட்டச் சிக்கல்களில் இருந்து சமூக ஊடக நிறுவனங்களைப் பாதுகாக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
சிறப்புப் பாதுகாப்பு அந்தஸ்தை இழப்பு ஒரு சமூக ஊடக நிறுவனத்திற்கு ‘மரண தண்டனையை’ போன்ற என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய பாதுகாப்புகளை இழப்பது ஒரு சமூக ஊடக நிறுவனத்திற்கு ‘மரண தண்டனையை’ போன்றது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையே நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களிலும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இங்குள்ள சட்டங்களின் கீழ், குறைகளைத் தீர்ப்பதற்காக எக்ஸ் நிறுவனம் ஒரு குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
ஆனால், சட்ட விதிமுறைக்கு இணங்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படலாம் என்று நீதிமன்றம் கூறும் வரை, எக்ஸ் நிறுவனம் அதைச் செய்யவில்லை என்று அரசுத்தர்ப்பு கூறியது.
“நீதிமன்றம் எச்சரித்த பின்னரே இந்த நாட்டின் சட்டங்களைப் பின்பற்ற எக்ஸ் முயல்கிறது. இதுவே அந்த நிறுவனத்தின் பழக்கமாகிவிட்டது,” என்று மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
எக்ஸ்(டிவிட்டர்) தரப்பின் வாதம் என்ன?
விவசாயிகள் போராட்டத்தின்போது குறிப்பிட்ட சில கணக்குகளை முடக்குவதற்கான அரசாங்கத்தின் உத்தரவுகள் இந்திய சட்டத்திற்கு முரணானது என்றும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தங்கள் நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரானது என்றும் எக்ஸ் நிறுவனத் தரப்பு வாதிட்டது.
ஆனால், எக்ஸ் நிறுவனம் அரசுக்கு இணங்கிச் செயல்படும் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அதற்கு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியதாக அரசு கூறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
சமீபத்தில் எக்ஸ் (டிவிட்டர்) தலைமை செயல் அதிகாரியான ஈலோன் மஸ்க், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
இந்திய சட்டங்களுக்கு இணங்குவது நிறுவனத்தின் வணிகத்திற்கு இடையூறு என்பது போல் கருதப்படக்கூடாது எனவும் சட்டங்களுக்கு இணங்குவது விருப்பம் சார்ந்த விஷயமல்ல எனவும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
விதிகளைப் பின்பற்றாவிட்டால், பாதுகாப்பு இழப்பு உள்ளிட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அரசுத்தரப்பு கூறியுள்ளது.
ஈலோன் மஸ்க் வந்த பிறகு டிவிட்டர்
கடந்த 2022ஆம் ஆண்டு கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதற்கு முன்னதாகவே அரசாங்கத்தின் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மஸ்க் தலைமைக்கு வந்த பிறகு, எக்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்ட நிறுவனம், அரசாங்கத்தின் உத்தரவுகளைப் பின்பற்றத் தொடங்கியது.
அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோதியை ஈலோன் மஸ்க் சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், உள்ளாட்சி சட்ட விதிகளைக் கடைபிடிக்க வேண்டும், இல்லையெனில் நிறுவனம் மூடப்படும் அபாயம் உள்ளது எனக் கூறினார்.
அரசு உத்தரவை எதிர்த்து ஒரு சமூக ஊடக நிறுவனம் நீதிமன்றத்திற்குச் செல்வது இதுவே முதல்முறை. இதற்கான தீர்ப்பு மிகவும் முக்கியமானது.
மறுபுறம், உரிமைகள் தொடர்பான ஆர்வலர்கள் அரசாங்கத்தின் உள்ளடக்கத்தைத் தடுக்கும் உத்தரவுகள் தெளிவற்றது மற்றும் அபத்தமானது என விமர்சித்துள்ளனர்.