• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித்

Byadmin

Sep 3, 2024


ஒரே நாட்டுக்குள் அதிகார பகிர்வை மேற்கொண்டு, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக்கொள்கின்ற செயற்பாட்டுக்கு இடமளிக்காது, குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் இடையே திங்கட்கிழமை (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு பிரதேசத்துக்காக தனியான ஜனாதிபதி செயலணி ஒன்றும் நிறுவப்படும். ஏனைய பிரதேசங்களுக்கும் மாகாண அடிப்படையில் செயலணிகள் அமைக்கப்படும்.

இந்த செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களுக்கு இரண்டு உப செயலணிகளும் அமைக்கப்பட்டு, மாதாந்த வடக்கின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

பெண்களை தலைமையாகக் கொண்ட அதிக குடும்பங்கள் காணப்படுவதோடு, அவர்கள் நுண் நிதி கடன் பொறிக்குள் சிக்கியிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தீர்வும் இல்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகமான குடும்பங்கள் காணப்படுகின்றன. தானும் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில், யுத்தத்துக்கு பின்னரான இந்தப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவேன். இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் உட்பட தொழில் இல்லா பிரச்சினைக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

வடகிழக்கு மக்களை பாதுகாக்கும் வகையிலான முற்போக்கான பல செயற்றிட்டங்களை முன்னெடுப்போம். ஒரே நாட்டுக்குள் அதிகார பகிர்வை மேற்கொண்டு, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக் கொள்கின்ற செயற்பாட்டுக்கு இடமளிக்காது, குறுகிய காலத்துக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவோம்.

மேலும் நன்னீர் மீன் பிடி, கரைவலை மீன்பிடி உட்பட பல கைத்தொழில் வாய்ப்புக்களின் ஊடாக அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும். இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதோடு, இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

The post ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித் appeared first on Vanakkam London.

By admin