புதுடெல்லி:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றி பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும், அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நல்ல எண்ணத்தை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும்.
கட்சி அனைத்து சமூகத்தினரிடையேயும் சென்றடைய வேண்டும். குறிப்பிட்ட சமூகங்கள் நமக்கு வாக்காளிக்காவிட்டாலும் நாம் அவர்களை அணுகி நமது கொள்கைகளை விளக்க வேண்டும் என்று பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜமால் சித்திக் கூறினார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பிறகு கட்சியின் சிறுபான்மை பிரிவு நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் 60 பாராளுமன்ற தொகுதிகளை கண்டறிந்து அங்கு அதிக முஸ்லிம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாங்கள் ஒரு அரசியல் கட்சி. நிச்சயமாக நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை எங்கள் பக்கம் சேர்க்க முயற்சிப்போம்.
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் பிப்ரவரி 1,2-ந்தேதிகளில் தேசிய செயற்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்காக மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுபவர்களை அணுகும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தற்போதைய மத்திய அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. மவுலானா அபுல்கலாம் ஆசாத் நாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்தவர். இன்று முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகமாக உள்ளனர். சமூகத்தை சேர்ந்த அமைச்சரை விட, அனைவருக்கும் பணிபுரியும் அரசு அமைவது முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 5 ஆயிரம் முஸ்லிம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மத மற்றும் ஆன்மீக தலைவர்களை சந்தித்து அவர்கள் மூலம் அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிய படுத்த முயற்சி செய்வோம் என சித்திக் கூறி உள்ளார்.
மேலும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 60 பாராளுமன்ற தொகுதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட 3 லட்சம் முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டு டெல்லியில் பெரிய பேரணி நடத்தவும், அந்த பேரணிக்கு பிரதமர் மோடியை அழைக்கவும் ஜமால்சித்திக் திட்டமிட்டுள்ளார்.