கான்பூரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.
இதுவரை இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வெல்ல முடியவில்லை என்ற வரலாறு வங்கதேச அணிக்குத் தொடர்கிறது. அதேசமயம், இந்திய அணி உள்நாட்டில் தொடர்ச்சியாக 18-வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
உலகக் கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி உள்நாட்டில் 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளை(1994-2000, 2004-2008) பெற்றுள்ளது.
உள்நாட்டு போட்டிகளில் கடைசியாக 2013-ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பின் இதுவரை 12 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்திய அணி கோட்டைவிடவில்லை.
நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி
2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டநிலையில் 4வது நாள் மற்றும் கடைசிநாள்(இன்று) ஆகிய இருநாட்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இந்த போட்டியை வென்றுள்ளது.
முதல் 3 நாட்கள் வரை 2வது டெஸ்ட் போட்டி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஏனென்றால் 3 நாட்களில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மற்றும் இன்று பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் இந்திய அணி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மொத்தமாக 312 பந்துகளை மட்டுமே சந்தித்து. டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணி குறைவான பந்துகளைச் சந்தித்து அடைந்த அடைந்த வெற்றிகளில் இது இரண்டாவது ஆகும். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 281 பந்துகளைச் சந்தித்து இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 180 ஓவர்களுக்கும் குறைவாக அதாவது 173.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்னும் ஒன்றரை செஷன் மீதமிருக்கும் நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘பாஸ்பால் ஆட்டம்’
உலகளவில் ‘பாஸ்பால்’ (Bazball) ஆட்டம் குறித்து பெருமளவு விவாதிக்கப்பட்டு வரும்நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான் ஆதிக்கம் செய்து வருகின்றன. ஆனால், தங்களாலும் ஆக்ரோஷமான பாஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து 2 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்திய அணியினர் நிரூபித்துள்ளனர்.
2வது இன்னிங்ஸில் வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி டி20 அதிரடி பேட்டிங்கை முறையை கையில் எடுத்து, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலும், 114 ரன்கள் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
புள்ளிப்பட்டியலில் இந்திய அணி ஆதிக்கம்
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் 12 புள்ளிகள் கிடைத்தது.
தற்போது புள்ளிப்பட்டியலில் இந்திய அணி,11 போட்டிகளில் 8 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிரா என 98 புள்ளிகளுடன், 74.24 சதவீத வெற்றியுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி 90 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.
ரோஹித் கூறுவதென்ன?
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “வாழ்க்கையில் நாம் அனைவரும் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், பல்வேறு தரப்பட்டவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ராகுல் டிராவிடுடன் இணைந்து செயல்பட்டோம் தற்போது, கவுதம் கம்பீருடன் இணைந்து செயல்படுகிறோம்.
இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக விளையாடினோம். 4வது நாள் ஆட்டத்தின்போது வங்கதேசத்தை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ய திட்டமிட்டோம்.
ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை, ஆனால், ஆடுகளத்துக்கு ஏற்றார் போல் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். பேட்ஸ்மேன்களும் ரிஸ்க் எடுத்து தங்களின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தினர்” எனத் தெரிவித்தார்.
கடைசிநாள் ஆட்டம்
கடைசி நாளில் வங்கதேச அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து, குறைந்த ஸ்கோரில் அந்த அணியை வீழ்த்தி, 2வது டெஸ்ட் போட்டியை தன்வசமாக்க இந்திய அணி முடிவு செய்தது.
அதற்கு ஏற்றார்போல் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது.
கடைசிநாளான இன்று வங்கதேசத்தின் விக்கெட்டுகள் அனைத்தையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியை வெல்லும் முயற்சியில் இந்திய அணி களமிறங்கியது.
ஷாத்மான் இஸ்லாம், மோமினுல்ஹக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரிலேயே அஸ்வின் பந்துவீச்சில் மோமினுல் 2 ரன்னில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த கேப்டன் ஷாண்டோ, இஸ்லாமுடன் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து ஆடினார். இஸ்லாம் கடினமாகப் போராடி அரைசதம் அடித்தார். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஷாண்டோ க்ளீன் போல்டாகி 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அரைசதம் அடித்த இஸ்லாம் 50 ரன்னில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணியினர் விக்கெட்டுகளை பறிகொடுத்தவாறு இருந்தனர்.
28 ஓவர்களின்போது 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் சேர்த்திருந்த வங்கதேச அணி, அடுத்த 19 ஓவர்களில் 53 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
உணவு இடைவேளையின்போது 47 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 146 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய அணிக்கு எளிய இலக்கு
இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஸ்வால், ரோஹித் ஆட்டத்தைத் தொடங்கினர்.
முதல் இன்னிங்ஸை போன்று ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்து பவுண்டரி, சிக்ஸருக்கு விளாசினர். 3வது ஓவரிலேயே கேப்டன் ரோஹித் 8 ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கில் 6 ரன் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 ஓவர்களுக்குள் இந்திய அணி 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை கைவிடாமல் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 6.6 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. 43 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 51 ரன்களில் தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலி 29 ரன்கள் எடுத்தார், ரிஷப் பந்த் கடைசியில் ஒரு பவுண்டரி அடித்து இலக்கை அடைந்து ஆட்டத்தை வெற்றி பெற வைத்தனர்.
அதிரடி ஜெய்ஸ்வால்
இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ஸ்ட்ரைக் ரேட் 128.12 ஆக இருந்தது, இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்டரின் 3வது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் இதுவாகும். அது மட்டுமல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் 50 பந்துகளுக்கும் குறைவாக இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த முதல் இந்திய பேட்டர் ஜெய்ஸ்வால்தான்.
மிகப்பெரிய வெற்றி
தொடர்நாயகன் விருது வென்ற அஸ்வின் கூறுகையில் “ இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்த்து உண்மையில் நான் பாராட்டுகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரியது.
உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேச அணியை 2வது இன்னிங்ஸில் வீழத்திவிட்டோம். ரோஹித் சர்மா நேற்று போல் இன்றும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கி, வழிகாட்டினார். அதன்படியே ஜெய்ஸ்வால், கோலி ஆகியோரும் சிறப்பாக ஆடி ஒரு மணிநேரத்தில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.
ஜடேஜாவின் பந்துவீச்சை பற்றி அதிகமாக கூறத் தேவையில்லை. இந்த வெற்றியில் எனக்கும் பங்கிருக்கிறது என்பதில் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.