கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்குமா? இல்லை என்கிறது இந்திய அரசு

2 டிசம்பர் 2020

covid vaccine update

இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்குமா?

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்கும் நோக்கம் இந்திய அரசுக்கு இல்லை என்று செவ்வாயன்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்கிறது தி இந்து ஆங்கில நாளிதழின் செய்தி.

ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு ஒருபோதும் பேசவில்லை என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.

கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு விரும்புவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்கள் தொகையில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தால், ஒட்டு மொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்தின் செயல்திறன் சிலரது உடலில் 60 சதவீதமாக இருக்கும். சிலரது உடலில் 70 சதவீதமாகவும் இருக்கும் இந்த வேறுபாடு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வது குறித்து மக்களிடையே தயக்கத்தை உண்டாக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

மக்கள் தொகையில் ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமே தடுப்பு மருந்து வழங்குவது தொடங்கப்படும் என்பதால் முகக் கவசம் அணிவதைக் கட்டாயம் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் இழுபறி

டெல்லி எல்லையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் விவசாயப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நடத்திய மூன்று மணி நேர பேச்சில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது என்கிறது தினமணி செய்தி.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

“புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்க நிபுணர் குழுவை நியமிக்கலாம்’ என்று மத்திய அரசு தெரிவித்த யோசனையை விவசாயிகள் நிராகரித்ததால் விவசாயிகள் பிரச்னையில் இழுபறி நீடிக்கிறது.

மேலும், “திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எந்த முடிவையும் ஏற்கமாட்டோம். போராட்டம் தொடரும்’ என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் புது தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் உள்ளிட்டோரும், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என்கிறது அந்தச் செய்தி.

புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும்?

குமரிக் கடல் பகுதியை நெருங்கும் புதிய புயல் - எப்போது கரையைக் கடக்கும்?

வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

கடந்த மாதம் 28-ந்தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. 2ஆம் தேதி (இன்று) இலங்கை கடலோர பகுதியை அடைந்து, 3ஆம் தேதி (நாளை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4ஆம் தேதி (நாளை மறுதினம்) தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :