• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

சர்ச்சைக்குரிய ‘விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை’ ரத்து – தமிழக அரசு விளக்கம் | Cancellation of Vinayagar Chaturthi circular: Departmental action against officials who sent the circular – TN Govt

Byadmin

Sep 4, 2024


சென்னை: அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும்.

மேற்காணும் சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல், உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



By admin