• Thu. Aug 11th, 2022

24×7 Live News

Apdin News

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு ஏன் நடத்த வேண்டும்? – வேல்முருகன் வலியுறுத்தி விளக்கம் | Protest across Tamil Nadu on August 16 demanding caste-wise census: Velmurugan

Byadmin

Aug 6, 2022


சென்னை: “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு மறுத்தாலும், மாநில அரசுகள் நடத்த இப்போது தடையேதும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசும், அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மாநில அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் தான், அனைத்து சமூகங்களின் கோரிக்கைகளை ஏற்று, சமூக நீதியை நிலை நிறுத்த முடியும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சமூகநீதி தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். இந்த சமூகநீதியை நிலை நிறுத்த, சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவை என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், சமூகம் பிளவுபட்டு விடும் என்று அலறுகிறார்கள். சாதி வேறுபாடுகள் அப்படியே நிலைக்க வேண்டும், நீடிக்க வேண்டும் என்று விரும்புவோர்க்கு, சாதி ஊனத்தின் அடிப்படையில் அரசு உதவி செய்யும் பொழுதெல்லாம் ஓர் அச்சம் ஏற்படுகிறது.

சமத்துவம் கோரி தலை நிமிர்த்த ஆற்றல் இல்லாதவர்கள், அரசு தரும் இட ஒதுக்கீடு போன்றவற்றால், வலிவு பெற்று, சமத்துவம் கோர வந்து விடுவார்களோ என்ற அச்சம்தான் அது. இதன் காரணமாக, மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதித்து முடிவேதும் எடுக்க முடியாமல் இழுபறியில் சிக்கியுள்ளது.

1931-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கில் சாதியையும் கேட்டுப் பதிவு செய்தார்கள். அதன்பிறகு 1941-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் சிக்கி பிரித்தானிய வல்லரசு சீரழிந்ததால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உரியவாறு நடைபெறவில்லை.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதை மேலாதிக்கவாதிகள் ஏற்றுக் கொள்ளக் காரணம், ஒடுக்கு முறையில் அடித்தட்டு நிலையில் உள்ள அம்மக்கள், மேலெழுந்து தங்களுக்குப் போட்டியாக வந்திட மாட்டார்கள் என்ற நம்பிக்கையே.

ஆனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு உதவிகள் கிடைத்தால் தங்களின் ஆதிக்கத்திற்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என்ற அச்சம் சாதி ஆதிக்கவாதிகளுக்கு என்றென்றும் இருந்து கொண்டே உள்ளது. அதனால் நல்லவர்கள் போல் நடித்து பல்வேறு கதைகளைக் கட்டி விடுகிறார்கள்.

கல்விக் கூடங்களில் சாதி கேட்பதால்தான் சாதி இன்னும் நீடிக்கிறது என்பது அதிலே ஒரு கதை, படிக்காதவர்களிடம் சாதி இல்லை என்பது போலவும் படித்தவர்களிடம் மட்டுமே சாதி இருக்கிறது என்பது போலவுமான ஒரு கட்டுக் கதை இது.

சாதி அடிப்படையில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லையானால், பிறப்பால் ஒதுக்கப்பட்டு கீழ்நிலையில் கிடக்கும் சாதி மக்கள் – தங்கள் உரிமைகளைக் கோர, தாங்கள் யாருக்கும் கீழானவர்கள் இல்லை என்பதை வலியுறுத்த உளவியல் தெம்பும் உறுதியும் பெற்றிருக்க மாட்டார்கள்.

எனவே, அனைத்து சமூக மக்களும் சம உரிமை பெற சாதிவாரி கணக்கெடுப்பு என்பது முக்கியமானது. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே சமூகநீதியாகும்.

இவற்றையெல்லாம் பெறத் தகுதி உள்ள மக்களின் தொகை எவ்வளவு என்ற கணக்கு அரசுக்கு வேண்டும். இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி ஒவ்வொன்றின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிய வேண்டும். முன்னேறிய சாதிகளின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிய வேண்டும்.

சாதி ஆதிக்கத்தைக் குறைக்க தாழ்த்தப்பட்ட மக்களைக் கை தூக்கிவிட சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயத் தேவை. ஆதிக்க சாதியினர் சாதிப்பிளவு அதிகரிக்கும் என்று கட்டிவிடும் புரளியை முறியடிப்பது அனைத்து சாதிகளிலும் உள்ள ஜனநாயக ஆற்றல்களின் கடமை.

அதே நேரத்தில், சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அந்தந்த மாநிலத்தை அடிப்படை அலகாக வைத்துத்தான் எடுக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னேறியவர்கள் என்று மட்டுமே கணக்கெடுக்க வேண்டும். அனைத்திந்தியாவை ஓர் அலகாகக் கொள்ளக் கூடாது. மாநிலத்தைத்தான் ஓர் அலகாகக் கொள்ள வேண்டும்.

மாநிலங்களில் வரும் பட்டியலின் கூட்டுத் தொகையைத்தான் அனைத்திந்தியக் கூட்டுத் தொகையாகக் கணக்கிட வேண்டும். அதே போல் இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் போது அனைத்திந்தியப் பணியாக இருந்தாலும் மாநில வாரியாகத்தான் ஒதுக்கீட்டு விகிதத்தை வழங்க வேண்டும்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு மறுத்தாலும், மாநில அரசுகள் நடத்த இப்போது தடையேதும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசும், அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மாநில அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் தான், அனைத்து சமூகங்களின் கோரிக்கைகளை ஏற்று, சமூக நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

தற்போது, மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையிலும், கோரிக்கைகள் அடிப்படையிலும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக் கோரி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வரும் 16 ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.