• Thu. May 23rd, 2024

24×7 Live News

Apdin News

சாலினி | நதுநசி – Vanakkam London

Byadmin

May 16, 2024


*****
உச்சி வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது.இலைகள் சலசலக்க மறுத்து அடம்பிடித்தன.காற்றும் ஓடி ஒழித்தது போல.

” என்னய்யா?”

சரனியா கேள்வியோடு அந்த ஐயாவின் அருகே வந்து சேர்ந்தாள்.

பேரூந்துக்கு காத்திருந்த ஐயாவுக்கு வெக்கை கூடிய சூழலால் மயக்கம் வந்திருந்தது.

பாடசாலை விட்டு வீதியின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்த சரனியாவின் கண்களில் பட்டுவிடவே அவளும் அவரின் அருகில் வந்து விட்டாள்.

வயது முதிர்ந்து நரை விழுந்து கிழம் தோன்றி அவரை முதுமை அரவணைத்திருந்தது.
அறுபதை எட்டியிருக்கும் வயதில் இருந்தார்.

முதுமையில் அவரை வெய்யில் இப்போது வாட்டி வதைக்க மயங்கிக் கொண்டிருந்தார்.

” ஐயா”

அவரை உலுப்பி எழுப்பினாள் சரனியா.

மரத்தோடு சாய்ந்திருந்த அவர் மெல்ல கண்களை திறந்தார்.இருந்தும் மீண்டும் மூடிக்கொண்டார்.

அவரால் கண்களை திறந்து பார்க்க முடியவில்லை.

தன் தண்ணீர் போத்தலைத் திறந்தவள் ஐயாவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள்.முகம் நன்றாகவே தண்ணீரால் கழுவுப்பட்டு விட்டது.

முகத்தில் பட்ட தண்ணீர் தோலின் வெப்பத்தினை குறைத்து விடவே உடலில் குளிர் பரவி உடலை சுவாத்தியப்படுத்தியது.

மெதுவாக தன் கண்களை திறந்து பார்த்தார் வயோதிபர்.

அவரையே உற்று நோக்கியவாறு நின்றிருந்த சரனியா தண்ணீர் போத்தலை அவரிடம் நீட்டியபடி

” கொஞ்சம் தண்ணீர் குடியுங்கோ”
என்றாள்.

சுருங்கிய முகத்தில் படர்ந்த புன்னகையால் முகத்தின் தசைகளில் மெல்லிய துடிப்பு சிரிப்பைச் சொல்லியது.

தண்ணீர்ப் போத்தலை வாங்கி தண்ணீரை அருந்திய வயோதிபரும் பெரு மூச்சொன்றை விட்டவாறே

” உன்ர வயதில் இருப்பாள் இப்ப என்ற பேத்தி” என்றார்.

ஒரு ஊகத்தில் கற்பனை உலகத்தில் வயோதிபர் சொல்லியிருந்தார்.

“உங்கட பேத்தி இப்ப ஏங்க இருக்கிறாள்?”

” அதுதான் பிள்ளை தெரியல்லை.இன்றளவும் தேடிக்கொண்டே இருக்கிறன்.”

வயோதிபரின் கண்கள் கலங்கிப்போயின.

” எனக்கும் தான் என்னோட தாத்தாவைத் தெரியாது. உங்களைப் பார்த்தால் என்னோட தாத்தா மாதிரியே இருக்கு.

” ஏன் எங்கே உங்கட தாத்தா?”

” தெரியாதே”

” அப்பாட்ட கேக்கவில்லையா?”

“அப்பாவின்ர அப்பா தாத்தா இருக்கிறார்.அவர் எங்களோட தான் எங்கட வீட்டில தான் இருக்கிறார்.”

சரனியாவின் அப்பாவின் அப்பா தன்னுடன் தான் சரனியாவின் அப்பாவையும் அவர் தம் குடும்பத்தையும் வைத்துக்கொண்டார்.

சரனியாவின் அப்பா வாமனும் தன் அப்பா அம்மாவுடன் சேர்ந்திருக்கவே விரும்பியதால் முரண்பாடுகள் தூரத்தில் ஓடிப்போய் ஒழிந்து கொண்டன.

சரனியாவின் வீடும் சரனியாவின் அப்பா தாத்தா வீடும் ஒரே காணியில் இருந்த இரு வீடுகளாக இருந்தன.

சரனியா ஒரு பிள்ளை தான்.மூன்றாம் தரத்தில் இப்போது படித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு தாத்தா வீடும் தன் வீடும் ஒன்று போலவே இருந்தது.

உயர்ந்து வளர்ந்திருந்தாள் சரனியா.மூன்றாமாண்டிலேயே தலைமூடியை வளர்த்து பின்னிக் கட்டியிருந்தாள். அவளது பாடசாலையில் தலைமுடியை வளர்க்க அனுமதித்திருந்தனர்.

பார்த்தாள் பெரிய மனுசி போல.கதையும் கூட அப்படியேதான் இருக்கும்.

” உன்னைப் பாக்கும் போது, உன்ர சுட்டித்தனம் எல்லாம் அபபிடியே என்ர மகளை சின்னனில பார்த்தது போல இருக்கம்மா”

“உன்ர அம்மாவுக்கு என்ன பேர்?”

” சாலினி ”

” சாலினியா? என்ர மகளுக்கும் சாலினி தான்.”

வயோதிபர் மௌனமாகிப் போனார்.

” அம்மா தன்னுடைய அம்மா விட்ட போறதில்லை.”

“ஏனெண்டு தெரியும உனக்கு?”

“ம்ம் ”

சாலினி தன் அம்மா விட்ட போவதில்லை என சொல்லிய போது சரனியாவுக்கு கண்கள் கலங்கி விட்டது.

சாலினி பலமுறை தன் வீட்டுக் கதைகளை சொல்லியிருக்கிறாள்.

சாலினி வீட்டுக்கு ஒரு பெண் பிள்ளை.மூன்று அண்ணன்மாருக்கு ஒரு தங்கை.

அம்மா, அப்பா, அண்ணன்மாரோடு சரனியா அழகிய ஒரு சோலையில் வாழ்ந்த மகிழ்ச்சியான குடும்பம்.

” அம்மா அப்பாவை காதலிச்சு கலியாணம் செய்தவா.அதலா அவங்கட அண்ணாக்கள் பேசுவினமாம் என்டு அம்மா அம்மம்மா வீட்ட போறதில்லை.”

” இதெல்லாம் யாருனக்கு சொல்லுறது?”

“அம்மா தான்”.

ஒவ்வொரு மாலையும் ஐந்துமணிவரையும் படிக்கும் பழக்கம் உடையவளாக சரனியா பழக்கப்பட்டிருந்தாள்.

ஆறுமணி வரை வீட்டு உறவுகள் பற்றி சரனியாவோடு சரனியாவின் அம்மா சாலினி கதைப்பது வழக்கம்.அப்படி கதைக்கும் போது தான் தன்னுடைய கதைகளையும் சாலினி சொல்லுவாள்.சரனியாவை வயதில் சிறியவள் என்று எப்போதுமே சாலினி எண்ணிப் பார்ப்பதில்லை.

சாலினி சரனியாவை எப்போதுமே தன்னொட்ட வயது தோழி போல் பாவனை செய்து கொள்வாள்.

வாமனும் அப்படித் தான்.

பலமுறை சாலினியை அவள் அம்மா அப்பாவை பார்க்க போகும்படி சொல்லியும் அவள் கேட்ட பாடில்லை.

சாலினியோ தன்னுயை வேலையும் தானுமாக வீட்டோடு காலம் ஓட்டினாள்.

வாமனும் சாலினியும் வைத்தியர்கள்.எவ்வளவே வேலைப்பழு இருந்தாலும் சரனியாவோடு பழகுவதற்கு நேரம் ஒதுக்கத் தவறியதில்லை.

வாமனும் சாலினியும் தங்கள் தினசரி வேலைகளை ஒழுங்கமைத்திருந்தனர்.அதில் சரனியாவோடும் பழகி பகிர நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

” அம்மாவுக்கு மூன்று அண்ணாக்கள் இருக்கினமாம்.அம்மாவில நல்ல பாசமமாம்.”

” அவையெல்லாம் இப்ப எங்க என்று தெரியுமா உனக்கு”

” ஓம்”

” எங்கயாம்?”

” மூன்று பேரும் வெளிநாட்டிலயாம்”

” அப்படியா?” நல்லா கதைக்கிறாய் பிள்ளை.”

“அப்பிடித்தான் அப்பப்பாவும் சொல்லுவார்.”

” அப்பா சொல்லுவார் நான் அம்மா மாதிரியாம் என்டு.”

பேரூந்து வரும் சத்தம் கேட்கவே

” பேரூந்து வருகுது போல.”

” ஓம் ஐயா”

எழுந்து கொண்டார்.தனுடைய கைப்பையை சரிசெய்து கொண்டவாறு ஆயத்தமானார்.

பேரூந்தை மறிப்பதற்கு கையை நீட்டினார் வயோதிபர்.

பேரூந்தும் தரிப்பிடத்தில் நின்றது.வயோதிபரும் பேரூந்தில் ஏறிக் கொள்ள எத்தனித்து தன் கையினை பேரூந்து ஏறுபிடியில் பற்றிப்பிடித்தவாறு காலைத் தூக்க

” அப்பா”

தன் மகளின் குரல் போல் உள்ளுணர்வு சொல்ல இறங்கிக் கொண்டார்.சுற்றும் முற்றும் பார்த்தார்.

சரனியாவையும் ஒரு முறை பார்த்துக் கொண்டார்.

பேரூந்துக்கு எதிராக வீதியின் ஓரமாக வந்து நின்றிருந்த காரினை கவனிக்கத் தவறியவராக மீண்டும் ஏறிக் கொள்ள முயன்றார்.

பேரூந்து நடத்துனரோ

” ஐயா ஏறுங்கோவன்.”

குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இயந்திரமயமான இந்த உலகத்தில் தாமதிக்க முடியாத இயங்கு நிலைகளாகவே எல்லாம் இருந்தன.

வயோதிபர் மீண்டும் ஏறிக் கொண்டார்.

பேரூந்தின் முன் பக்கமாக வந்த அவள் பேரூந்தை நிறுத்துமாறு குறிப்புணர்த்தியவாறு தன் காரிலிருந்து இறங்கி பேரூந்தை நோக்கி நடந்தாள்.

பேரூந்தில் ஏறி இருக்கையில் இருந்த வயோதிபர் தன் இருப்பை சரி செய்து கொண்டு சரனியாவுக்கு விடையளிப்பதற்காக கையசைத்து அவளைப் பார்த்தார்.

அவரது பார்வையில் சரனியாவோடு அவரது மகளும் நின்றிருந்தாள்.

” அப்பா வாங்கோ”

சரனியாவின் அம்மா சாலினி தான் வயோதிபரின் ஒரேயொரு மகள்.

பத்து வருடங்களுக்குப் பிறகு இன்று தான் மகளை மீண்டும் காண்கின்றார்.

பாசப்பிணைப்பினை, தூக்கி வளர்த்து அரவணைத்து ஆராத்தித்த உணர்வுகளை அடக்கிக்கொண்டவராக தன் முகத்தில் அமைதியை படரவிட்டிருந்தார் வயோதிபர்.

பேருந்தை விட்டு இறங்கியவாறே நடத்துநருக்கு

” மன்னிக்கனும் தம்பி. அவள் என்ர மகள்.”

“நீங்கள் போங்கோ”

தன்னுடைய பண்பாட்டின் வெளிப்பாடாக பேரூந்தை தாமதிக்க வைத்துவிட்டதற்காக மன்னிப்பைக் கேட்டவாறே நடத்துநருக்கு விடைகொடுத்தபடி பேரூந்தை விட்டு இறங்கினர்.

பேரூந்து மீண்டும் தன் இயல்பை பெற்றுக்கொண்டது.

ஆளரவம் மிக்க அந்த பேரூந்துத் தரிப்பிடம் சரனியாவின் வீட்டுக்கு அருகில் இருந்தது.

அதனால் சரனியாவும் பாடசாலைக்கு இயல்பாகவே எல்லாப் பிள்ளைகள் போலவும் நடந்தே போய் வருவாள்.அவளும் அதையேதான் விரும்பியிருந்தாள்.

வளரும் போது எல்லாவற்றையும் கற்றுவிட வேண்டும் என்பதில் வாமனும் சாலினியும் கூடிய கவனம் எடுத்திருந்தார்கள்.

” அப்பா”

இப்போது சாலினியின் குரலில் சோகம் கலந்திருந்தது.

“எங்கே இருக்கிறிங்கள்?”

என்று வயோதிபர் தன் மகளைப் பார்த்து கேட்ட அதே வேளை

” எங்கே இங்கால வந்தனிங்கள்?” என்றாள் சாலினியும்.

எத்தனிப்புக்கள் ஒரே தடவையில் வார்த்தைகளை கொட்டிவிட்டன.

உயர்தரம் படிக்கும் போது வாமனை காதலித்துக் கொண்டு படிப்பை இடையில் விட்டுவிட்டுப் போனவள்.

பாடசாலைக்கு போன தன் மகளை காணவில்லை என்று தேடியலைந்த தந்தைக்கு இன்று தான் தன் மகளை காணக் கிடைத்தது.

பலமுறை தந்தையை அருகில் பார்த்திருந்த போதும் சாலினியால் பேசிக்கொள்ள முடியவில்லை.உள்ளூர இருந்த மனப்பயம்.தந்தை காணாதபடி மறைந்து கொள்வாள்.

சரனியாவின் தாத்தா பற்றிய கேள்விகளால் தான் தன் மனப்பயத்துக்கு தெம்பூட்டிக்கொண்டு இன்று துணிச்சலோடு தந்தையுடன் பேச முன்னைந்திருந்தாள்.

பாசம் போராட்டத்தில் ஒரு தந்தையின் தவிப்பினை உணர மறந்த மகளாக சாலினி இன்றுவரை இருந்துவிட்டாள்.

அன்று தேடத்தொடங்கிய தேடல் நீண்டு இன்றோடு முடிந்து போனது.

” அப்பா”

என்று அழைத்த சாலினி ஏதோ சொல்ல முனைந்ததை உணர்தவராக

” வேண்டாம்.நீ எதுவும் சொல்ல வேண்டாம்.”

“உன்ர வீட்ட என்னை கூட்டிட்டுப் போவாயா?”

சாலினி உடைந்து போய் விட்டாள்.தனக்குள் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தவளின் அழுகை இப்போது மெல்ல வெளிப்பட்ட ஆரம்பித்து விட்டாள்.

மற்றொரு கார் பேரூந்துத் தரிப்பிடத்தில் வந்து நின்றது.அதிலிருந்து வாமன் இறங்கினான்.

” தம்பி வாமன்”

” என்ன ஐயா பேரூந்தை விட்டிட்டிங்களா?”

” ஓமடா தம்பி.ஆனாலும் என்ர மகளை கண்டு பிடிச்சிட்டன்.”

” ஆரய்யா”

” இதோ இவள் தான்.”

என்று சாலினியை காட்டினார்.

வாமனுக்கு ஒரே திகைப்பு.

” ஐயா.இவள் சாலினி.என்னுடையா மனைவி.”

” வாமன்.அப்பாவை உங்களுக்கு முதலே தெரியுமா?”

” அப்பாவுக்கு கிளினிக் பாக்கிறதே நான் தானே”

மல்லாவியில் இருந்து மாதமொரு முறை மாட்சோலைக்கு கிளினிக் சிகிச்சைக்காக வந்து போகும் அந்த வயோதிபர் ஒவ்வொரு முறையும் தன் மகளை காண வேண்டும் என்று ஊற்றங்கரை சித்திவிநாயகரை வணங்கிப் போவது வழமை.

இன்றும் வரும் போது ஆலயம் சென்று வணங்கி வேண்டிக்கொண்டார்.

தன் மகள் காதலித்துக் கொண்டு போய்விட்டாள் என்று ஒரு முறைகூட கோபப்பட்டுக் கொள்ளாதவர்.பிரிவுத் துயரால் நித்தம் துவண்டு போவதுண்டு.

சாலினியாகவே முடிவெடுத்துக் கொண்டாள் தன்னை வீட்டில் எல்லோரும் பேசுவார்கள் என்று.

பத்தாண்டுகளில் சாலினி எப்படி இருக்கிறாள் என்று கூட அறிய முடியாதவுக்கு தன்னுடைய செயற்பாடுகளை ஒழுங்கமைத்திருந்தாள்.

அந்த இடைக்காலத்தில் படிப்பை முடித்து வைத்தியராக கடமையாற்றும் வகையில் செயற்பட்டிருக்கின்றாள் என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்.

அறுபதை எட்டிவிட்ட கிழம் என்று அடிக்கடி செல்லமாக திட்டு வாங்கும் இந்த மானோகரன் தான் சாலினியின் அப்பா.

சாலினி தன் தந்தையின் கைகளை பற்றிக் கொண்டாள்.எதையும் பேசவில்லை.

” மன்னிக்கனும் என்னை”

பழைய நினைவுகளை மீட்டுக்கொண்ட வாமன் மனோகரன் அருகில் வந்து மன்னிப்புக் கேட்டான்.

புன்னகை மட்டும் சிந்திய மனோகரன் உரிமையோடு வாமனையும் சாலினியையும் அணைத்துக் கொண்டார்.

நடப்பவற்றை எல்லாம் கண்கொட்டாது அவதானித்துக் கொண்டிருந்தாள் சரனியா.

சரனியாவை அவதானித்த வாமன்

” வாங்கோ சரனி” என்றான்.

“இன்னுமொரு சாலினி வளர்ந்துகொண்டிருக்கிறாள் போல”

மனோகரன் சொல்லிக்கொண்டார்.

” நான் எல்லாம் அம்மா மாதிரி இருக்க மாட்டன்.காதலிச்சாலும் அப்பாட்ட வந்து சொல்லுவன்”.

என்றவள் வாமனோடு வந்து ஒட்டிக்கொண்டாள்.

இப்பொழுது எல்லாம் சின்னக் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் பெரிதாகவே இருப்பதாக வாமன் எண்ணிக் கொண்டான்.

” சாலினி ”

” சொல்லுங்கோ”

” அப்பாவை கூட்டிக்கொண்டு வீட்ட போங்கோ.
நான் வித்தியானந்த கல்லூரி விளையாட்டுப் போட்டிக்கு போய் வரவேண்டும்.”

” கொஞ்சம் வேளைக்கு வந்தால்……”

தொக்கு விட்டு இழுத்தாள் சாலினி.

“ம்ம் வந்தால்.”

” அம்மா வீட்ட போய் வரலாம்.மல்லாவிக்கு”

” ஓம்”

புன்னகையோடு சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனான் வாமன்.

மனோகரனை அழைத்துக் கொண்டு சாலினியும் தன் வீடு நோக்கி புறப்பட்டாள்.

” அம்மா”

மனோகரனுக்கு பக்கத்தில் இருந்த சரனியா அழைத்தாள்.

” என்ன?” கண்ணாடியில் பார்த்தவாறே கேட்டாள் சாலினி.

” ஒன்டுமில்லை”.

குறும்புக்கார சரனியாவின் பதிலாக இருந்தது.
000

நதுநசி

By admin