இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்புகிறது.
தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்கு கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது. அதற்கு முன்னதாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு ஆளில்லாமலேயே திரும்பும்.
ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கான சோதனைகளை நாசாவும் போயிங் நிறுவனமும் செய்து முடித்துள்ளன. செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும். இறுதிக்கட்டத்தில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது வானிலையில் பிரச்னை எழுந்தாலோ இந்த பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலம் இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. இந்த விண்கலத்தில் தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகின்றனர். க்ரூ 9 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல ஏதுவாக, அதற்கு முன்னதாக வரும் 6-ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அங்கிருந்து புறப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்த பிறகு ஸ்டார்லைனர் விண்கலம் பூமியை வந்தடைய 6 மணி நேரமாகும். அது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும். ஸ்டார்லைனர் விண்கலம் சனிக்கிழமை, செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அதிகாலை 12.03 மணிக்கு திட்டமிட்டப்படி தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்டார்லைனர் விண்கலம் ஒரு பாராசூட்டைப் பயன்படுத்தி தரையிறங்க உள்ளது. தரையிறங்கும் போது விபத்து ஏற்படாமல் தடுக்க ஏர்பேக்குகள் பயன்படுத்தப்படும். தரையிறங்கும் தளத்தில் தயாராக இருக்கும் குழு, விண்கலத்தை புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள போயிங் ஸ்டார்லைனர் ஆலைக்கு எடுத்துச் செல்லும்.
ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்த பின் விண்கலத்தின் செயல்பாடுகளை ஆளில்லா விமானத் தகவல் அமைப்பு ஒன்றின் மூலம் அதன் பணி மேலாளர்கள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் பயணத்தின் போது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும். ஹூஸ்டனில் உள்ள ஸ்டார்லைனர் மிஷன் கண்ட்ரோல் அலுவலகம் மற்றும் புளோரிடாவில் உள்ள போயிங் மிஷன் கண்ட்ரோல் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள நிபுணர்கள் ஸ்டார்லைனர் விண்கலத்தின் செயல்பாட்டை கண்காணிப்பார்கள். ஏதேனும் தேவை எழும் பட்சத்தில் விண்கலத்திற்கு உரிய கட்டளைகளை அவர்கள் அளிப்பார்கள்.
இதற்கு முன்பு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி சுற்றுப்பாதையில் மேற்கொண்ட இரண்டு சோதனைப் பயணங்களின் போது ஆள் இல்லாமல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் செயல்முறையை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த பயணங்களில் ஒன்றில், அது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து வரும் செயல்முறையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
நாசா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் செல்வதே போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பணியாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் இந்த விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர்
ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்பட்டன. முடிவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். செப்டம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்க உள்ள ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ 9 விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக விடப்படும்.
“விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும். அந்த வகையில்தான், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டார்கள். அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்யப்பட்டது.”, என்று நாசா அதிகாரி பில் நெல்சன் கூறுகிறார்.
ஸ்டார்லைனர் பயணம் போயிங்கிற்கு ஏன் முக்கியமானது?
விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நாசா தனது சொந்த விண்கலத்தை பயன்படுத்தி வந்தது.
இந்த செயல்பாட்டை தனியார்மயமாக்க நாசா முடிவு செய்த போது, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனத்திற்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலங்களை பயன்படுத்த நாசா ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டனர்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஆளில்லாமல் விண்வெளி பயணம் மேற்கொள்ள சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் தடைகளும் தாமதங்களும் இருந்தன. இதனால் விண்வெளி நோக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஸ்டார்லைனர் விண்கலம் புறப்பட்டது.
ஜூன் 6-ஆம் தேதி அன்று, பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதையும், விண்கலத்தின் உந்துவிசைகள் செயலிழந்ததையும் நாசாவும், போயிங் நிறுவனமும் கண்டறிந்தன.
அப்போதிலிருந்து, விண்கலத்தை பழுது பார்க்க பொறியியல் குழுக்கள் முயற்சி செய்தன. விண்கலத்தில் இருந்து பல்வேறு தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும், விண்கலத்தை பூமிக்கு மீண்டும் கொண்டு வர பல்வேறு திட்டங்களும் முடிவு செய்யப்பட்டன.
ஆனால், சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் அதே விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு திரும்ப பாதுகாப்பானது இல்லை என்பதாலும், அதன் செயல்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதையும் உணர்ந்ததாலும், அவர்களை வேறொரு விண்கலம் மூலம் மீண்டும் பூமிக்கு கொண்டு வர நாசா முடிவு செய்தது.
போட்டியாளரான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா தீர்மானித்தது போயிங் நிறுவனத்திற்கு பெரிய அடி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆளில்லா பயணத்தின் போது ஸ்டார்லைனர் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தற்போது அனைவரின் பார்வையும் இருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களின் வழக்கமான பயணத்திற்கு நாசாவின் வணிகக் குழு திட்டத்தில் போயிங் நிறுவனம் அனுமதி பெற வேண்டும். இப்போது ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்பியதும், இந்த பயணம் தொடர்பான அனைத்து தரவுகளும் ஆய்வு செய்யப்படும். நாசா சான்றிதழைப் பெற வேறு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் போயிங் நிறுவனம் முடிவு செய்யும்.