
பட மூலாதாரம், Getty Images
1999ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆட்டம் அது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் கொடுத்த எளிதான கேட்சை தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் தவறவிட்டார். சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெல்லச் செய்த ஸ்டீவ் வாக், பரிசளிப்பின் போது பேசுகையில், ‘கிப்ஸ் தவறவிட்டது கேட்சை அல்ல. உலகக்கோப்பையை’ என்று குறிப்பிட்டார்.
ஆம் அதுதான் நடந்தேறியது. தட்டுத் தடுமாறி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்திருந்த ஆஸ்திரேலியாவால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி சமனில் முடிந்தாலும் இந்த வெற்றியின் மூலமாகவே இறுதிப் போட்டியில் பிரவேசித்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்து ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வசமாக்கியது வரலாறு.
24 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இன்றும் கூட ஸ்டீவ் வாக்கின் அந்த வார்த்தைகள் கிரிக்கெட் உலகில் நினைவுகூரப்படுகிறது. அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்த ஆஸ்திரேலியா வெல்ல முடியாத அணியாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கோலோச்சியது.
குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் சுப்மான் கில்லின் கேட்சை டிம் டேவிட் தவறவிட்டதும் அதே போன்றதுதான். அது மும்பை இந்தியன்ஸ் அணியை நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்தே வெளியேற்றியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வானில் புதிய நட்சத்திரம்
சுப்மன் கில் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது இந்த கேட்சை டிம் டேவிட் தவறவிட்டார். அதன் பிறகு 32 பந்துகளில் அரைசதம் அடித்த கில், அடுத்த 17 பந்துகளிலேயே மின்னல் வேகத்தில் சதத்தை எட்டிவிட்டார். ஒட்டுமொத்தத்தில் 60 பந்துகளை சந்தித்த அவர் 129 ரன்களைக் குவித்துவிட்டார். 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை அடித்த கில், அதன் மூலமே 88 ரன்களை திரட்டிவிட்டார். அவரது ஸ்டிரைக் ரேட் 215.
நடப்பு ஐ,பி.எல். தொடரின் லீக் சுற்று முடிவில், சச்சின், கோலி வரிசையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ‘ரன் மெஷின்’ யார்? என்ற வினாவுக்கு விடையாக சுப்மன் கில்லுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் போட்டியில் இருந்தார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அவரது ஆட்டம், மற்ற எல்லா வீரர்களையும் பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் வானில் அடுத்த நட்சத்திரமாக அவரை உயர்த்திருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜாம்பவான்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டு
தோனி தலைமையில் இந்தியா இருபது ஓவர், ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்ற போது தொடர் நாயகனாக ஜொலித்த அன்றைய ‘இளவரசர்’ யுவராஜ் சிங், “இந்திய கிரிக்கெட்டின் புதிய இளவரசரின் மற்றுமொரு சிறந்த இன்னிங்ஸ்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார். “இளம் மேஸ்ட்ரோவிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான சதம் வந்திருக்கிறது. எதிர்கால இந்திய கிரிக்கெட் பிரகாசமாக ஜொலிக்கிறது.” என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளையே டி20 போட்டிகளைப் போல ஆடிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக், மும்பை இந்தியன்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சுப்மான் கில் ஆடிய அதிரடி ஷாட்களை புகழ்ந்துள்ளார். “4 போட்டிகளில் 3 சதம் கண்டிருப்பது சிறப்பானது. மிகப்பெரிய ஜாம்பவான்களைப் போன்றே நிலையான ஆட்டமும், ரன் வேட்டைக்கான தாகமும் கொண்டவராக சுப்மன் கில் இருக்கிறார்” என்று சேவாக் கூறியுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி ஏ.பி. டிவில்லியர்ஸ், மைக்கேல் வாகன் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களும் கில்லை பாராட்டியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த பெரிய வீரர் சுப்மன் கில் என்று மைக்கேல் வாஹன் குறிப்பிட்டுள்ளார். இந்நாள், முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, ஐ.பி.எல். அணிகள் பலவும் சுப்மன் கில் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளன.
ஆரஞ்சு தொப்பி ‘கில்’ வசமாகிறது
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சுப்மன் கில் இதுவரை 16 ஆட்டங்களில் 851 ரன்களைக் குவித்து, அதிக ரன் சேர்த்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். 3 சதங்கள், 4 அரைசதங்களை அடித்துள்ள அவரது ரன் சராரி 60.79. 2 போட்டிகளில் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்துள்ளார். மொத்தம் 33 சிக்சர்கள், 78 பவுண்டரிகளை அவர் விளாசியுள்ளார். அவரது ஸடிரைக் ரேட் 156.43.
இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆரஞ்சு தொப்பி கில்லுக்கே என்பது உறுதியாகிவிட்டது. ரன் குவிப்பில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் டெவோன் கான்வே மட்டுமே இன்னும் ஒரு போட்டியில் விளையாடுவார். அவர் மொத்தம் 625 ரன்களையே சேர்த்திருக்கிறார். இறுதிப்போட்டியில் கில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் கூட, அவரை முந்துவதற்கு கான்வே 227 ரன்களை சேர்த்தாக வேண்டும். ஏதேனும் அதிசயம் நடந்தால் ஒழிய அது நடக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த தொடரில் ஆரஞ்சு தொப்பி சுப்மன் கில் வசமாகிறது.
கோலி சாதனையைத் தகர்க்க வாய்ப்பு
ஆரஞ்சு தொப்பிக்கும் மேலாக சுப்மன் கில் முக்கியமான மைல்கல்லை கடக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அதாவது, சச்சின், கோலி வரிசையில் வைத்துப் பார்க்கப்படும் அவர், ஒரே ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கைகூடி வந்துள்ளது. இறுதிப் போட்டியில் 123 ரன்கள் சேர்த்தால் கோலியின் சாதனையை கில் தகர்க்கலாம்.
2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி 4 சதங்களுடன் 973 ரன்களைக் குவித்ததே இன்னும் சாதனையாக தொடர்கிறது. கடந்த 4 போட்டிகளில் 3 சதம் அடித்து சூப்பர் பார்மில் இருக்கும் சுப்மன் கில், அதே பார்மைத் தொடர்ந்தால் இறுதிப்போட்டியில் சதம் அடிப்பது பெரிய விஷயமாக இருக்காது. அப்போது ஒரே ஐ.பி.எல். தொடரில் அதிக சதம் என்ற கோலியின் சாதனையையும் கில் சமன் செய்வார்.
சுப்மன் கில்லின் நேற்றைய ஆட்டத்தைப் பாராட்டும் வகையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். கில் சதம் கண்ட புகைப்படத்துடன் ஒளிரும் நட்சத்திரத்தை கோலி பதிவிட்டிருந்தார்.


பட மூலாதாரம், INSTAGRAM/ VIRAT KOHLI
சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்த கில்
கோலியின் இந்த கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்தான் சுப்மன் கில் தற்போது விஸ்வரூம் எடுத்து நிற்கிறார். சுப்மான் கில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று விதமான போட்டிகளிலும் அழுத்தமாக தடம் பதித்துவிட்டார்.
கடந்த ஜனவரியில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் கடந்து அசத்தினார். 149 பந்துகளைச் சந்தித்த அவர், 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகளுடன் அதனை சாதித்தார். 43-ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 150 ரன்களை எட்டினார். 48 மற்றும் 49-ஆவது ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை அடித்து இரட்டைச் சதத்தை எட்டினார்.
ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன், சாதனை வீரன்


பட மூலாதாரம், Getty Images
சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த இன்னொரு ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன். களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கும் திறன் பெற்றவர். அவரது ஆட்டம் 360 டிகிரி ஆட்டம் என்று கூற முடியாது. ஆனால் எல்லா வகையான கிரிக்கெட் ஷாட்களையும் அவர் ஆடுவதை களத்தில் பார்க்க முடிகிறது. புல் ஷாட்களும், கவர் டிரைவ்களும் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரரை நினைவூட்டக் கூடியவை. இரண்டு ஃபீல்டர்களுக்கு நடுவே குறுகிய இடைவெளியிலும் பந்தை துல்லியமாக பவுண்டரிக்கு அனுப்புவதில் அவர் தேர்ச்சி பெற்றவர்.
ஒரு நாள் போட்டியில் குறைந்த வயதில் 150 ரன்களை அடித்தவர், 200 ரன்களை அடித்தவர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு உண்டு. ஜாம்பவான்கள் பலருக்கும் கிடைக்காத பெருமை இது. அதே போல் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 1,000 ரன்களை குவித்தவரும் கில்தான்.
உடல் தகுதியை பராமரிப்பதில் கவனம்
சச்சினோ, தோனியோ, கோலியோ அல்லது காலிஸோ… கிரிக்கெட்டில் நீண்ட காலம் கோலோச்சிய அனைவருமே உடல் தகுதியை கண்போல் பாதுகாத்து வந்தவர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரையிலும் அவர்களது உடல் தகுதி குறித்த கேள்வியே எழுந்தது கிடையாது. அந்த அளவுக்கு உடல் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள்.
அத்தகைய சிறப்பான உடல் தகுதியை பராமரித்ததால்தான் அவர்களால் தொடர்ச்சியான சிறந்த ஆட்டத்தை, பங்களிப்பை அவர்கள் சார்ந்த அணிக்கும், அதன் வழியே கிரிக்கெட்டிற்கும் தர முடிந்தது. சுப்மன் கில்லிடமும் அத்தகைய தன்மையை காண முடிகிறது.
ஸ்டைலிஷான பேட்டிங்கால் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த சுப்மன் கில், ஸ்டைலிஷான தோற்றத்தால் ஏராளமான பெண் ரசிகைகளையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார். சிறப்பான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துவிட்ட அவர், அதனை தொடர்ச்சியாக களத்தில் வெளிப்படுத்தத் தேவையான உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்துவதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
சச்சின், கோலி வரிசையில்…
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலேயே மிகவும் திறமை வாய்ந்த இளம் வீரராக அடையாளம் காணப்பட்டவர் சுப்மன் கில். ‘பேட்டிங் சுவர்’ ராகுல் திராவிட்டின் பயிற்சிக் களத்தில் பட்டை தீட்டப்பட்டு இன்று வைரமாக அவர் ஜொலிக்கிறார்.
இந்த ஆண்டு சுப்மன் கில்லுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளில் கலக்கியதன் மூலம் வளரும் நட்சத்திரமாக பார்க்கப்பட்ட சுப்மன் கில், ஐ.பி.எல். திருவிழா முடியும் தருவாயை எட்டியுள்ள இந்த நேரத்தில், இந்திய கிரிக்கெட்டின் இளவரசராக பார்க்கப்படும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டிற்கு சச்சின் ‘கடவுள்’, கோலி ‘கிங்’ என்றால், ‘பட்டத்து இளவரசர்’ என்ற இடத்தை அடைவதற்கான தகுதி தனக்கு உண்டு என்று களத்தில் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் சுப்மன் கில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: