சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் போட்டிகள் நடைபெறுகின்றன. தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயமாக இது பார்க்கப்படுகிறது. மழை, நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகள் என பல்வேறு தடைகளை தாண்டி இந்தப் போட்டிகள் தொடங்கியது எப்படி?
ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை நடத்துவதற்கு சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) சான்றை பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
நேற்று இரவு சென்னையில் கடும் மழை பெய்த காரணத்தால் பந்தயத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக எஃப்.ஐ.ஏ-வின் அனுமதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
மழை பெய்ததால் 12 மணிக்குள் எஃப்.ஐ.ஏ சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலநீட்டிப்பு வழங்குமாறு கோரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் ரேசிங் நிறுவனம் சார்பில் சனிக்கிழமை மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்குமாறு கோரப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரவு 8 மணிக்குள் எஃப்.ஐ.ஏ சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?
இந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார், பாலாஜி அமர்வு விசாரித்தது. மாலை ஆறு மணிக்குள் சான்று கிடைத்துவிடும் என ரேசிங் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. “ஏழு மணி வரை அவகாசம் போதுமா… அதற்குள் பெற்றுவிட முடியுமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு கூடுதல் வழக்கறிஞர் ரவீந்திரன் தனது வாதத்தில், “சான்று கிடைக்காவிட்டால் பந்தயம் நடத்தக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அந்த உத்தரவு இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.
தனியார் ரேசிங் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன், “மழை காரணமாகவும், வளைவு அகலமான ஒரு பாதையை சரிசெய்யவும் நேரம் தேவைப்படுகிறது” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ஆயிரக்கணக்கான மக்கள் பந்தயத்தைக் காண வந்துள்ளதால், இன்று (ஆகஸ்ட் 31) இரவு 8 மணிக்குள் சான்று பெறுவதற்கு அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
இரவு 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதன் நகலை மனுதாரருக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது
இதன் தொடர்ச்சியாக, சர்வதேச ஆட்டேமொபைல் கூட்டமைப்பின் முறையாக அனுமதி கிடைத்தது. அதன் பிறகு சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் முறைப்படி தொடங்கியது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
16 திருப்பங்கள்… டிக்கெட் விலை என்ன?
தீவுத்திடல், நேப்பியர் பாலம் முதல் போட்டி நடக்கும் தூரம் வரை இரும்புக் கம்பிகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3.5 கி.மீ தூரத்துக்கு நடக்கவுள்ள ஃபார்முலா 4 பந்தயம், 16 திருப்பங்களைக் கொண்டதாக உள்ளது. தீவுத் திடலில் போட்டி தொடங்கி அதே தீவுத் திடலில் முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 8,000 பேர் நிகழ்ச்சியை ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்கத்தில் தகுதிச் சுற்று போட்டிகளும் பின்னர் இறுதிச் சுற்று போட்டிகளும் நடக்க உள்ளன. இடைப்பட்ட நேரத்தில் கார் பந்தய சாகசங்களும் நடைபெற உள்ளதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கார் பந்தயங்களில் ஃபார்முலா 1 ரேஸ் என்பது சர்வதேச அளவில் நடைபெறும். இதை ஃபார்முலா 2, 3, 4 எனப் பிரித்து வைத்துள்ளனர். ஃபார்முலா 2 கார் பந்தயங்களில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.
சென்னையில் நடக்கும் போட்டியில் காரின் வேகம் மணிக்கு 240 கி.மீ வரையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, 1600 சிசி திறன் கொண்ட இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டு போட்டிகளுக்கும் தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டின் விலை 1,699 ரூபாயில் இருந்து 16,999 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மறுநாள் மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை போட்டிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பயணிக்கவும் இவ்விரு நாட்களும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டே கார் பந்தயம் நடத்த திட்டம்
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் அமைப்பு இணைந்து, கடந்த ஆண்டு சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த முடிவு செய்தன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் பந்தயம் நடக்கவிருந்த சூழலில், மிக்ஜாம் புயலால் தடைபட்டது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் முன்பே போட்டியை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு முடிவு செய்தது.