“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு”. என்ற வள்ளுவரின் குறளுக்கு இணங்க இவ்வுலகிற்கு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை வள்ளுவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதனாலதான் நீரின் மகத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் வான்மழைக்கு மிக முக்கியத்துவம் தந்தனர். ஆறுகள், குளங்கள் போன்றவற்றில் நீரை தேக்கி அதனைப் பயன்படுத்தி வந்தனர் உலகத்திற்கே நீர் மேலாண்மை சொல்லிக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். இந்த நிலை இவ்வாறு இருக்க தற்சமயம் மழை என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொண்டுள்ளது.
அய்யய்யோ இந்த வருஷம் எப்படி மழை பெய்யுமோ! எந்தெந்த பகுதிகளெல்லாம் பாதிக்க போகுதோ தெரியலையே எனக்கு குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தொலைக்காட்சியில் வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள் மத்திய மற்றும் வடகிழக்கு அந்தமான் கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயல் சின்னமாக வலுவடைந்து உள்ளதால் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான ஒரு செய்தியை ஒரு தொலைக்காட்சியில் பார்க்கும் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். அதுவும் சமூக வலைதளங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ள காலத்தில் எப்பேர்பட்ட தாக்கத்தை அது ஏற்படுத்துகிறது என்பதை நாம் பார்க்க வேண்டியதுள்ளது.இதற்கு யார் பொறுப்பு ஆண்டுக்காண்டு மழை காலம் வரும் போதெல்லாம் இதுதான் நிலையா இதற்கு வேறு எதுவும் தீர்வு இல்லையா சென்னையில் தான் பாதிப்பு என்று நினைத்தால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்த பாதிப்புகள் உள்ளன. ஏன் உலக நாடுகளில் பலவற்றில் கூட இது போன்ற பாதிப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன இதற்கு என்ன செய்ய வேண்டும் இதற்கான தீர்வு என்ன கொஞ்சம் சற்று விரிவாக பார்ப்போம்.
பருவ மழைக்காலம்:
இந்தியாவில் ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி குஜராத் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை நன்கு பெய்துள்ளது.தற்போது தென்மேற்கு பருவமழை என்பது விலகி அக்டோபர் 18 அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 1 முதல் பெய்யும் மழை அனைத்தும் வடகிழக்கு பருவமழையாகவே கணக்கிடப்படும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் துவங்கும் ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 15ல் துவங்கியது அதன்படி ஒரு சில இடங்களில் இயல்பை விட 6.1 சென்டிமீட்டர் மழை அதிகம் செய்துள்ளதாகவும் தென் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையும் பிற மாவட்டங்களில் அதிக மழையும் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூர் நகர் பகுதி பெய்த கன மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மேலும் பீகாரில் கனமழையால் 13 லட்சம் மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள கங்கை மற்றும் கோசி உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதற்கு இன்னொரு முக்கிய காரணம் அண்டை நாடான நேபாளத்தில் கனமழை பெய்து வருவதால் அதன் பாதிப்பு பீகாரில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் இதன் காரணமாக பீகாரில் 12 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள தடுப்பணைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள்:
எப்போதெல்லாம் வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுகின்றதோ அப்போதெல்லாம், பெரு நகரங்கள் துவங்கி, சிறிய நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு தொற்றிக் கொள்கின்றது இந்த ஆண்டு வெள்ளத்தால் என்னென்ன பாதிப்பு வருமோ,உயிர் சேதம் ஏற்படுமோ, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் நமது பொருள்கள் உடைமைகளுக்கு யார் பொறுப்பு அவற்றை என்ன செய்வது குறிப்பாக இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களை எங்கு கொண்டு போய் பாதுகாப்பாக நிறுத்துவது என்பதில் துவங்கி நமக்கு எவ்வாறு உணவு கிடைக்கும்.எப்போதெல்லாம் கிடைக்கும். யார் யார் தருவார்கள். நாம் என்னவெல்லாம் கையில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். என்பதெல்லாம் ஒரு மிகப்பெரிய குழப்பமாக இருக்கும் ஒரு சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு மழை எச்சரிக்கை விடுத்தது ஏனென்றால் கடந்த ஆண்டு சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு விடப்பட்ட எச்சரிக்கையால் சென்னை மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டனர்.
சென்னையில் கடந்த ஆண்டு கடுமையாக பாதித்த வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது கார்களை அங்குள்ள மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடிவு செய்ததன் விளைவு பல்லாயிரக்கணக்கான கார்கள் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இருபுறத்திலும் நிற்பதை பார்க்க முடிந்தது காவல்துறை எச்சரித்தும் இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அவதாரத்தொகை செலுத்து நேரிடும் என்று தெரிவித்தும் கார் உரிமையாளர்கள் யாரும் தங்களின் வாகனங்களை எடுக்க முன்வரவில்லை இதனால் அரசே நிறுத்திக் கொள்ளுங்கள் என அனுமதி வழங்கி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளம் பாதிக்கப்படும் பொழுது உயிர் பலியும் அரசுக்கு பெரும் பொருள் செலவு ஏற்படுகின்றது. வெள்ளத்தில் சிக்கி வரை மீட்க பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க அவர்களுக்கு தேவையான உணவு உடை போன்றவற்றை வழங்குவது சாலைகள் துண்டிப்பு போன்றவற்றிற்கு அரசு மிக அதிக பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. சமீபத்தில் பீகாரில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணியின் போது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளத்தில் தரை இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் அந்தப் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது.வீடுகளை வெள்ளம் சூழ்வதால் அரசிற்கு மட்டும் இழப்பல்ல பொது மக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது பொதுமக்களின் உடமைகள் மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் சான்றிதழ்கள் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் போன்றவை பாதிக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது.
காலநிலை மாற்றம்:
மழையை நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகள் முன்பெல்லாம் சரியாக வானிலையைக் கணிப்பார்கள்,ஆம்! மேகம் கிழக்கே இறங்கி இருக்கு இன்னைக்கு நல்ல மழை இருக்குப்பா, நல்ல மழை பெய்யட்டும் அப்பதான் பயிர் நல்லா முளைக்கும், ஒரு மழை வந்தா தான் நல்லது அப்பத்தான் இந்த வருஷம் நல்லா வெள்ளாம ( விளைச்சல்)எடுக்க முடியும். எப்பா டி ஒரு வழியா பயிர் அறுவடை பண்ண போறோம், அய்யய்யோ ஏய் இன்னைக்கு மேற்க மழை மேகமா இருக்கு ஆனா நல்ல காத்தடிக்கு நம்ப முடியாது திடீர்னு மழை வந்தாலும் வந்துரும் சீக்கிரம் சீக்கிரம் நனஞ்சிர போகுது எல்லாத்தையும் தொழுவத்துல போய் வச்சுருவோம். ஏனென்றால் தொழுவத்தில் மட்டும் தான் தானியங்கள், மிளகாய் வத்தல், மற்றும் வேறு எந்த வகையான விவசாய பொருட்கள் ஆனாலும் மழையில் நனையாதவாறு பாதுகாக்கும் இடம் அங்கு தான் இருக்கும்.
விதைப்பு முதல் அறுவடை வரை முன்பெல்லாம் சரியாக இருக்கும். எப்ப விதைக்கணும் எப்ப மழை பெய்யும் பயிர் எப்படி இருக்கு எப்ப அறுவடை பண்ணலாம் என்பது அவர்களுக்கு தெரியும் அதைப்போல வானிலையை சரியாக கனித்து வைத்திருப்பார்கள் அதெல்லாம் ஒரு பொற்காலம், அதெல்லாம் இப்ப மாறிப்போச்சு. காலநிலை மாறி போய்விட்டது மழை காலங்களில் வெயில் அடிக்கின்றது, தேவை இல்லாமல் மழை பெய்கின்றது இதெல்லாம் பருவநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள் அதுவும் குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன்முறையாக சகாரா பாலைவனத்தில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது சகாரா என்றாலே வறட்சி வெப்ப மட்டுமே நினைக்கு வரும் ஆனால் இந்த ஆண்டு அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி வழியும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது அதேபோல சென்ற ஆண்டு துபாயில் பெய்த கடும் மழை போன்றவை பருவநிலை மாற்றம் அடைந்து விட்டது என்பதனை நமக்கு உணர்த்துகின்றன. பருவநிலை மாற்றங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.
வானிலை ஆராய்ச்சியும் தொழில்நுட்பம்:
கடந்த ஜூன் மாதம் கேரள மாநிலம் வயநாட்டில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிர் இழந்தனர் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. இதற்கு அந்த மாநில அரசு மத்திய வானிலை ஆய்வு மையம் எங்களுக்கு சரியான முறையில் எச்சரிக்கை விடாததே குற்றம் சாட்டியிருந்தது ஆனால் மத்திய அரசோ அதனை மறுப்பு தெரிவித்திருந்தது. அண்மைக்காலமாக தமிழக கடலூர் மாவட்டங்கள் முன்பே கணிக்க முடியாத பேரிடர்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றன சென்ற ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, இதனை வானிலை மையத்தால் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்ய முடியவில்லை.ஒவ்வொன்றை நாம் எதிர்கொள்ளும் போதும் முந்தைய படிப்பினைகள் நமக்கு பயன் அளிப்பதில்லை, இது போன்று சென்னையிலும் அவ்வப்போது வானிலை மையத்தால் கணிக்க முடியாத எதிர்பாராத மழை பெய்து நகரத்தையே வெள்ளக்காடாக மாற்றி விடுகிறது. ஒரு சில நேரங்களில் புயல் எச்சரிக்கை விட்டும் மழை பொழியாமல் போய்விடுகின்றது இதற்கு போதிய வானிலை கட்டமைப்பும் நவீன உபகரணங்களும் இல்லை என்பது தான் உண்மை. இந்த நிலை இப்படி இருக்க மற்ற மாநிலங்களில் வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி தாக்கிய போது அவற்றை சரியாக கனிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை பழைய தொழில் நுட்பங்களால் இப்பணியை திறம்பட செய்ய முடியாமல் போனது. பெருமழை பாதிக்கப்பட்டபோது அதனை கணிக்க அப்பகுதி ரேடார் கண்காணிப்பு எல்லையில் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது இதனால் தமிழகம் போன்ற கடலோர மாநிலங்களில் பேரிடர் தாக்கங்களை கணித்து வலுப்படுத்த வேண்டி உள்ளது. உலக நாடுகளில் அமெரிக்காவில் வானிலை கணிப்பிற்காக160 பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இந்தியாவில் மொத்தம் 39 ரேடர்கள் மட்டுமே உள்ளன.இரு ரேடார் களுக்கு இடையே உள்ள தூரம் 432 கிலோமீட்டர் ஆக உள்ளது அதனால்தான் வானிலை முடிவுகளை அறிவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனை மேம்படுத்த வானிலை முன்னறிவிப்பு சென்சார்கள் எனப்படும் கருவிகளை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.மிஷன் மௌசம் (Mission Mausam)என்ற புதிய திட்டத்தின் படி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் பருவமழை முன்னறிவிப்பை மேம்படுத்தவும் இதனால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி வானிலை முன்னறிவிப்பு சார் இந்த பணிகளில் பங்காற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD – India Meteorological Department ), வானிலை முன்னறிவிப்பு தேசிய மையம் (NCMRWF – National Centre for Medium Range Weather Forecasting), இந்திய வெப்ப மண்டல ஆராய்ச்சி மையம் (IITM- Indian Institute of Tropical Meteorology) ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பணியாற்றி வானிலை முடிவுகளை நிச்சயமாக கணிக்க போகின்றன.
இதற்கு 2024 செப்டம்பர் 11ஆம் தேதி அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது மேலும் இத்திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இத்திட்டமானது வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் 70 டாப்ளர் ரேடார்கள் (Doppler Radar) காற்றின் வேகத்தை கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வானிலை கண்காணிப்பு ரேடர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்படுகின்றது. இதில் தமிழகத்தில் புதிதாக மூன்று ரேடர்கள் நிறுவப்படுகின்றன, இதனால் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காற்றின் அழுத்தம், காற்று ஈரப்பதம்,காற்று வீசும் திறன்,அவற்றின் வேகம் போன்றவை வின்ட் ப்ரோபைலர்(Wind Profiler) என்ற கருவி மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை துல்லியமாக கணிக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படும் பொழுது பொதுமக்களுக்கு விரைவாக எச்சரிக்க முடியும். இதன் காரணமாக சாதாரண தொலைபேசிகளில் கூட மூன்று எண்களை டயல் செய்து அந்தப் பகுதியில் அடுத்து ஐந்து நாட்களுக்கு மாலை உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்புகளை அதுவும் குறிப்பாக உள்ளூர் மொழிகளிலே அறிந்து கொள்ளும் வசதி என்பது ஏற்படும், இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை உஷார் படுத்தி உயிரிழப்பையும் பொருள் இழப்பையும் தடுக்க முடியும்.
சிக்கல்களும் தீர்வுகளும்:
கடந்த 100 ஆண்டுகளில் 20 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை இருக்கின்றது. இது அரசிற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை துறைக்கும் கடும் சவாலாக இருக்கின்றது. முன்பெல்லாம் பெரும் நகரங்கள் மட்டும்தான் வெள்ள பாதிப்பின்போது அதிகம் பாதிக்கப்பட்டது. ஆனால் இன்று அப்படி அல்ல மழை வெள்ளம் ஏற்பட்டாலே அனைத்து பெரும்பாலான பகுதியில் பாதிக்கப்படுகின்றன அதற்கு காரணம் தண்ணீர் வெளியேறுவதற்கான போதிய வசதிகள் இல்லாதது பெரு நகரங்களில் நகரமயமாக்கல் என்ற பெயரில் தண்ணீர் வழித்தடங்களை அழித்து அதில் கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிகமான காரணங்களால் தண்ணீர் வெளியேற முடியாமல் பாதிப்பு அதிகரித்துள்ளது, ஒரு சில நாட்களுக்கு முன்பு மதுரையில் 50 ஆண்டுகளுக்குப் பின் பெய்த கன மழையால் நகரமே வெள்ளக்காடானது, தேங்கிய நீரை வெளியேற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன, சென்னையில் பெய்த கன மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.
இந்த மழைக்காலத்திற்காக காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில மற்றும் மத்திய தேசிய பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறைகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன.தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பினை ஒழுங்கு படுத்துவதற்காக 21000 போலீசார் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார் இவர்கள் சுத்தமாக 136 குழுக்களாக ஆக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை பணியில் ஈடுபடுகின்றனர் இதில் சென்னையில் ஏற்படும் பாதிப்புக்காக மட்டுமே பெரும்பாலானோர் பயன்படுத்தப்படுகின்றனர். மழைநீர் தேங்குவதால் தொற்று நோய்கள் அதிகம் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன, சிறிய பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் என்ன தண்ணீர் செல்லும் பாதையினை சரியாக தூர்வாரப்படாமல் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.அதுவும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பகுதிகளில் வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் சரியாக தூர் வாரப்படாததும் செடி கொடிகள் முளைத்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கால்வாய்களில் கொட்டப்படுவதால் மழைநீர் வயல்வெளியில் புகுந்ததாக குற்றம் சாட்டுகின்றனர் விவசாயிகள். மேலும் அவர்கள் கூறும் போது நீர்ப்பாசனத் துறைக்கு நிதி ஒதுக்காமல் மொத்த நிதியையும் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கியதன் விளைவு தான் இந்த பாசன கால்வாய்கள் அனைத்தும் சீரழிந்து கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போது இவ்வாறு தான் வெள்ள பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை சரி செய்யவே முடியாதா என்றால் முடியும் என்பதே பதில். முறையாக மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு செயல்படுத்தினாலே பெரும்பாலான சிக்கல்களுக்கு தீர்வாய் அமையும் பெரும்பாலும் இடங்களில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன அவற்றை உடனடியாக கண்டறிந்து அதனை மீட்டெடுத்தால் மட்டும் தான் இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு கிட்டும். மேலும் தமிழக அரசு கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக குளங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மொத்தம் உள்ள 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை பூங்காவாகவும் மீதமுள்ள இடத்தில் குளங்களை அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏரிகள் மற்றும் குளங்கள் தூர் வாரப்படாமல் குப்பை மேடுகளாக உள்ளன. மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் நிலத்தடி நீர் என்பது அகல பாதாளத்திற்கு சென்று விட்டது எனவே குளங்களை தூர்வாரி மழை நீரை அதில் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.இவற்றை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும்.இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கும் வர வேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே வருங்கால சந்ததிகளுக்கு வாழ்க்கை வளமாக அமையும் இல்லையென்றால் ஒவ்வொரு மழை வெள்ளத்திற்கும் பாதிப்புகள் ஏற்பட்டால் வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள் எனவே நீரின் முக்கியத்துவத்தை அறிவோம் நீரை சேமிப்போம் நாமும் முன்னேறுவோம் நாட்டையும் முன்னேற்றுவோம்!!
மனோஜ் சித்தார்த்தன்
The post தண்ணீர் தண்ணீர் கண்ணீர் கண்ணீர் | மனோஜ் சித்தார்த்தன் appeared first on Vanakkam London.