ராமேசுவரம்; தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் பாம்பனைச் சேர்ந்த எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையின் விவரம் வருமாறு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறைப்பிடிப்பது, படகுகளை கைப்பற்றுவது, வலைகளை அறுப்பது போன்ற அத்துமீறல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் மற்றொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை எல்லைகளால் பறிக்கவும் கூடாது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திலிருந்து கடலுக்குச் சென்ற அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகை கைப்பற்றி அதிலிருந்து 12 மீனவர்களை இலங்கை கடற்படை புத்தளம் சிறையில் அடைத்தது. இந்த வழக்கு நேற்று செவ்வாய்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 12 மீனவர்களுக்கும் தலா இலங்கை ரூ. 1.5 கோடி (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் தலா ஒவ்வொரு மீனவரும் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
பல பில்லியன் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தரும் மீனவர்களை அபராதம் மூலம் முடக்குவதன் மூலம், இந்திய பொருளாதாராத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இந்திய, இலங்கைக்கும் உள்ள இறையாண்மைக்கு கூடப் பின்னடைவை ஏற்படுத்தும். நட்பு நாடு என்று கூறிக்கொண்டே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலை கொள்ளச் செய்யும் இலங்கை அரசின் இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறும் போக்கினை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பாஜக அளித்த வாக்குறுதிகள் எதுவுமே 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்ற வில்லை. மீனவர் நலனில் அக்கறையற்ற மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசை மனிதாபிமானத்துடன் முடிவு எடுக்க வைப்பதுடன், தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றம் அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு ராஜதந்திர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும், என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.