பட மூலாதாரம், mkstalin
2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்த முன்னோட்ட காணொளியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார். அதில் இருந்த ஒரு படம், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை முன்னோட்ட காணொளியை வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் குறியீடாக ‘ரூ’-வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.
‘ரூ’-வாக மாறிய ‘₹’?
இந்த விவகாரம் குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை விமர்சித்துள்ளார்.
“ஒட்டுமொத்த இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பண மதிப்புகளில் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான சின்னத்தை, 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு மாற்றியமைத்துள்ளது”, என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்துடன் அவர் 2024 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் இலச்சினையுடன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் இலச்சினையின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான இலச்சினையில் ‘₹’ என்று குறிப்பிட்டிருந்தது.
பட மூலாதாரம், X/@annamalai_k
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ரூ என்ற எழுத்தை மாற்றியமைத்ததன் மூலம் மக்களை திசைதிருப்பும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் சொத்து வரி, பால் வரி ஆகியவற்றை அரசு குறைக்கப் போவதில்லை. அதையெல்லாம் விடுத்து ‘ரூ’ என்ற எழுத்தை வைத்து திமுக நாடக்கமாடுகிறது”, என்று கூறினார்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது”, என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
”திமுகவிற்கு உண்மையிலேயே ‘₹’ சின்னத்துடன் பிரச்னை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் அக்கட்சி இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பியுள்ளார்
பட மூலாதாரம், X/@mkstalin
‘இந்தி எழுத்துக்கு எந்த வேலையும் இல்லை’
எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், “தமிழ்நாடு அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ‘ரூ’ என்று குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. ரூபாய் என்று தமிழில் எழுதும்போது ‘ரூ’ என்றுதான் எழுத வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழில் வெளிவரக் கூடிய பொருளாதார அறிக்கைகளில் இந்தி எழுத்துக்கு எந்த வேலையும் இல்லை” எனக் கூறுகிறார்.
‘தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது’
“தற்போது ரூபாயைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சின்னத்தில் நடுவில் உள்ள கோட்டை எடுத்து விட்டால், அது தேவநகரியில் உள்ள ‘ர’வைத்தான் குறிக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்களில் தமிழக அரசை வலியுறுத்திவரும் நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறோம்”, என்கிறார் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரான ஜெயரஞ்சன்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த ரூபாய் சின்னம் தமிழர் ஒருவர் கண்டுபிடித்தது என்கிறார்கள். தமிழர்கள் ஆயிரம் விஷயங்களைச் செய்கிறார்கள். எல்லாவற்றையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. தேவநகரி எழுத்தில் இருந்ததை தமிழில் மாற்றியிருக்கிறோம். இதில் என்ன பிரச்னை? ரூபாயை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்தே, ‘ரூ’ என்ற எழுத்து புழக்கத்தில் இருக்கிறது. அதை மீண்டும் பயன்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் எல்லோரும் Rs. என்றோ ரூ. என்றோதான் குறிப்பிடுகிறார்கள்” என்கிறார்.
மேலும், “ரூ’ என்று எழுதியதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது குறித்து கேட்டபோது, “அப்படியானால் தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.
‘எந்த தவறும் இல்லை’
தமிழில் ‘ரூ’ என்று எழுதியதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறுகிறார் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பட்ஜெட்டில் ‘ரூ’ என்ற எழுத்துக்கு பதிலாக வேறு எந்த குறியீடையும் தமிழ்நாடு அரசு பயன்படுத்தவில்லை. அதைப் பயன்படுத்தியதில் எந்த தவறும் இல்லை. அது புழக்கத்தில் உள்ள ஒன்றுதான். உலகளவில் ரூபாய்க்கு என ஒரு குறியீடு வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி ‘₹’ என்பதை உருவாக்கியது. அதைக் கூட ஒரு தமிழர் தான் உருவாக்கினார். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ‘ரூ’ என்ற எழுத்து பயன்படுத்துவதை வரவேற்கிறேன். ‘ரூ’ என்பதும் ஓர் இந்திய மொழி எழுத்துதான். இதன்மூலம் இந்தியை ஒழித்துவிட முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதுவது தேவையற்றது” எனக் கூறினார்.
மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ரூபாய்க்கான சின்னம் தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சின்னம்தான். இப்போது மத்திய அரசு தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிப்பது, நிதியைக் குறைப்பது போன்றவற்றில் ஈடுபடுவதால் அதற்குப் பதிலடியாக தி.மு.க. இதைச் செய்கிறது. இதனால், அடிப்படையான மாற்றம் ஏதும் இருக்கப்போவதில்லை. பலனும் இருக்காது.”என்றார்.
” ஆனால், தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களில் தேசிய அளவில் எதிர்ப்பை ஒருங்கிணைக்க தி.மு.க. முயல்கிறது. அதன் ஒரு பகுதியாகவும் இதனைப் பார்க்கலாம். ஆனால், மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஏற்கனவே டாஸ்மாக்கில் ரெய்ட் முடிந்திருக்கிறது. அடுத்த பத்து மாதங்கள் தி.மு.கவுக்கு நெருக்கடியான காலமாகத்தான் இருக்கும். இந்த நிலையில், இது போன்ற நடவடிக்கைகள், ஒரு அரசியல் பதிலடி நடவடிக்கைதானே தவிர, வேறு ஏதும் இல்லை” என்கிறார் .
₹ சின்னம் எப்படி வந்தது?
ரூபாயை குறிப்பிட பயன்படுத்தப்படும் ‘₹ ‘ சின்னம் தேவநாகரி “ரா” மற்றும் ரோமானிய எழுத்தான ‘ஆர்’ ஆகியவற்றின் கலவையாகும். ‘₹’ சின்னத்தில் மேலுள்ள இரண்டு கிடைமட்ட கோடுகள் தேசியக் கொடியைக் குறிக்கின்றன, மேலும் “சமம்” (equal to) குறியீட்டையும் குறிக்கின்றன. இந்த ரூபாய் சின்னமானது 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம்15 ஆம் தேதி அன்று இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சின்னத்தை தமிழ்நாட்டை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். நிதி அமைச்சகம் நடத்திய ஒரு போட்டியில் ஆயிரக்கணக்கான பதிவுகளிலிருந்து இந்த சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.