தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களைப் பெறுவதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர் என்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அந்தச் சங்கத்தினரால் வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இம்முறை தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் வேட்பாளர்கள் பேரம் பேசக்கூடிய ஒரு சக்தியாக மக்களின் நன்மை கருதி ஒன்றிணையவில்லை. ஆசனங்களைப் பெறுவதனை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக தனித்தனியாக தேர்தலில் நிற்கின்றனர். இப்படி நின்று யாருக்காக நீங்கள் கதைக்கப் போகின்றீர்கள்.
நீங்கள் ஒரு அணியாக எப்போதாவது திரண்டிருக்கிறீர்களா? உங்களுக்குள்ளேயே போட்டியிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி கட்சிகளைப் பிளவுபடுத்தி தமிழ்த் தேசியத்தையே இன்று இல்லாது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைத்து கலந்துரையாடி ஒற்றுமையாக எப்போது பயணித்துள்ளீர்கள்? இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ள சின்னங்களால் தமிழ் மக்கள் குழப்ப நிலை அடைந்துள்ளனர். சங்கு, வீடு, சைக்கிள் என்று பல கட்சிகள். பல சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
இதனால் அரசியலைப் பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் நாடாளுமன்றம் செல்லக்கூடிய நிலைமையே இன்று ஏற்பட்டுள்ளது. வடக்கில் (யாழ்ப்பாணம் வன்னி) 12 ஆசனங்களைப் பெறுவதற்காக 800 இற்கும் மேற்ப்பட்டவர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு யார் வாக்களிப்பது? நண்பர்கள் உறவினர்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.
இதன் மூலம் சிங்களக் கட்சிகளே ஆசனங்களைக் கைப்பற்றும் நிலைமையை நீங்களே உருவாக்கப் பார்க்கின்றீர்கள். பணத்தை ஏன் இவ்வாறு வீணடிக்கின்றீர்கள்? அதனை மக்களுக்கு வழங்குங்கள். நீங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு இன்னும் கீழ் நிலைக்கே மக்களைத் தள்ளப்போகின்றீர்கள்.” – என்றனர்.
The post தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையவில்லை! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம் appeared first on Vanakkam London.