• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ் மக்கள் விடுதலை அடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Byadmin

Sep 2, 2024


தமிழ் மக்கள் விடுதலை அடைய வேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆளுக்கு ஒருபக்கம் இருந்து திரிவதால் எந்தப் பலனும் பெறுவாரில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

பொதுவேட்பாளர் என்ற ஒருவர் இருக்கும்போது தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பெரும்பான்மை இனத்திற்கு வாக்களிக்கச் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இலங்கையில் 1948 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரைக்கும் இருக்கும் சிங்கள பெரும் தலைவர்கள் காலத்திற்கு காலம் வரும் தேர்தல்களில் அதைத் தருவோம், இதைத்தருவோம் என்று சொல்லி வாக்களித்த காலமும் உண்டு.

இதுவரையில் தமிழ் மக்களுக்கான தீர்வை எந்த சிங்கள தலைவர்கள் வந்தும் தருவோம் என்று சொன்னதில்லை. ஆனால் என்.எம்.பெரேரா அவர்கள் பதவிக்கு அமர்வதற்கு முதல் தமிழ் மக்களுக்குப் பிரச்சனை உள்ளது அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என பேசினார். பதவிக்கு வந்த பின்னர் கொல்வின் ஆர்.டி.சில்வா உட்பட அந்த எண்ணம் மாறி சிங்களவாதம் பேசினார்கள்.

எனவே தமிழ் மக்கள் விடுதலை அடைய வேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் ஆளுக்கு ஒருபக்கம் இருந்து திரிவதால் எந்தப் பலனும் பெறுவாரில்லை. இதற்குத்தான் ஒற்றுமையே உயர்ந்த ஏணி, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

ஆகவே இவற்றுக்கு இணங்க கடந்த கால கசப்பான விடையங்களை மறப்போம் மன்னிப்போம். எதிர்கால தமிழினத்திற்காக ஒன்றுபடுவோம் என்பதற்காக தமிழ் தலைவர்கள் உருவாக வேண்டுமே தவிர பதவி மோகத்தால் ஆளுக்கொரு அறிக்கை விடுவதை அடியோடு நான் மறுக்கின்றேன் அதனை தமிழ் மக்களும் விரும்பவில்லை. என அவர் இதன்போது தெரிவித்தார்.

By admin