“நான் லால்குடியில் பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் இப்போதுள்ள கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்கமாட்டார். திமுக தலைமையிலான எங்களது கூட்டணி மிகச்சரியான கூட்டணி” என்று திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார் (05.09.2024) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு பலமுறை திமுக கூட்டணி குறித்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், “நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, சட்டமன்ற தேர்தலில் வருமா என்று சொன்னால், நிச்சயமாக அதுபோல் சுமூகமான சூழ்நிலை வராது என்பது எங்களுடைய கருத்து“ என்று பேசியிருந்தார் அமைச்சர் நேரு.
அவரது பேச்சு விவாதத்திற்கு உள்ளான நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
திமுக கூட்டணி குறித்த விவாதங்கள்
கடந்த ஜூன் மாதம், சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் தோழமை என்பது வேறு, சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் சார்ந்திருக்கப் போகிறோம்?” என்று குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, அனைத்திலும் வென்ற நிலையில், அதன் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை அவ்வாறு பேசியது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.
அப்போது அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “நான் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் பேசினேன். திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்திலோ பேசவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
திமுகவின் மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் சமீப காலமாக திமுகவுடன் சில விஷயங்களில் முரண்படுவதைக் காண முடிந்தது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தன, ஆனால் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
“ தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகக் கூறியே 2003ஆம் ஆண்டு அதிமுக காலத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அப்போது 3 ஆயிரம் கோடிக்கு விற்பனையானது, தற்போது 45ஆயிரம் கோடிக்கு விற்பனையாகிறது” என்று மது விற்பனை அதிகரித்திருப்பதை குறிப்பிட்டு அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார் திருமாவளவன்.
அதே சமயத்தில், ‘தி.மு.க எதிர்ப்பு’ என்ற மனநிலையில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை அணுகக் கூடாது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜுலை மாதம், சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் திமுக ஆட்சியின் மீதும், காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாகவும் விமர்சனத்தை முன்வைத்தன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் விமர்சனங்களை முன்வைத்தது. கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, “கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை” என்று திருமாவளவன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தலித் தலைவர்கள், சிறிய அளவில் இருந்தாலும், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது” என்று திருமாவளவன் பேசினார்.
சில நாட்களுக்கு முன்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என நினைப்பவர்கள் வதந்தி பரப்புகின்றனர். கட்சியின் கொள்கை, உரிமை தொடர்பாக எழுப்பும் குரல் வேறு, கூட்டணி தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடு என்பது வேறு. எனவே வதந்திகள் எங்கள் கூட்டணியைப் பாதிக்காது” என்று கூறினார்.
சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பை தெரிவித்தது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மத அடிப்படையிலான விழாக்களை அரசு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் நேரு பேசியது என்ன?
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில், கடந்த திங்கள்கிழமை (03.09.224) திமுக மத்திய மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “ஒருபக்கம் சீமான் நம்மை குறை சொல்கிறார். ஒருபக்கம் புதிதாக வரப்போகிறவர் குறை சொல்கிறார். ஒருபக்கம் அ.தி.மு.க. எவ்வளவோ நன்மைகள் செய்தாலும், பாமகவும் நம்மை குறை சொல்கிறார்கள். பாஜக ஏற்கனவே எதிரியாக இருக்கிறார்கள். எதிரிகள் அதிகமாக உள்ள காலம் இது” என்று கூறினார்.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தது போன்ற சுமூகமான சூழ்நிலை 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக இருக்காது என்று அவர் கூறினார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியைக் குறிப்பிட்டுதான் அமைச்சர் நேரு பேசினார் என விவாதங்கள் எழுந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து, “திமுக தலைமையிலான எங்களது கூட்டணி மிகச்சரியான கூட்டணி” என்று நேற்று (05.09.2024) கூறினார் கே.என்.நேரு.
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து திமுக கூறுவது என்ன?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசினார் திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
“அரசியல் களம் என்பது மாறிக்கொண்டே இருப்பது. மக்களவைத் தேர்தலுக்கான சூழல் போல 2026 சூழல் இருக்காது, எனவே தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் நேரு பேசினார். மற்றபடி கூட்டணியில் மாற்றம் வருமா என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சிகாகோ நகரில் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டது குறித்த காணொளியைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
அதை மீண்டும் பகிர்ந்து, “சகோதரரே! நாம் எப்போது சென்னையில் ஒன்றாக இப்படி சைக்கிள் பயணம் செய்யப் போகிறோம்?” எனக் கேட்டுப் பதிவிட்டிருந்திருந்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம். மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்வோம்” என்று பதிவிட்டார்.
இதைச் சுட்டிக்காட்டிய திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன், “திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் கூட்டணி குறித்து பலமுறை தெளிவுபடுத்திவிட்டார்” என்று கூறுகிறார்.
கடந்த மாதம், கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றது குறித்து எதிர்க்கட்சியான அதிமுக விமர்சனங்களை முன்வைத்தது.
இதற்கு பதிலளித்த கான்ஸ்டன்டைன், “கலைஞர் கருணாநிதி தேசியத் தலைவர். அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் மீது கொண்ட மரியாதையின் காரணமாக வந்தார். எனவே பாஜகதான் எங்களுடன் இணக்கமாக இருக்க முயற்சிக்கிறது என சொல்லலாம். அவர்கள் எப்போதும் எங்களுக்கு எதிரணியில் இருப்பவர்கள்தான்” என்று கூறினார்.
‘யூகங்களின் அடிப்படையில் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது’
“அமைச்சர் நேரு யதார்த்தமாக பேசக்கூடியவர். அதனால் அவர் கூட்டணி குறித்த உள்நோக்கத்துடன் பேசவில்லை. ஆனால், எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள் என திமுக தொண்டர்களை பயமுறுத்துவது போல பேசியிருக்கக்கூடாது” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன்.
“சமீப காலமாகவே நடிகர் விஜய் குறித்து திமுகவின் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகவில் பல வருடங்களாக இருக்கும் தொண்டர்களுக்கு பயம் இருப்பது போல தெரியவில்லை, மேலிடத்தில் இருப்பவர்கள் தான் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். இது தொண்டர்களை ஒருவித குழப்பத்தில் தள்ளிவிடும்” என்கிறார் அவர்.
“கருணாநிதி திமுக கூட்டணியின் பலவீனம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார். ஆனால் இவர்கள் மாற்றம் வரலாம், வராமல் போகலாம் என்ற ரீதியில் பேசுகிறார்கள். ஒருவேளை தரவுகளுடன் பேசினால் பரவாயில்லை, ஆனால் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கூட்டணி குறித்து வெறும் யூகங்களின் அடிப்படையில் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது” என்றும் குபேந்திரன் கூறுகிறார்.
திமுக கூட்டணி குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுவது ஏன்?
“தமிழ்நாட்டின் ஒரு பலமான கூட்டணியாக திமுக கூட்டணி இருக்கும்போது, அது உடைவதை அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகள் விரும்பதான் செய்யும்” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இப்போதைக்கு திமுகவை விட்டுச் செல்லமாட்டார்கள். அதுவும் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை இக்கூட்டணி கண்டிப்பாக தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நடிகர் விஜய் இன்னும் தேர்தல் அரசியல் களத்திற்கு வரவில்லை. அவருக்கு இருப்பது இரண்டே வழிதான் ஒன்று திமுக எதிர்ப்பு அல்லது பாஜக எதிர்ப்பு. திமுக எதிர்ப்பு என்றால் அதிமுக வாக்குகள் பிரியும், பாஜக எதிர்ப்பு என்றால் திமுக வாக்குகள் பிரியும்.” என்று கூறினார் பிரியன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு