• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓபிஎஸ் | Govt should abandon decision to run private buses ahead of Diwali festival: OPS

Byadmin

Oct 26, 2024


சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. ஆனால், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 31-07-2021 அன்றைய நிலவரப்படி, 20,557 அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், 1,000 பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 2213 பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 2023-24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 மின்சார பேருந்துகள் உள்பட 3,000 பேருந்துகள் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 7,213 பேருந்துகள், 1,000 மின்சார பேருந்துகள் என 8,213 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து மானியத்திற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 20,260 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2021 ஆம் ஆண்டு இருந்த பேருந்துகளைவிட 2024 ஆம் ஆண்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அப்படியென்றால், 8,213 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் இன்னும் காகித வடிவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 2024-25 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையை கழித்தால்கூட, 4,713 பேருந்துகள் கூடுதலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. எத்தனை பேருந்துகள் கழிவு செய்யப்பட்டன, எத்தனைப் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டன என்ற விவரமும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகிறது என்றும், இதற்காக புதிய பேருந்துகளை வாங்கி, நிறுத்தி வைக்க முடியாது என்றும், கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பதைப் பார்த்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த நடைமுறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல், அரசிடம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுநர்கள் இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.

அரசின் கொள்கைக் குறிப்பின்படி, தனியார் வசம் 7,764 பேருந்துகள் மட்டுமே உள்ள நிலையில், மிகப் பெரிய நிறுவனங்களாக விளங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகின்றன என்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கை. இது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், தனியார் பேருந்துகளின் நிலைமை, அந்த ஓட்டுநர்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு இல்லாமல், தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது என்பது மிகவும் ஆபத்தானது.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு வாங்கப்பட்ட புதிய பேருந்துகளின் எண்ணிக்கை, புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, கழிவு செய்யப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.



By admin