• Mon. Sep 9th, 2024

24×7 Live News

Apdin News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு தீவிரம்: அதிகாரிகள் தகவல் | diwali booking started in SETC

Byadmin

Sep 5, 2024


சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி, இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து மட்டும் 3 நாட்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 5.66 லட்சம் பேர் பயணித்திருந்தனர்.

அரசு பேருந்துகளில் தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளிபண்டிகையையொட்டி அரசு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் அக்.31-ம்தேதி (வியாழன்) தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்கள் பயணத்துக்கு பேருந்துகளின் இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அக்.29-ம் தேதி தமிழகம் முழுவதும் 9,500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து பயணிக்க 7,200-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

அக்.30-ம் தேதி பயணத்துக்கு மாநிலம் முழுவதும் 7,900-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மட்டும்5,900-க்கும் மேற்பட்ட இருக்கைகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. அந்த வகையில் 130-க்கும்மேற்பட்ட பேருந்துகளின் இருக்கைகளுக்கான முன்பதிவு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளது. வரும் நாட்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இதற்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை தயாராக உள்ளது.

அதற்காக, அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, சிறப்பு பேருந்துதொடர்பான அறிவிப்பு வெளியாகும். அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



By admin