• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

துணை முதல்வர் உதயநிதியின் தனிச் செயலராக பிரதீப் யாதவ் நியமனம் | IAS officers Transfer: Pradeep Yadav appointed as Secretary to Deputy CM

Byadmin

Oct 2, 2024


சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலராக, ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கோபால், உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், துணை முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். அவர் கவனித்துவந்த பொறுப்புகளை ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா கூடுதல் பொறுப்புகளாக கவனித்துக் கொள்வார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையர் இ.சுந்தரவள்ளி, கல்லூரி கல்வியியல் துறையின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். தமிழக அரசின் பொதுத் துறை இணை செயலர் பி.விஷ்ணு சந்திரன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

சமூகநலத்துறை ஆணையர் வி.அமுதவள்ளி, தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலர் ஆர்.லில்லி சமூகநலத்துறை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, ஜவுளித்துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். அவர் கவனித்து வந்த பொறுப்புகளை ஐஏஎஸ் அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவ் கூடுதல் பொறுப்புகளாக கவனித்துக் கொள்வார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், தமிழக அரசின் பொதுத்துறை துணை செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை பொறுப்புகளை கூடுதலாக கவனித்துக் கொள்வார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலர் சி.விஜயராஜ் குமார், தமிழக அரசின் மனிதவளம் மற்றும் மேலாண்மைத் துறை பொறுப்புகளை, மறுஉத்தரவு வரும்வரை கூடுதலாக கவனித்துக் கொள்வார்.

மனிதவளம் மற்றும் மேலாண்மைத் துறை செயலர் கே.நந்தகுமார், மின் வாரியம் மற்றும் டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.ஸ்வர்ணா ராஷ்ட்ரிய உச்சதர் சிக் ஷ அபியான் (RUSA) திட்ட முதன்மைச் செயலர் மற்றும் மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

நிதித்துறை இணை செயலர் எம்.பிரதிவிராஜ் சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன் தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.



By admin