• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

தூத்துக்குடியில் பட்டாசு ஆலை விபத்து – 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு | Firecracker factory accident in Tuticorin 2 workers killed

Byadmin

Sep 1, 2024


தூத்துக்குடி: நாசரேத் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று ஒரு கட்டிடத்தில் நாசரேத் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன்(21), கமுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விஜய் (25), புளியங்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வம் (26), செம்பூரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பிரசாந்த் (26), சின்னமதிகூடலைச் சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகிய 6 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.

இவர்கள் இருந்த அறைக்கு அருகே உள்ள அறையில் மாலை 5.30 மணியில் திடீரென பட்டாசுகள் வெடித்தன. இதில் இருந்த வந்த தீப்பொறிகள் விழுந்து, தொழிலாளர்கள் பணியாற்றிய அறையில் இருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின. இதிலிருந்து தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில், அறையில் பணியில் இருந்து முத்துகண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செல்வம், பிரசாந்த், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து, நாசரேத் போலீஸாரும், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகள் அதிகமாக இருந்ததால், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்தன. இதில், காயமடைந்த பிரசாந்த், செல்வம் ஆகியோர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த விஜய், முத்துகண்ணன் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



By admin