வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தாலுகா முதல் உயர் நீதிமன்றங்கள் வரையில் தொடரப்பட்ட, தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் தொகுக்கப்பட்ட தகவல்களை வைத்துள்ள களஞ்சியமான, தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்புடன், உச்ச நீதிமன்றம் விரைவில் இணைக்கப்பட உள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று அறிவித்தார்.
நாடு முழுதும் உள்ள தாலுகா நீதிமன்றங்கள் முதல், உயர் நீதிமன்றங்கள் வரையிலான, 18,735 நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள், தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்கள், தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த விபரங்களை பொதுமக்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தற்போது உயர் நீதிமன்றங்கள் வரையிலான தரவுகள் மட்டுமே இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. இதில், உச்ச நீதிமன்ற வழக்குகளின் விபரங்களையும் பெற வழி செய்யும் விதமாக, உச்ச நீதிமன்ற வழக்குகளின் தரவுகளும் இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இது ஒரு சிறிய அறிவிப்பு தான். ஆனால் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு. தேசிய தகவல் மையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்ப குழு உதவியுடன் இது சாத்தியமாகி உள்ளது.
இனி கணினியில் ஒரு ‘கிளிக்’ செய்தால் போதும், நிலுவையில் உள்ள மற்றும் தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள், ஆண்டு வாரியாக நிலுவையில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வழக்கு விபரங்களை பயனாளர்கள் உடனடியாக பெற முடியும்.
உச்ச நீதிமன்ற வழக்கு விபரங்களின் தரவுகளை தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகூறலை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டுக்குரிய விஷயம்!
நீதித்துறையில் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தும். இது, பாராட்டுக்குரிய விஷயம்.
– பிரதமர் மோடி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement