• Mon. Nov 4th, 2024

24×7 Live News

Apdin News

நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழை வாய்ப்பு | likelihood of formation of a trough of low over south BoB during week 1 says India Meteorological Department

Byadmin

Nov 1, 2024


சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நவம்பர் முதல் வாரத்திலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறவும் வாய்ப்புள்ளது. தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் பட்சத்தில் அது நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நவ.1,2-ல் எங்கெல்லாம் கனமழை? – இதனிடையே, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, நாளை (நவ.1) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.2-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



By admin