புதுச்சேரி: முதல்கட்டமாக 50 ஆயிரம் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல்முறை.
புதுச்சேரியில் 2022-23 பட்ஜெட் உரையில், புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்குமேல் 55 வயதிற்குள் இருக்கும் அரசின் எவ்விதமான மாதாந்திர உதவிதொகையும் பெறாத வறுமைகோட்டிற்கு கீழ் இருக்கும் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1000/-ம் வீதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். அத்திட்ட தொடக்கவிழா இன்று நடந்தது.
இந்நிகழ்வை தொடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், “பெண்கள் கையில் இருக்கும் தொகை குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடாமல், பட்ஜெட் உரைக்கு பின், மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் தற்போது தொடங்கப்படுகிறது. புதுச்சேரி அரசு அறிவிக்காத திட்டங்களையும் செய்கிறது. சில அரசு அறிவித்த திட்டங்களையும் செய்யவில்லை. எந்த மாநிலத்துக்கும் குடியரசுத் தினத்தையொட்டி இதுபோல் பரிசு கிடைத்ததில்லை” என்றார்.
முன்னதாக முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “உதவி ஏதும் கிடைக்காத ஏழை பெண்களுக்கு தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் 13 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்றனர். கணக்கெடுத்தபோது, புதுச்சேரி மாநிலத்தில் 71 ஆயிரம் குடும்பத் தலைவிகள் வந்தனர். சரியாக கணக்கெடுப்பு முடியும் வரை முதல் கட்டமாக 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் தரவுள்ளோம். இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், மிதிவண்டி தர நிதி ஒதுக்கிவிட்டோம். வரும் பிப்ரவரியில் கண்டிப்பாக தரப்படும். கடந்த ஆட்சியில் விடுப்பட்ட திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவோம்”என்று தெரிவித்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கூறுகையில், “குடிமைப் பொருள் வழங்கல் துறையிடம் இருந்து 1,83,000/-ம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் அட்டை குடும்ப தலைவிகளின் பட்டியல் பெறப்பட்டு அதை மற்ற துறையில் உள்ள நலத்திட்டங்கள் பெறுபவர்களை கண்டறிந்தோம். அதில் வெவ்வேறு நலத்திட்டத்தில் அரசு உதவி பெறாத 70 ஆயிரம் பயனாளிகள் உள்ளதை கண்டறிந்துள்ளோம். அவர்களில் முதல்கட்டமாக 50 ஆயிரம் பயனாளிகளுக்கு பிப்ரவரியில் இருந்து அவரவர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் போடப்படும்.
இத்திட்டத்தில் விடுப்பட்ட பயனாளிகள் வரும் பிப்ரவரி 26ம் தேதிக்குள் அந்தந்த தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் மனு தந்தால் அவர்களும் சேர்க்கப்படுவார்கள். தகுதி வாய்ந்தோர் கண்டிப்பாக சேர்க்கப்படுவார்கள். இத்திட்டம் நாட்டிலேயே முதல்முறை” என்று குறிப்பிட்டார். நிகழ்வில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.