• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல் | Pay salary to Part Time Teachers at Early aiadmk EPS

Byadmin

Oct 29, 2024


சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளியையொட்டி, முன்கூட்டியே சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அதிமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைவரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டது. கடந்த 41 மாத கால திமுக ஆட்சியில் கல்வித் துறையைச் சேர்ந்த அனைவரும் வீதிகளில் இறங்கி போராடக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா இண்டர் நெட் இணைப்புக்கான டேட்டா கார்டு வழங்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டது; காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டன. தற்போது, இந்த ஆட்சியில் விலையில்லா மடிக் கணினியும் வழங்கப்படுவதில்லை; டேட்டா கார்டும் வழங்கப்படுவதில்லை. ஆனால், திமுக ஆட்சியில், இந்த ஆட்சியாளர்களுக்கும், பல்கலைக்கழகங்களின் வேந்தராகத் திகழும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களால் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால், எங்களது ஆட்சியில் முதலிடத்தைப் பிடித்த உயர்கல்வித் துறை, தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. உயர்கல்வி ஒன்றையே நம்பி கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இந்த ஆட்சியாளர்களால் பாழ்பட்டு நிற்பது வெட்கக்கேடானது. அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வந்த நிலையில், அவ்வப்போது ஏற்படும் காலியிடங்கள் உரிய விதிமுறைகளின்படி நிரப்பப்பட்டு வந்தன.

தற்போது, ஏறத்தாழ நான்காயிரத்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; இதில் சுமார் 1,000 கவுரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களை திமுக அரசு நிரப்ப உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த கவுரவ உதவிப் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 25,000 ரூபாய் வழங்க உள்ளதாகவும்; ஏற்கெனவே சுமார் 7,360 கவுரவ உதவிப் பேராசிரியர்கள் இதே ஊதியத்தில் பணியாற்றுவதாகவும் செய்திகள் வந்துள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவச் செல்வங்களின் அறிவை விரிவாக்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள உதவிப் பேராசிரியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவது நடைமுறையில் ஒன்றாகும். அதேநேரம், அவர்களுடைய பணி மூப்பின் அடிப்படையில் உரிய விதிமுறைகளின்படி அவர்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும், வரும் கல்வி ஆண்டுக்குள் நிரப்பி உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 12,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தீபாவளி போனஸ் போன்ற வேறு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. கல்விக் கண் திறக்கும் பகுதிநேர பள்ளி ஆசிரியர்கள் மனமகிழ்வுடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் மாதத்திற்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.



By admin