”பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அயோத்தி தீர்ப்பு தாக்கம் செலுத்தும்” : முன்னாள் நீதிபதி மன்மோகன் சிங் லிபரான்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, இது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் கூறியுள்ளார்.

பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், ”உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நியாயமானது. உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்புகளைத்தான் வழங்கும்” என்றும் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் இந்தத் தீர்ப்பின் தாக்கம் இருக்குமா என்று கேட்டதற்கு, “பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது” என்று அவர் பதில் அளித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து, பாபர் மசூதி இடிப்பு சரியானது என்று நீதிமன்றத்தில் வாதிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, “ஆம், அவ்வாறான வாதம் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.

இந்த சர்ச்சையில் நில உரிமையை முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்த அதே வேகம், மசூதி இடிப்புக்கான கிரிமினல் சதி குறித்த வழக்கிலும் காட்டப்பட வேண்டும் என்று நீதிபதி லிபரான் குறிப்பிட்டார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்கும் என்று நீதிபதி லிபரான் நம்பிக்கை தெரிவித்தார்.

“தீர்ப்பு கிடைக்கும் போதுதான், நியாயம் கிடைத்ததா இல்லையா என்பது தெரிய வரும். ஆனால் நீதிமன்றங்கள் தங்களுடைய தீர்ப்புகளை வழங்குவதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அப்போது நியாயம் வழங்கப்படும் என்று நாம் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

நீண்ட காலம் நிலுவையில் இருந்த அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இப்போது ராமர் கோவில் கட்டப்படும்.

ஆனால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் கடந்த 27 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்:

16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இந்து அடிப்படைவாதிகள் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடித்துத் தள்ளினர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 2000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன், நீண்ட விசாரணைக்குப் பிறகு 2009ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மசூதி இடிப்பில் தீவிரமான சதி இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இரு வழக்குகள்

1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, இரண்டு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடையாளம் தெரியாத லட்சக்கணக்கானவர்களுக்கு எதிராக ஒரு வழக்கும், பெயர்கள் குறிப்பிட்டு சிலருக்கு எதிராக இரண்டாவது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவது வழக்கில் எல்.கே அத்வானி உள்ளிட்ட எட்டு தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இரு வழக்குகள் தவிர, செய்தியாளர்களுக்கு எதிரான கொள்ளை மற்றும் வன்முறை குறித்து 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் அனைத்து வழக்குகளின் விசாரணையும் மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இரு வழக்குகளிலும் சேர்த்து கூட்டாக குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த வழக்குகளை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற ஆலோசனையின் பேரில் லக்னோவில் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் அறிவிக்கையில் இரண்டாவது வழக்கு பற்றி குறிப்பிடப்படவில்லை.

அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவம் தொடர்பானவையாக இருப்பதால், அவற்றை ஒன்று சேர்த்து ஒரே விசாரணையாக நடத்துவதற்கு முகாந்திரம் உள்ளது என்று, குற்றச்சாட்டுகள் பதிவின் போது சிறப்பு நீதிமன்றம் கூறியது. ஆனால் அத்வானி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு ஆளான பலரும் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அனைத்து வழக்குகள் தொடர்பாகவும் கூட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று 2001 பிப்ரவரி 12 ஆம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் பெயர்கள் குறிப்பிடப்பட்ட வழக்கை விசாரிக்க லக்னோ சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு வெளியிடப்பட்ட அறிவிக்கையில், இந்த வழக்கு பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதால், அதை விசாரிக்கும் வரம்பு இல்லை என்று குறிப்பிட்டது.

Ayodhya Verdict | தீர்ப்புக்கு பின் அயோத்தி எப்படி இருக்கிறது? | BBC Ground Report

”அத்வானியும் மற்ற தலைவர்களும் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். சில நுணுக்கங்களின் அடிப்படையில், கிரிமினல் சதி வழக்கை ரே பரேலி நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தபோதிலும் பின்னர் ரே பரேலியில் விசாரணையில் இருந்த வழக்கை பாபர் மசூதி இடிப்பு வழக்குடன் சேர்த்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது” என்று பிபிசியின் முன்னாள் செய்தியாளர் ராம்தத் திரிபாதி தெரிவித்தார்.

“இப்போது வழக்குகளின் கூட்டு விசாரணை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கான அவகாசத்தை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்குகளில் தீர்ப்பு அளித்த பிறகு தான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறுவார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்றும் திரிபாதி தெரிவித்துள்ளார்.

“இந்த வழக்குகளிலும் தீர்ப்பு வந்துவிடும் என்று இப்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட சில தலைவர்கள் காலமாகிவிட்டனர்” என்றும் திரிபாதி குறிப்பிடுகிறார்.

“வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் வயதாகிவிட்டதால், லக்னோ சிறப்பு நீதிமன்ற கட்டடத்தின் மூன்று மாடிகளில் ஏறிச் செல்ல சிரமப்படுகிறார்கள்” என்றும் ராம்தத் திரிபாதி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :