பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர்.. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆண்களுக்கான டி63 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டருடன் தங்கத்தை தட்டிச் சென்றார்.
2016-ம் ஆண்டு பாராலிம்பிக் தொடரில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 2020 டோக்யோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து தற்போது நடப்பு பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மாரியப்பன்.
தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை: முன்னதாக நடப்பு பாராலிம்பிக்ஸ் போட்டியில், பெண்கள் பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனைப் படைத்திருந்தனர்.
இவர்களில், பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள காஞ்சிபுரம் மாணவி துளசிமதி, அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வதே லட்சியம் என்று ஊடகப் பேட்டிகளில் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.