பாரிஸில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாராலிம்பிக் 2024’ போட்டிகளில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் (SU5) தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றுள்ளனர்.
எஸ்யூ 5 (SU5) பிரிவில் திருவள்ளூரைச் சேர்ந்த மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனையான மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் (SH6) பிரிவில் ஓசூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவனும் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இவர்களை தவிர நிதேஷ்குமார் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
‘என்னுடைய சிறந்த விளையாட்டு இதுவல்ல’
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 22 வயதான துளசிமதி முருகேசன் வென்று கொடுத்தது ‘பாராலிம்பிக் 2024’ போட்டிகளில் இந்தியாவுக்கான நான்காவது வெள்ளிப் பதக்கம் ஆகும்.
நேற்று (02.09.2024) நடந்த எஸ்யூ5 பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவை எதிர்கொண்டார் துளசிமதி. எஸ்யூ5 (SU5) என்பது கைகளில் பாதிப்பு கொண்டவர்களுக்கான பாராலிம்பிக் பிரிவாகும்
இறுதிப்போட்டியில் துளசிமதி கடுமையாகப் போராடிய போதும், 21-17, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் யாங் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் துளசிமதிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
போட்டிக்கு பிறகு பேசிய துளசிமதி, “வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும் என்னுடைய சிறந்த விளையாட்டை நான் ஆடவில்லை என்று சற்று வருத்தமாகவும் இருக்கிறது” என்றார்.
முன்னதாக, இதே பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸை எதிர்கொண்டார் துளசிமதி முருகேசன். அதில் வெற்றி பெற்று தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் துளசிமதி.
துளசிமதி தனது ஐந்தாவது வயதிலிருந்து விளையாட்டில் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். கூலி தொழிலாளியின் மகளான அவர், முதலில் வீட்டருகில் உள்ள சிறு மைதானத்தில் விளையாடத் தொடங்கியுள்ளார்.
தொடக்கத்தில் தடகளப் போட்டிகளில் ஆர்வம் காட்டிய அவர், பிறகு பேட்மிண்டன் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். ஆரம்ப நாட்களில் அவரது சகோதரி கிருத்திகா அவருக்கு பேட்மிண்டனில் இணையராக இருந்துள்ளார். துளசிமதி தற்போது கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார்.
அவருக்கு பிறக்கும் போதே இடது கை உருமாறியும் பலவீனமாகவும் இருந்துள்ளது. இதனால் அவரால் இடது கையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இடது கை கட்டை விரலையும் துளசிமதி இழந்துள்ளார்.
சமீபத்தில் விபத்து ஒன்றில் அவர் சிக்கியதால், இடது கையை மேலும் பயன்படுத்த முடியாமல் போனது. அவரது கைகள் மரத்து போய், தசைகள் பலவீனமடைந்தன. ஒற்றைக் கையால் பேட்மிண்டன் ஆடியே இந்தியாவுக்கான பதக்கத்தை துளசிமதி வென்றுள்ளார்.
துளசிமதிக்கு, அவரது தந்தை முருகேசன் வறுமையை பொருட்படுத்தாது, தளராமல் தொடர்ந்து உறுதுணையாக இருந்துள்ளார். விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட அவரது தொடர் முயற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள், பாரா விளையாட்டுகளில் துளசிமதி பயிற்சி பெறுவதற்கு உதவின. துளசிமதியின் முதல் பயிற்றுநர் அவரது தந்தையே.
2023ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் சர்வதேசப் போட்டியில் உலக நம்பர் 1 வீராங்கனைகளை தோற்கடித்திருந்தார். இரட்டையர் SL3-SU5 பிரிவில் மானசி ஜோஷியுடன் இணைந்து பாராலிம்பிக் சாம்பியன்களாக இருந்த இந்தோனேஷிய இணையை தோற்கடித்தார்.
அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் நிதேஷ் குமாருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
துளசிமதி, 2023ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
‘என்னுடைய கோபத்தை எல்லாம் ஆட்டத்தில் காட்டினேன்’
பாரிஸ் பாராலிம்பிக்ஸ்- 2024 போட்டியில், பேட்மிண்டன் (எஸ்யூ5) பெண்கள் ஒற்றையர் பிரிவின் வெண்கலத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனை காத்திரன் ரோசன்க்ரென்-ஐ எதிர்கொண்ட மனிஷா ராமதாஸ், 21- 12, 21- 8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
போட்டிக்குப் பிறகு பேசிய மனிஷா, “என்னுடைய கோபத்தை எல்லாம் களத்தில் காட்டினேன். எனினும் எனக்கு இது போதாது. அடுத்த நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து எனது பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன்” என்றார்.
தமிழ்நாட்டின் திருவள்ளூரைச் சேர்ந்த 19 வயதான மனிஷா, சிறுவயதில் எர்ப்’ஸ் பால்ஸியால் (Erb’s palsy- நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக கைகள் செயலிழந்து போவது) பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனிஷாவின் வலது கை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
பதினொன்றாம் வயது முதல் மணிஷாவின் விளையாட்டுப் பயணம் தொடங்கியது. அவ்வப்போது ஏற்படும் தீவிர வலிகளையும் தாண்டி விளையாடி வந்த அவர் மாநில பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றது பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. 2022 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
ஜப்பானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022இல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். பேட்மிண்டன் உலக அமைப்பின் ‘2022ஆம் ஆண்டின் சிறந்த பாரா வீராங்கனை’ என்ற பட்டம் வென்றார்.
பாரா அல்லாத பேட்மிண்டன் போட்டிகளில் தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்றுள்ள மனிஷா, வணிகவியல் பட்டப்படிப்பு மாணவியாக இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள துளசிமதி மற்றும் மனிஷாவை பிரமர் நரேந்திர மோதியும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பாராட்டியுள்ளனர்.