• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

‘புதுச்சேரியில் கோயில் நில அபகரிப்பில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு’ – சிபிஐ விசாரணை கோரும் அதிமுக | Link to ruling party in temple land grab: AIADMK insists on referral to CBI probe

Byadmin

Oct 1, 2024


புதுச்சேரி: புதுச்சேரியில் கோயில் நில அபகரிப்பில் ஆளும் கட்சி பிரமுகர்கள் சம்மந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநரும், முதல்வரும் பரிந்துரைக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று (அக்.1) செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் அரசுக்குச் சொந்தமான கோயில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஆற்றுப் படுகை நிலங்கள், கடற்கரையோர பகுதிகள் என பல இடங்கள் பல்வேறு அரசியல் பின்புலம் உள்ளவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. போலி பட்டா, போலி பத்திரம் ஆகியவை தயாரிக்கப்பட்டு அரசு அதிகாரிகளின் உதவியோடு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதனை அரசு கண்டுகொள்ளவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்பு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.தற்போது காரைக்காலில் பார்வதி ஈஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 8 ஏக்கர் இடம் புதுச்சேரியை ஆளும் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய நபர்களால் குறிப்பாக, அமைச்சர் தொகுதியில், அவருக்கு வேண்டப்பட்ட சிலரால் அதிகாரிகளின் துணையோடு போலி பத்திரம் தயாரித்து அதற்காக பல கோடி ரூபாய் பணமும் பெறப்பட்டதாக தெரிகிறது.

மத்திய அரசின் கெயில் நிறுவனம் புதுச்சேரி அரசிடம் காரைக்காலில் இடம் கேட்டதற்கு அரசு சார்பில் 10 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் 2 ஏக்கரை பயன்படுத்திக்கொண்டு மீதி எட்டு ஏக்கரை மீண்டும் அரசிடமே ஒப்படைத்தது. இந்த இடம் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அபகரிக்கப்பட்டுள்ளது.இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு பெண் அதிகாரி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்கு வேண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். முக்கியமான பிரமுகர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தப்பிவிட்டதாக காவல் துறை கூறுகிறது. இது ஏற்புடையது அல்ல.

கோயிலுக்குச் சொந்தமான இடம் அபகரிக்கப்பட்டதில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முதல்வரும், துணைநிலை ஆளுநரும் பரிந்துரை செய்ய வேண்டும். ஏனென்றால், ஆளும்கட்சியினர் சம்பந்தப்பட்டிருப்பதால் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அதிமுக தலைமையின் அனுமதி பெற்று கோயில் இடம் அபகரிப்பின் உண்மைத்தன்மையை விளக்க வேண்டும் என சிபிஐ-க்கு நாங்களே கடிதம் எழுத உள்ளோம்.

புதுச்சேரியில் ஆளும் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் அரசு அனைத்திலும் தோல்வி கண்ட அரசாக உள்ளது. கடந்த காங்கிரஸ் – திமுக ஆட்சியிலும் வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை. இப்போதும் அமைக்கப்படவில்லை. வக்பு வாரியம் அமைக்காததால் அரசின் உதவித் தொகை இஸ்லாமிய மக்களுக்குச் சென்று சேரவில்லை. வக்பு வாரியம் அமைக்கக் கோரி பல முறை முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். ஆனாலும் இதுவரை அமைக்கப்படவில்லை. சிறுபான்மை மக்கள் நலன் காக்கப்பட வேண்டும். வக்பு வாரியம் அமைத்து அதற்கான தலைவரை நியமித்து வாரியத்தை செயல்பட வைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.



By admin