புதுச்சேரி: மாதந்தோறும் 15ம் தேதியன்று பொதுமக்கள் குறைகளை அரசு துறை உயர் அதிகாரிகள் கேட்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மாதந்தோறும் முதல் வேலை நாளில் கைத்தறி அல்லது காதி அணிந்து வரவேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைகேட்டு தீர்வு காணும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் புதுச்சேரியில் அதுபோல் கூட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஹிரண் வெளியிட்ட உத்தரவு:
புதுச்சேரியில் மாதந்தோறும் 15ம் தேதியன்று அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளும் பொதுமக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 15ம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்த பணிநாளில் குறைகளை கேட்டு தீர்வு காணும் கூட்டத்தை நடத்தவேண்டும். அன்றைய நாளில் தங்கள் அறையில் அதிகாரிகள் இருந்து நாள்முழுவதும் மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காணவேண்டும். அந்நாளில் துறைசார் கூட்டங்கள் நடத்தக்கூடாது. ஏதேனும் முக்கியத்துவம் இருந்தால் இதில் விலக்குண்டு.
குறைகளை கணினியில் பதிவு செய்து தனியாக இணையத்தில் பதிவேடு பராமரிக்கவேண்டும். குறைகளை கேட்க போதிய ஏற்பாடுகளை துறையினர் செய்ய வேண்டும். அத்துடன் குறைகளுக்கு தீர்வுகாணும் கால அளவையும் மனுதாரருக்கு குறிப்பிட வேண்டும். மனுதாரருக்கான உரிய பதிலையோ, தீர்வையோ 30 நாட்களுக்குள் அளிப்பது அவசியம்.
கைத்தறி, காதி துணி அணிய உத்தரவு: அதேபோல் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளை பாரம்பரிய காதி அல்லது கைத்தறி துணி அணியும் நாளாக துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரிய உடை, கைத்தறி ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.