• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

பெண் நீதிபதிக்கு தொந்தரவு கொடுத்த வழக்கறிஞருக்கு தடை: பார் கவுன்சில் நடவடிக்கை | Bar Council ban on lawyer who tortures woman judge for allegedly falling in love with her

Byadmin

Oct 30, 2024


சென்னை: பெண் நீதிபதியை காதலிப்பதாகக் கூறி டார்ச்சர் கொடுத்த விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருமணமாகாத பெண் நீதிபதியை பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான பி.எஸ்.அமல்ராஜ் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் நீதிபதி ஒருவருக்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் இ. சிவராஜ்(50) என்பவர் காதலிப்பதாகக்கூறி, அந்த நீதிபதியை தினமும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அந்த நீதிபதி பணியாற்றும் நீதிமன்றத்துக்கு தினமும் சென்று காலை முதல் மாலை வரை அங்கேயே இருந்து அவரை பார்த்துக்கொண்டு இருப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அவ்வப்போது அந்த பெண் நீதிபதியின் நீதித்துறை நடவடிக்கைகளிலும் குறுக்கிட்டுள்ளார். பெண் நீதிபதி தனிப்பட்ட முறையில் கோயிலுக்குச் சென்றாலும் அங்கும் பின்தொடர்ந்து மனஉளைச்சல் கொடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்ற உயர் நீதிமன்ற நீதிபதியிடம் அந்த பெண் நீதிபதி வழக்கறிஞர் சிவராஜ் தனக்கு அளித்து வரும் தொல்லை குறித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞர் சிவராஜை அழைத்து தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறியும், அதன்பிறகும் சிவராஜ் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்துள்ளதால் பெண் நீதிபதிக்கு தொல்லை அளித்து வந்த வழக்கறிஞர் இ.சிவராஜ் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.



By admin