எச்சரிக்கை: இதில் இடம்பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
திருமண நாளன்று, 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது அணிந்திருந்த ஆடைகளை உடுத்தி தம்பதியினர் தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.
இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர்கள், “நாங்கள் செல்கிறோம். நீங்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் சென்ற பிறகு நீங்கள் அழக்கூடாது,” என்று கூறியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரத்தில் அமைந்திருக்கும் மார்ட்டின் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெரில்-ஆனி தம்பதி. வேலையின்மையாலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜெரில் என்று அழைக்கப்படும் டோனி ஆஸ்கர் மோன்கிரிப் (54) அவருடைய மனைவி ஆனி ஜெரில் மோன்கிரிப் (45) ஜனவரி 6ஆம் தேதியன்று தங்களின் 26வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தபோது அணிந்திருந்த ஆடைகளை அணிந்திருந்தனர்.
ஜனவரி 7ஆம் தேதியன்று காலை 5.45 மணி அளவில் தங்கள் உறவினர்கள் பார்க்கும் படியாக வீடியோ ஒன்றைப் பதிவு செய்து அதை அவர்களின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பகிர்ந்தனர். அதன் பிறகு இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
வீடியோவை பார்த்த பிறகு அக்கம் பக்கத்தில் வசித்து வரும் அவரது உறவினர்கள் அவர்களின் வீட்டிற்கு அவசரகதியில் வருகை புரிந்துள்ளனர்.
ஜனவரி 7ஆம் தேதி காலை 7.30 மணி அளவில், இந்த தற்கொலை தொடர்பான தகவல்களைப் பெற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் ஆனி உயிரிழந்துள்ளார். அவரின் உடலை வெள்ளை நிற துணியால் போர்த்தி, கட்டிலில் வைத்துவிட்டு அவரின் உடலுக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார் ஜெரில். பிறகு அவரும் அவருடைய உயிரை மாய்த்துக் கொண்டார்.
ரூ. 75 ஆயிரம் மற்றும் ஒரு பத்திரத்தை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் எழுதிய கடிதத்தின்படி, அவர்கள் இருவரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக ரூ.75 ஆயிரத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
அந்த பத்திரத்தில், அவர்கள் வாழ்ந்து வந்த சொந்த வீட்டை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளனர். திருமண நாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு இருவரும் இறந்த செய்தி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தம்பதி தற்கொலை முடிவை எடுக்க என்ன காரணம் ?
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பிபிசி மராத்தியிடம் பேசிய மூத்த காவல்துறை அதிகாரி அருண் சிர்சாகர், “அவர்களின் கடிதத்தில் இந்த முடிவுக்கான காரணத்தை அந்தத் தம்பதியினர் குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களது விருப்பத்தின் பேரில், எந்தவித அழுத்தமும் இன்றி இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்” என்று கூறினார்.
ஆனால் காவல்துறை விசாரணையின்போது அவர்களுக்குத் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் குழந்தைகள் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்ததாகக் கண்டறிந்துள்ளனர்.
ஓர் ஆண்டுக்கு முன்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆனியின் கர்ப்பப்பை நீக்கப்பட்டது. அதன் பிறகு அவருடைய உடல்நிலை மேலும் மோசமடையத் துவங்கியது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெரில் அருகே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆனி வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார். ஆனால் சில ஆண்டுகளாக ஜெரில் வேலையின்றி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உங்களுக்கு நெருக்கமான நபர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்
மனநலம் குறித்து மனநல மருத்துவர் ஆம்பரிஷ் தர்மாதிகாரி பேசுகையில், “உங்களுக்கு நெருக்கமான நபர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கையின்றிப் பேசுவது, மரணங்கள் குறித்துப் பேசுவது, தனிமையாக இருப்பது போன்றவை அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதற்கான சமிக்ஞைகள். ஆனால் அவர்கள் அனைவரும் இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்,” என்று கூறுகிறார்.
இதுபோன்ற எண்ணங்கள் தோன்றும்போது என்ன செய்ய வேண்டும் என்றும் மனநல ஆலோசகர்கள் சில முக்கியத் தகவல்களைத் தெரிவிக்கின்றனர். மும்பையின் கே.இ.எம். மருத்துவமனை, மன நல ஆலோசனைக்காக ஹிட்குஜ் என்ற உதவி மையத்தை நடத்தி வருகிறது.
அதன் துறைத் தலைவராக இருக்கும் மருத்துவர் அஜிதா நாயக், “ஒருவர் அவருடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால் அவர்களுக்கு முதலில் மனநல ஆலோசனை வழங்கும் உதவி மையத்தை நாட வேண்டும். நேரடியாக அப்போது மனநல மருத்துவரை அனுகுவது கடினமாக இருக்கலாம். எனவே முதலில் உதவி மையத்தை நாடுவது நல்லது,” என்று அவர் கூறினார்.
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019