• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

மணிப்பூர் வன்முறைக்கு இதுவரை 175 பேர் பலி; 1,108 பேர் காயம்| 175 killed in Manipur violence so far; 1,108 people were injured

Byadmin

Sep 16, 2023


இம்பால்: மணிப்பூரில் கடந்த நான்கு மாதங்களாக நடந்த வன்முறையில் இதுவரை, 175 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, மே 3ல் நடந்த பேரணியின் போது, மெய்டி மற்றும் கூகி பழங்குடியினர் சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதற்கு அடுத்த நாள், கூகி பிரிவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, மாநிலத்தில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், நான்கு மாதங்களாக நடந்த கலவரத்தில் இதுவரை, 175 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மணிப்பூர் மாநில ஐ.ஜி., முவியா நேற்று கூறியதாவது: கடந்த மே 4ம் தேதி முதல் நடந்த கலவரங்களில், மாநிலம் முழுதும் இதுவரை 175 பேர் பலியாகியுள்ளனர்; 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் ஒன்பது பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. 79 பேரின் உடல்கள் உரிமை கோரப்பட்ட நிலையில், எஞ்சியவர்களின் உடல்கள் இம்பால், சுராசந்த்பூர் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. கலவரத்தில், 386 வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன; 5,172 தீ வைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.

வன்முறை தொடர்பாக, 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரக்காரர்கள் ஏராளமான ஆயுதங்களை கொள்ளையடித்த நிலையில், அவர்களிடம் இருந்து 1,359 துப்பாக்கிகள், 15,050 வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, பிஷ்ணுபூர் மாவட்டத்தின் பூகாக்சாவ் இகாய் முதல், சுராசந்த்பூர் மாவட்டத்தின் காங்வாய் வரையிலான பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரிடம் வலியுறுத்தல்


புதுடில்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த மெய்டி குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், ‘கோகோமி’ எனப்படும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு, மாநிலத்தில் ஒருதலை பட்சமாக செயல்படும் அசாம் ரைபிள்ஸ் படையினரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். போதைப் பொருள் -பயங்கரவாதம், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் அவர்களை அடையாளம் காண்பது மற்றும் செயல்பாட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, அவர்கள் மத்திய அமைச்சரிடம் விவாதித்தாக அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

By admin