மது அருந்தும்போது தகராறு… தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை

(கொலை செய்யப்பட்ட நம கோடீஸ்வரன்)

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவர் அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நம கோடீஸ்வரன். பிளம்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த கோடீஸ்வரன் சென்றுள்ளார். பின்பு மது அருந்தும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நண்பர்கள் சேர்ந்து நம கோடீஸ்வரன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

அதிகாலையில் ரோந்து பணியில் சென்ற காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இருவரையும் பிடித்து விசாரித்தபோது தாங்கள் மது அருந்தும்போது நண்பரை கொலைசெய்து விட்டோம் என்று கூறியுள்ளனர். உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து அவருடன் மது அருந்திய ஆறு பேரை பிடித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஏதேனும் முன்விரோதமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.