• Sat. Jan 28th, 2023

24×7 Live News

Apdin News

மூடு விழா காணும் முதல்வர் துவக்கிய திட்டங்கள்| Projects inaugurated by the Chief Minister to witness the closing ceremony

Byadmin

Jan 22, 2023


”முதல்வர் துவக்கி வச்ச திட்டங்கள் எல்லாம் மூடுவிழா காணுது பா…” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

”எந்த ஊருலங்க…” எனக் கேட்டார், அந்தோணிசாமி.

”கோவையில, 200 கோடி ரூபாயில, செம்மொழி பூங்கா அமைக்கப்படும்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே முதல்வர் அறிவிச்சாரு… அதுக்கு இன்னும் டெண்டரே விடலை பா…

”அதே மாதிரி, வாலாங்குளத்துல படகு சவாரியை முதல்வர் துவக்கி வச்சாரு… அங்க, ஒருத்தருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறாங்க… ஊட்டியில கூட இந்த கட்டணம் இல்லை… இதனால, படகு சவாரி காத்தாடுது பா…

latest tamil news

”சங்கனுார் பள்ளத்தை துார்வாரி அரைவட்ட சாலை அமைக்கிற திட்டத்தை பாதியில கைவிட்டு, ஒதுக்கிய நிதியை, மதுரைக்கு மடை மாத்திட்டாங்க… ஐந்து இணைப்பு சாலைகள் உருவாக்க, 144 கோடி ரூபாய் ஒதுக்குறதா, 2021 செப்டம்பர்ல முதல்வர் அறிவிச்சாரு… ஒண்ணே கால் வருஷம் ஓடியும், அதுக்கு இன்னும் அரசாணையே வெளியிடலை பா…

”இதனால, ‘சட்டசபை தேர்தல்ல ஒரு தொகுதியில கூட ஜெயிக்க விடாம, தி.மு.க.,வை தோற்கடிச்சதால, நம்ம மாவட்டத்தை ஆளுங்கட்சியினர் பழிவாங்குறாங்க’ன்னு அ.தி.மு.க., வினர் ஊருக்கு ஊர் பேசிட்டு இருக்காங்க பா…” என்றார் அன்வர்பாய்.

”நாட்டு வெடிகுண்டு தயாரிப்பை தடுக்காம வேடிக்கை பார்க்காவ வே…” என்றார், அண்ணாச்சி.

”அடப்பாவமே… எங்க ஓய்…” எனக் கேட்டார், குப்பண்ணா.

”ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியில, 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடிசை போட்டு தங்கியிருக்காவ… இதுல பலர், வெடிமருந்துகளை வாங்கிட்டு வந்து, தங்களது வீடுகள்லயே ரகசியமா நாட்டு வெடிகுண்டுகளை தயார் பண்ணுதாவ வே…

”விளை நிலங்களை நாசம் செய்ற பன்றிகளை கொல்றதுக்காக, விவசாயிகள் வந்து இந்த வெடிகுண்டுகளை வாங்கிட்டு போறாவ… இது போலீசாருக்கு தெரிஞ்சாலும், மாமூல் வாங்கிட்டு கண்டுக்காம இருக்காவ வே…

”போன வாரம், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிறப்ப, அது வெடிச்சு ரெண்டு பேர் இறந்து போயிட்டாங்கல்லா… இதைவிட பெருசா விபத்து நடக்கிறதுக்கு முன்னாடி, போலீசார் முழிச்சுக்கிட்டா நல்லது வே…” என்றார், அண்ணாச்சி.

”முதல்வரிடம் முறையிட அமைச்சர்கள் முடிவு பண்ணியிருக்கா ஓய்…” என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்…

”அரசு துறைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டறது, பராமரிக்கறது எல்லாத்தையும், பொதுப்பணித் துறை தான் செய்யறது… இதுக்கான கான்ட்ராக்டர் தேர்வுக்காக, பொதுப்பணித் துறை அலுவலகத்துல பெட்டி வச்சிருப்பா ஓய்…

”அதுல போடற விண்ணப்பங்களை பரிசீலனை பண்ணி, கான்ட்ராக்டரை தேர்வு பண்ணுவா… எல்லாமே கண் துடைப்பு தான்… அந்தந்த துறையின் அமைச்சர்கள் சிபாரிசுலயும், மேலிடத்துக்கு வேண்டிய கான்ட்ராக்டர்களுக்கு மட்டும் தான் பணிகளை ஒதுக்குவா ஓய்…

”இப்ப, ‘ஆன்லைன்’ வழியாகவே டெண்டர் பணிகளை மேற்கொள்ளணும்னு மத்திய அரசு உத்தரவு போட்டிருக்கு… ‘இந்த வருஷ கடைசிக்குள்ள, எல்லா டெண்டர்களையும் ஆன்லைன்லயே முடிவு செய்யணும்’னும் உத்தரவு வந்துடுத்து ஓய்…

”இதனால, தங்களது வருவாய் குறையும்… தேர்தல் செலவுகளுக்கு பணம் திரட்டுறது தடைபடும்னு அமைச்சர்கள் பயப்படறா… இது சம்பந்தமா, முதல்வரிடம் முறையிட, சீனியர்கள் அமைச்சர்கள் பலர் தயாராகிட்டு இருக்கா ஓய்…” என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, பெரியவர்கள் புறப்பட்டனர்.

”சிறப்பு தணிக்கைக்கு போனவா முழி பிதுங்கி நிக்கறா ஓய்…” என்றபடியே, ‘பில்டர்’ காபியுடன் வந்தமர்ந்தார் குப்பண்ணா.

”எந்த துறையில பா…” எனக் கேட்டார், அன்வர்பாய்.

”பதிவுத் துறை அதிகாரிகள் ஆசியோட, மோசடி பத்திரப்பதிவு, அங்கீகாரமில்லாத மனைப்பதிவு அதிகமா நடக்கறதோல்லியோ… இது சம்பந்தமா, பதிவுத் துறையை ஐகோர்ட் கடுமையா கண்டிச்சது ஓய்…

”இதனால சென்னை, கோவை, நெல்லை மண்டலங்கள்ல, 2021 – 22ல பதிவான பத்திரங்களை, சிறப்பு தணிக்கை மூலமா ஆய்வு செஞ்சுண்டு இருக்கா…

”சென்னை வேளச்சேரி சார் – பதிவாளர் ஆபீசுக்கு சிறப்பு தணிக்கைக்காக போன அதிகாரிகளை, அங்கிருந்தவா அதிர வச்சுட்டா ஓய்… ‘இந்த பதிவாளர் இடத்தை பிடிக்க, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கோம்… போட்ட பணத்தை எடுக்கணும்னா, நீக்கு போக்கா தான் இருந்தாகணும்… இதுல, சிறப்பு தணிக்கை, அது இதுன்னு நீங்க வேற வந்து நின்னா நாங்க என்ன தான் பண்றது’ன்னு கேள்வி கேட்டு திக்கமுக்காட செஞ்சுட்டா…

”எல்லா ஆபீஸ்லயும் இப்படி, ‘ஓப்பனா’ புலம்பினா, நாங்க எங்க போய் தான் தணிக்கை செய்யறதுன்னு அதிகாரிகள் அலுத்துக்கறா ஓய்…” என்றார், குப்பண்ணா.

”ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிருப்தியில இருக்காவ வே…” என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

”என்ன காரணமுங்க…” எனக் கேட்டார், அந்தோணிசாமி.

”முதல்வர் ஸ்டாலினின் 4வது செயலரா இருந்த அனு ஜார்ஜ், 75 நாட்கள், ‘லீவ்’ல போயிருக்காங்க… அந்த இடத்துக்கு தற்காலிகமா வேற அதிகாரியை நியமிக்கல வே…

”அதுக்கு பதிலா, முதல்வரின் மற்ற மூணு செயலர்களும் சேர்ந்து, அவங்க வேலையை பகிர்ந்துக்கிடுதாவ… புதுசா ஒரு அதிகாரியை முதல்வரிடம் நெருங்கவிடக் கூடாதுங்கிறது தான் இதுக்கு காரணம்… இது, மத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு வே…” என்றார், அண்ணாச்சி.

latest tamil news

”என்ன தான் இருந்தாலும் பழைய பாசம் விடாதுன்னு சொல்றாங்க பா…” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்…

”ஈரோடு மாவட்டத்துல, 71 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்து, ஆட்கள் தேர்வும் முடிஞ்சிடுச்சு… இதுல, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கொடுத்த பட்டியல்ல சிலர் மட்டும் தான் தேர்வாகி இருக்காங்க பா…

”இது சம்பந்தமா, முத்துசாமியிடம் தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கேள்வி கேட்டாங்க… அதுக்கு, ‘கலெக்டர் கிருஷ்ணன் உண்ணியிடம் நான் கொடுத்த பட்டியல்ல சிலரை தான் அவர், ‘செலக்ட்’ செஞ்சிருக்காரு… மத்தவங்க எல்லாம், வருவாய்த் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கொடுத்த பட்டியல்’னு சொல்லி தப்பிச்சிட்டாரு பா…

”ஆனா, விஷயம் தெரிஞ்ச உடன்பிறப்புகள் வேற மாதிரி சொல்றாங்க… அதாவது, ‘கட்சிக்காரங்க கொடுத்த பட்டியல்ல, சில பெயர்களை மட்டும் கலெக்டர் மூலமா அமைச்சர் முத்துசாமி, ‘ஓகே’ செஞ்சாரு… மத்தவங்க எல்லாம், அமைச்சரின் பழைய பாசத்துக்குரிய அ.தி.மு.க., நிர்வாகிகள் வழங்கிய பட்டியல்… அவங்களுக்கு வேலை குடுத்துட்டு, வருவாய்த் துறை அமைச்சர் மேல பழியை போடுறாரு’ன்னு சொல்றாங்க பா…” என முடித்தார், அன்வர்பாய்.

”ஓ… இதைத்தான் பழைய பாசம்னு சொல்றாளா…” என சிரித்த படி அனைவரும் புறப்பட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்